தமிழர் தலைவர் வாழ்கவே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

தமிழர் தலைவர் வாழ்கவே!

"தந்தை பெரியார் அவர்கள் திருச்சி மாநகரில் உருவாக்கிய கல்வி வளாகத்தைக் கட்டிக் காத்து, வளர்த்து வருவதுடன், தஞ்சைக்கு அருகில் வல்லம் என்னுமிடத்தில், மகளிர் பொறியி யல் கல்லூரி உள்பட, பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் ஒரு புதிய கல்வி வளாகத்தை உருவாக்கி, இன்று அதனை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமாகவும் உயர்த்தியுள்ள திரு. வீரமணி அவர்கள், தந்தை பெரியார் எண்ணிய எண்ணங்களை யெல்லாம் நன்கு அறிந்தவர். பெரியார் எண்ணியதைச் செயல் படுத்துவதில் பேரார்வம் கொண்டவர். அதனால்தான், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை நான் தொடங்கி வைத்து உரையாற்றிய-பொழுது,

என்னுடைய வயதைவிட ஓரிரு வயது, மூன்று, நான்கு வயது வீரமணி அவர்கள் இளையவராக இருக்கலாம். ஆனால், அவர் எங்களைவிட அதிகமாக பெரியாரிடத்திலே பக்கத்திலே இருந்து பழகியவர். ஆனால், நாங்கள் பெரியாரிடத் திலே கற்பதற்காகப் பெற்றிருந்த வாய்ப்பைவிட அதிக வாய்ப்பைப் பெற்றவர் அவர். எந்த ஒரு பிரச்சினையும், அது கடுகளவு பிரச்சினையாக இருந்தாலும், மலை போன்ற பிரச்சினையாக இருந்தாலும், கடல் அளவு பிரச்சினையாக இருந்தாலும், உமி அளவான பிரச் சினையாக இருந்தாலும், அதைப்பற்றி அருகிருந்து விவாதிக்கின்ற அந்த அருமையான வாய்ப்பை எங்களைவிட அதிகக் காலம் - இன்னும் சொல்லப் போனால், அறிஞர் அண்ணாவைவிட அதிகக் காலம் அந்த வாய்ப்பை, அவர் பெற்றிருந்த காரணத்தால்-தான், பெரியாரு டைய எண்ணங்களையெல்லாம் நாட்டில், சமுதாயத்தில் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார் - என்று பாராட்டினேன்."

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் 'விடுதலை' மலரில் (2007) முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் எழுத் தோவியமான கணிப்புதான் மேலே எடுத்துக்காட்டியிருப்பது.

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 'வீரமணி' அவர்கள் தான் திராவிடர் கழகத்தின் அசல்' (விடுதலை 3.9.1979) என்றும் குறிப்பிட்டார்.

எத்தனையோ முன்னணியினர் தந்தை பெரியார் அவர்களின் தலைமையின் கீழ் பணியாற்றியிருந்தாலும் ஆசிரியர் அவர்கள் அய்யாவின் கணிப்பில் பெற்ற உயரிய இடம் போல் வேறு யாரும் பெற்றதில்லை.

"இந்த நிலையில் சுயநலமில்லாது, எவ்விதப் பொருள் ஊதி யத்தையும்  கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால் இதுபோல (வீரமணி போல) மற்றொருவர் வந்தார், வருகிறார், வரக் கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அது நம்முடைய அறியாமை யாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகரகாவும் நமது 'விடுதலை' ஆசிரியராகவும்  பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏக போக ஆதிக் கத்தில் 'விடுதலை'யை ஒப் படைத்து விட்டேன்" (விடுதலை 6.6.1964) என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைவிட, நமது தலைவர் ஆசிரியருக்கு வேறு என்ன கிரீடம், புகழ் மாலை தேவைப்படும்?

இந்தப் பாராட்டுகளும், கணிப்புகளும் எதிர்காலத்தில் இந்த இனத்துக்கு, மக்களுக்கு எந்த மாதிரியான அப்பழுக்கற்ற தொண்டு ஆற்ற வேண்டும். உழைக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்புக்கான உந்துதல் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் கணிப்பு என்ற எடை மேடையில் நிறுத்திப் பார்த்தால் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் துல்லியமான நிறைவைக் காட்டுவார்.

இயக்க நடப்பு வலிமை என்று எடுத்துக் கொண்டால், இளை ஞர்கள் பட்டாளம் வேறு எந்தக் காலத்தையும்விட  இந்தக் காலக் கட்டத்தில் இலட்சிய முழக்கமிடும் அடலேறு களாக அணி வகுத்து நிற்கின்றனரே!

