வேளாண் சட்டங்களில் இருந்து கிடைத்த பாடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

வேளாண் சட்டங்களில் இருந்து கிடைத்த பாடம்

பி.டி.டி. ஆசாரி

மூன்று புதிய வேளாண் சட்டங்களை   நிறை வேற்றியது பற்றிய ஒன்றிய அரசின் உண்மையான நோக்கம் பற்றி எடுத்துக் கூறி விவசாய சமூகத் தினரின் ஒரு பிரிவினரை மனநிறைவடையச் செய்ய முடியாமல் போனதற்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டது போன்ற நிகழ்ச்சி ஒன்று இதற்கு முன் எப்போதுமே நடந்ததில்லை.  ஆனால், விவசாயிகளின் ஒரு பிரிவினரை மட்டும் மனநிறைவடையச் செய்ய இயலவில்லை  என்று கூறும்போது, நாட்டு மக்களிடம்  ஏன் அவர் மன்னிப்பு கேட்டார் என்பது தெளிவாக விளங்கவில்லை. அப்படியென்றால், அந்த மன் னிப்பு, மூன்று வேளாண் சட்டங்களை இயற்றிய தற்காகவோ, விவசாயிகளுக்கு ஏராளமான துன்பங்களை விளைவித்தற்காகவோ கேட்கப் பட்டதல்ல. எப்படி இருந்தாலும், விவசாயிகள் அரசின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள்;  அதனால்தான் அந்த சட்டங்கள் திரும்பப் பெறாதவரை விவசாயிகள் போராட் டத்தைக் கைவிட்டுவிட்டு தங்கள் பண்ணை வீடுகளுக்கு செல்லத் தயாராக இருக்கவில்லை. இந்த சட்டங்களை அரசு திரும்பப் பெறப் போகிறது என்று நாட்டுக்கு இப்போது பிரதமர் அறிவித்துவிட்டதையடுத்து, தங்களது போராட் டம் வெற்றி பெற்றது பற்றி விவசாயிகள் பெரு மகிழ்ச்சி கொண்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வெற்றி உண்மையில் இந்தியாவை ஒரு புதிய நிலைக்கு, அரசியல் அல்லாத இயக்கங்கள் புதிய மறுமலர்ச்சி பெற்று, ஒரு குறிப்பிட்ட அளவிலான தாங்கும் சக்தியைக் கொண்டுள்ள ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றுள் ளது. இன்னமும் உற்சாகமோ அல்லது ஆர்வமோ அளிக்காமல் உள்ள இந்திய அரசியலில் இது எந்த விதமான இறுதி மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது என்பதை நாம் அறிந்திருக்க வில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவானதாக ஆகிவிட்டது.  மிகுந்த உறுதியுடன் ஒரு நீண்ட கால வன்முறையற்ற அமைதியான நீண்டதொரு போராட்டமும், ஆற்றல் மிகுந்ததொரு அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விட்டுக் கொடுத்திருப்பதும் இந்திய ஜனநாயகத்துக்கு நன்மையும், வலிமையும் சேர்ப்பதேயாகும்.

வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்ட வழிகளும் அரசின் நோக்கமும்

மூன்று புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப் பட்ட வழிகள் அரசின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுவதாக இருக்கின்றன. இவை முதலில் அவசர சட்டங்களாகக் கொண்டு வரப்பட்டது மிகுந்த குழப்பத்தை அளிப்பதாக இருந்தது. முதலாவதாக,  விவசாயிகள் மீது காலம் கடந்த தொரு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்த இயன்ற இந்த சட்டங்களை, விவசாயிகளை நம்பிக்கையில் எடுத்துக் கொள்ளாமல், கட்டாயமாக புகுத்த எண்ணியது முறையற்றதும், பெரும் அறிவு டைமை அற்றதுமாகும்.

