லேசர் அடுப்பில் வேக வைத்த கோழி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

லேசர் அடுப்பில் வேக வைத்த கோழி!

உணவுப் பண்டங்களை முப்பரிமாண இயந்திரத்தில் அச்சிடும் முயற்சி பல ஆய்வகங்களில் வெற்றிகண்டு வருகிறது. பண்டங்களை, பல வண்ணங்களில், வடிவங்களில் துல்லியமாக அச்சிட முடிந்தாலும், அவற்றை சரியான பதத்தில் சமைப்பது மட்டும் பெரும் சவாலாக இருந்து வருகிறது.

அமெரிக்காவிலுள்ள, கொலம்பியா பல்கலைக்கழகத்தில், கிரியேட்டிவ் மெசின்ஸ் லேப் உள்ளது. இங்கு தோசை, கேக், இறைச்சி என, பலவித உணவுகளை முப்பரிமாண அச்சியந்திரத்தில் அச்சிட்டு எடுக்கும் ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது. அண்மையில், இங்கு நீல லேசர் கதிர் மற்றும் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு, கோழி இறைச்சிக் கைமாவை வேக வைக்கும் முயற்சி நடந்தது. முப்பரிமாண அச்சியந்திரம், கோழிக் கைமாவை ஒரு கூம்பு வழியே பிழிந்து, கோழி நெஞ்சுக்கறி வடிவில் துல்லியமாக செய்து காட்டியது.பின், அதன் மீது லேசர் மற்றும் அகச்சிவப்புக் கதிர்கள் சில நிமிடங்கள் பாய்ச்சப்பட்டன. மொத்த இறைச்சியும் உருமாறாமல் வெந்து, அசல் கோழிக்கறி சமையல் மணம் வீசியது.

சில தன்னார்வலர்களுக்கு வழக்கமான முறையில் சமைத்த கோழிக்கறியையும், லேசரில் வேக வைத்த கறியையும் தந்து கருத்துக் கேட்டனர்.

கண்களைக் கட்டியபடி அவர்கள் இரு உணவையும் உண்டனர். இறுதியில், அனைவருமே அடுப்பில் வெந்த கறியைவிட, லேசரில் வேகவைத்த கோழி நெஞ்சுக்கறியைத் தான் சுவையாக, மணமாக இருப்பதாக தேர்ந்தெடுத்தனர்.

இதில் கூடுதல் பலனாக, அடுப்பில் வெந்த கறி சற்று அதிகமாகவே சுருங்குவது தெரியவந்தது. லேசரில் வேகவைக்கும்போது இறைச்சி அவ்வளவாக சுருங்காததோடு, ஈரப்ப தமும் குறைந்துவிடாமல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

முப்பரிமாண உணவு அச்சியந்திரம் தள்ளுவண்டிகளில் வைத்து விற்கப்படும் காலம் விரைவில் வரத்தான்போகிறது.

No comments:

Post a Comment