கரோனா காலத்தில்கூட, ஊரும் உலகமும் அடங்கிக் கிடந்த தருணத்தில்கூட, காணொலி மூலம் கருத்துப் பிரச்சாரம் கழகம் மேற் கொண்டதுபோல வேறு எந்த அமைப்புச் செய்தது? இளைய புது ரத்தங்கள் 1500க்கு மேல் கழகத்துக்கு கிடைத்தனர் என்றால் அது சாதாரணமா?

தந்தை பெரியார் தம் தத்துவத்தை மண்டைச் சுரப்பை பன்னாடுகளில் கொண்டு சென்றிருக்கிறாரே - பெரியார் பன்னாட்டு அமைப்பு அவரின் சிந்தனையில் பூத்த மலரன்றோ!

"வாழ்நாள் சாதனையாளர்" விருதினை உலக மனிதநேய அமைப்பு வாசிங்டனில் வழங்கிய நேரத்தில்கூட நமது தலைவர், நமது இயக்கத்தவருக்குத்தானே அதனை ஒப்படைப்பதாக அதே மேடையில் அறிவித்தார்.

'விடுதலை'யை ஏக போகமாக நமது ஆசிரியரிடம் ஒப்படைத்தார் என்பதற்கான அர்த்தம் என்ன? அன்று நான்கு பக்கங்கள் கொண்டதாக வெளிவந்த விடுதலை இன்றைக்கு பல வண்ணங்களில் 8 பக்கங்களாக நவீன தொழில் நுட்பங் களைப் பயன்படுத்தி நாளும் மலர்ந்து மணம் வீசுகிறதே!

கூடுதலாக திருச்சியிலும் இன்னொரு பதிப்பாகவும், வெளி வந்து விட்டதே! இயக்க வெளியீடுகள் என்ற தளத்திலும் உலகில் முதல் இடத்தில் கோலோச்சக் கூடியதும் நாம்தான். இதனை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே உச்சிமோந்து பாராட்டியதுண்டே!

சமூகநீதிக் களத்தில், அய்யா பலமாக அமைத்துச் சென்ற அடித்தளத்தில் நின்று தந்தை பெரியார் காலத்தில் இருந்த 49 விழுக்காடு 69 விழுக்காடாக, வலிமையாக சட்டப் பாது காப்போடு நிமிர்ந்து நிற்கிறதே!

ஒன்றிய அரசு துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்று 1940இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம் நமது தமிழர் தலைவர் காலத்தில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வாழும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் படிச் செய் துள்ளாரே!

மண்டல் குழுப் பரிந்துரைகளை நிறைவேற்றிட 42 மாநாடு களையும், 16 பேராட்டங்களையும் நடத்தியல்லவா இந்த அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

தளபதி மு.. ஸ்டாலின் அவர்கள், அண்ணா அறிவாலயத் தின் பாதையை  நிர்ணயிப்பது பெரியார் திடலே என்று பகிரங்கமாக  பிரகடனப்படுத்தும் அளவுக்கு நமது தலைவர் ஆசிரியர் இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

தளபதி மு.. ஸ்டாலின் சொன்னதுமட்டுமல்ல - தந்தை பெரியார் பிறந்த நாளை  சமூக நீதி நாளாக அறிவித்து, அந்நாளில் அனைத்து அரசுப் பணியாளர்களும், அதிகாரி களும் தந்தை பெரியார் கொள்கை வழி நடக்க உறுதிமொழி ஏற்கும் நிலையை ஏற்படுத்தி விட்டாரே!

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற நிலை ஏற்படாதிருந்த நிலையை மாற்றி, அதனையும் செயல்படுத்தி விட்டாரே முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்,  "சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" என்ற பட்டத்தையும் முதல் அமைச்சருக்கு அளித்து .ற்சாகப்படுத்தி விட்டார். நமது தலைவர் ஆசிரியர்.

அய்யாவின் கணிப்பை எல்லாம் துல்லியமாக நிறை வேற்றுவதற்கு நமது தலைவர் நூற்றாண்டு விழா மேடை யிலும் நின்று குரல் கொடுப்பார் - அவ்வழியில் கட்டுப்பாடு காத்து பயணிப்போம்! வாழ்க வாழ்க தமிழர் தலைவர். நீடு, நீடே!


No comments:

Post a Comment