நெருக்கடி நிலை போன்றதொரு இயல்பான சூழ்நிலையிலும், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நீண்ட காலத்திற்குப் பிறகே கூட இருக் கும் நிலையிலும்,  மிகமிக அவசரமாகத் தேவைப் படும் ஒரு விவகாரம் பற்றி அவசர சட்டம் ஒன்றை, அரசமைப்பு சட்ட 123 ஆவது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிறப்பிப்பதற்கு குடியரசுத் தலைவரால் முடியும். விவசாயத் துறையில் தீவிரமான மாறுதல்களை ஏற்படுத்த இயன்றதும், வெகு முக்கியமான வழி களில் விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதிக்க கூடியவை. இந்த வேளாண் சட்டங்கள் அவசர சட்டம் மூலம் உடனடியாக சட்டமாக இயற்றத் தேவையான அவசரத் தேவை எதனை யும்   அவை பெற்றிருக்கவில்லை. நாடாளுமன்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி அறிந்திராத யாரோ ஒருவர், நிலைக் குழுக்களின் பரிசீலனையைத் தவிர்ப்பதற்காக இந்த சட்டங் களை அவசர சட்டங்களாக பிறப்பிப்பதற்கு அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கலாம். அவசர சட்டங்களை முறையான சட்டங்களாக மாற்றுவதற்கு கொண்டு வரப்படும் மசோதாக் களை நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு கொண்டு வரப்படமாட்டாது என்றோ கொண்டு வர முடியாது என்றோ கருதுவது ஒரு தவறான கருத்தாகும். அது போன்ற கட்டுப்பாடுகள் ஏது மில்லை. ஒரு பண மசோதா அல்லாத இதர மசோ தாக்களை  நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு அனுப்பும் அதிகாரத்தை மக்களவைத் தலைவர் பெற்றிருக்கின்றார்.

மிகுந்த துணிவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான நடவடிக்கை

ஒரு விரிவான பரிசீலனைக்காக இந்த மூன்று வேளாண் சட்ட மசோதாக்களும், விவசாயத்துக் கான நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப் பப்பட்டிருக்க வேண்டும். இவை பற்றி விவசாயி களுடன் இந்த குழு ஒருங்கிணைந்த முறையில் பேச்சு வார்த்தைகளையும், விவாதங்களையும் மேற்கொண்டிருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால்,  நாடாளுமன்றத்தின் முன்னும், இந்த குழுவின் முன்னும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொள்வதற்கான வாய்ப்பு  விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கும்.  உண்மை யைக் கூறுவதானால், அவசர சட்டங்கள் பிறப்பிக் கப்படும் முன் எந்த நிலையிலும் தங்களை அரசு கலந்து ஆலோசிக்க வில்லை என்பதே அவர் களது முக்கியமான குற்றச் சாட்டாகும். விவசாயி களை எந்த விதத்திலும் கலந்தாலோசிக்காமல், விவசாயத் துறையில்  பெரும்  மாற்றங்களைக் கொண்ட அவசர சட்டங்களை பிறப்பிப்பதை மிகுந்த துணிவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆபத் தான நடவடிக்கை என்றுதான் கூறமுடியும்.

அமைதியானதொரு முறையில் சிந்தித்து, விவாதித்து பிரச்சினைகளுக்கான முடி வுகளையும், தீர்வுகளையும் மேற்கொள்வதற்கான தொரு முறையில் நாடாளுமன்றத்தின் நடை முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரச்சினை களின்சூட்டைநிலைக் குழுக்கள் ஏற்றுக் கொண்டு, அவை பற்றி அறிவு முதிர்ச்சி அடைந்த தொரு முறையில் அந்தப் பிரச்சினையுடன் தொடர்புடைய அனைவர்கூறுவதையும் பொறு மையாகக் கேட்டு பிரச்சினையைக் கையாளும். நாடாளுமன்றத்துக்கும் அதன் நடைமுறைகளுக் கும் அரசாட்சி செய்பவர்கள்தான் தேவையே அன்றி, அதை ஒதுக்கிவிட்டு செல்பவர்கள் தேவை இல்லை.

நாடாளுமன்ற அவையின் பேரறிவு விலை மதிப்பில்லாதது

ஆற்றல் மிகுந்தவர்களாகவும், அகம்பாவம் கொண்டவர்களாகவும் இருந்த போதிலும், இங் கிலாந்து நாட்டில் 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்த அரசர்கள், ஆட்சி நடத்துவதற்கு பாமர மக்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற தேவையை நன்கு உணர்ந்திருந்தனர். பல போர்க்களங்களுக்கும் சண்டைகளுக்கும் பின் அவர்கள் பேரறிவு படைத்தவர்களாக ஆயினர் என்பதே இதன் காரணம். இத்தகைய கலந்துரை யாடல்கள் மூலமாகத்தான் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றம் உருவானது. தாங்கள் எவ்வளவு தான் ஆற்றல் மிகுந்தவர்களாக இருக்கிறோம் என்று அரசுகள் உணர்ந்த போதும்,  நாடாளு மன்றத்தையும் அதன் காலத்தால் நிலை நிறுத்தப் பட்ட நடைமுறையையும் கலந்தாலோசிப்பது என்ற தெளிந்த மதியும் சமூக நாகரிகமும் அரசுகளுக்கு இன்றியமையாத தேவைகளாகும். நாடாளுமன்ற அவைகளின் ஒட்டுமொத்த பேர றிவு விலை மதிக்க முடியாததொரு பொக்கிஷ மாகும். அப்படியிருக்கும்போது நாடாளுமன்றத் துக்கு முன் வரும் மிக முக்கியமான மசோதாக்கள் ஏன் நாடாளுமன்றக் குழுக்களுக்கு பரிசீலனைக் காக  அனுப்பப் படுவதில்லை என்பது மிகுந்த வியப்பை அளிப்பதாகவே இருக்கிறது. நாடாளு மன்ற குழுக்களால் பரிசீலிக்கப்படும் மசோதாக் கள் மேலான சட்டங்களை இயற்றுவதற்கு நமக்கு உதவி இருக்கிறது என்பதை நமது நூறாண்டு அனுபவம் காட்டுகிறது. வேளாண் சட்டங்கள் பற்றிய இந்த வழக்கு இந்த அரசுக்கோ அல்லது வேறு எந்தவொரு அரசுக்கோ ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத் தருவதாக இருக்கிறது.

தொடர்ந்து தவறான பாதையில் அரசு அடி யெடுத்துச் சென்றதுடன், தவிர்க்க இயன்ற பெருந் துன்பங்களை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. சாதாரணமாகவே, விவசாயிகள் தங்கள் பண்ணை வீடுகளை விட்டுவிட்டு போராடு வதற்கே நூற்றுக் கணக்கான மைல்கள் பயணம் செய்வது வழக்கமில்லை. கோடையின் வெம்மை யாலும், பருவக் காற்று, மழையாலும், ஏறக்குறைய 14 மாத காலம் துன்பங்களால் பாதிக்கப்பட்டவர் களில்  700க்கும் மேற்பட்ட அவர்களது சகோத ரர்கள் உயிரிழக்கவும் செய்தனர். பாதைத் தடை களை ஏற்படுத்தியதற்கும் ,போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்ததற்கும் மாறாக, இந்த பிரச்சினையில் நாடாளுமன்றம் தலையிடுவதற்கு அனுமதித்திருந்தால், அரசின் தலைவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டி நேர்ந் திராது. எப்படி இருந்தாலும்,  இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு அரசு முடிவு செய்துவிட்ட படியால், அது பற்றி எந்தவிதமான அரசியல் கணக்குகள் இருந்த போதிலும், இந்த முடிவு பரவலாக மக்களால்  வரவேற்கப்படும் என்பது உறுதி.

இவையெல்லாம் தந்திரமான நடவடிக்கைகளாகவும் இருக்கக் கூடும்

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும். அரசு செயல் படுவதற்காக காத்திருந்து கண்காணிக்கப் போவ தாக விவசாயிகள் முடிவு செய்திருப்பதாக தோன் றுவதே இதன் காரணம். நவம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று கூட இருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது,  நாடாளு மன்றத்தில் இந்த சட்டங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவதை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பார்கள். இந்த விவசாய சட்டங்கள் தவறானவை என்றோ, விவசாயிகளுக்கு மிகுந்த துன்பங்களை அளிக்கின்றன  என்றோ இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கவில்லை என்பதால், அரசின் முடிவு பற்றி போராடும் விவ சாயிகள் தெரிவித்த கருத்துகளில் சந்தேகத்தின் சாயலைக் காணமுடிகிறது. உண்மையைக் கூறுவ தானால்,  விவசாயத் துறையை சீர்திருத்துவற்கு இந்த சட்டங்கள் தேவை என்று அரசு கருதுகிறது. வெளிப்படையாக பிரதமர் மன்னிப்புக் கேட்டது அந்த நிலைப்பாட்டை மாற்றிவிடவில்லை. சில குறிப்பிட்ட சிந்து கங்கை சமவெளி பகுதிகளில் தங்களுக்கு எதிராக உருவாகி வரும் அரசியல் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்துவற்கான ஓர் உத்தியாகவும் கூட இந்த சட்டங்களை திரும்பப் பெறும் நடவடிக்கை இருக்கக் கூடும். திருத்தப் பட்ட சட்டங்கள் எதிர்காலத்தில் சில குறிப்பிட்ட மாற்றங்களுடன் மீண்டும் கொண்டு வரப்பட இயலும். அதற்கு சட்டப்படியான தடைகள் ஏதும் இல்லை. விவசாயத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்குவது என்ற அரசின் அணுகுமுறை கைவிடப்படவில்லை.

அனைத்து சட்ட மசோதாக்களும் நாடாளு மன்றத்தினால் முறையாக பரிசீலிக்கப்படுவதுதான் அடிப்படை தேச நலன்களை, துறை நலன்கள் சீரழித்துவிடாமல் இருப்பதற்கான மிகச் சிறந்த உத்தரவாதமாகும்.  விவசாயிகளின் பாதுகாப்பு என்பது தேசிய நலன்களில் மிகவும் இன்றியமை யாத ஒரு பகுதியாகும். எனவே,  விவசாயத்துடன் தொடர்புடைய  மசோதாக்கள் எதிர் காலத்தில் கொண்டு வரப்படும்போது, ஒரு சமமான அணுகு முறை உருவாவதற்காக நாடாளுமன்ற நடை முறைகளைத் தவறாமல் பின்பற்றுவது மிகமிக முக்கியமான தேவையாகும். இந்த வேளாண் சட்டங்கள், வழக்கமாக செய்யப்படுவது போல,  நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கோ அல்லது இரு அவைகளின் கூட்டுக் குழுவிற்கோ பரிசீல னைக்கு அனுப்பப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தவறாக எடுத்து வைக்கப்பட்ட அடி

உண்மையைக் கூறுவதானால்,  இப்போ தெல்லாம் மிகமிக அரிதாகத்தான் மசோதாக்கள்  நாடாளுமன்றக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகின்றன என்பதை கிடைத்திருக்கும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. குழுக்களுக்கு மசோதாக்களை பரிசீலனைக்கு அனுப்புவதற் கான யுக்தாசார உரிமை அவைத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த வேளாண் மசோதாக்களை குழுவிற்கு அனுப்பாமல் இருந்ததற்கான முடிவு எந்த விதக் காரணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்ப தைத் தெரிவிக்கும்  அவைத்தலைவர்களின் குறிப்புகள் எவையும்  காணப்படவில்லை.

முறைப்படியாக மசோதாக்கள் நாடாளுமன்றக் குழுக்களால் பரிசீலனை செய்யப்படுவது மேலான சட்டங்களை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்பதால், பொதுமக்களின் நலன்க ளைக் கருத்தில் கொண்டு , ஒரு சில வழக்குகள் தவிர்த்து, அனைத்து மசோதாக்களையும் அவைத் தலைவர்கள் குழுக்களின் விரிவான பரிசீலனைக்கு அனுப்பவேண்டும். குழுக்கள் அனைத்து முக்கிய மசோதாக்களையும் பரி சீலனை செய்யவேண்டும் என்ற நோக்கம் மகிழ் வுடனான சொற்களில் சம்பந்தப்பட்ட விதிகளில் கூறப் பட்டிருக்கவில்லை. வேளாண் சட்டங்கள் என்னும் பேரச்சத்தைத் தரும் அரசின் அனுபவ வெளிச்சத்தில்,  சட்ட மசோதாக்களை பரிசீல னைக்காக குழுக்களுக்கு அனுப்புவதில்லை  என்ற தற்போதைய வழக்கம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அண்மையில் நடந் தேறிய நாடாளுமன்ற, சட்டமன்ற அவைத் தலை வர்களின் மாநாட்டில், குழு நடைமுறைகளை பலப்படுத்துவது பற்றி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசியுள்ளார். அவ்வாறு பலப்படுத்தும் வழிகளில் ஒன்றுதான், அனைத்து முக்கியமான மசோதாக்களையும் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்புவதாகும்.

நாடாளுமன்ற நடைமுறைகளை அரசு பின் பற்றாத காரணத்தால், நீண்டதொரு போராட் டத்தை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டியதா யிற்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, ஒரு ஜனநாயக வழியில் மட்டும்தான் செயல்பட முடியும். அரசு தன்னிச்சையாக செயல்படுவதற் கான வேறு வழிகள் இல்லை. டில்லி நகரின் எல்லையில் 14 மாத காலத்துக்கு உட்கார்ந்து, வெய்யிலையும், மழையையும், குளிரையும், சாவுக் களையும் துணிவுடன் எதிர்கொண்டு  விவசாயிகள், மிகமிகச் சிறந்த ஜனநாயக வழியில்தான் போராடியிருக்கின்றனர் என்பதை அவர்கள் மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்து உள்ளனர்.

நன்றி: 'தி இந்து' 22.11.2021

 தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment