டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு

முகமது கோரியின் படைத்தலைவர் குத்புதீன் அய்பக்  27 கோயில்களை இடித்து, அந்தக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி மசூதி கட்டினார். எனவே அங்கே மீண்டும் இந்து, ஜெயின் மத வழிபாட்டு உரிமை வேண்டும் எனக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது

அந்த வழக்கில் நீதிபதி நேஹா தீர்ப்பு அளித்தார். "இந்தியப் பண்பாட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. கடந்த காலத்தில் தவறுகள் நடந்தன என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது போன்ற தவறுகள் நமது நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் அமைதியைக் குலைப்பதற்கு அடிப்படையாக இருக்கக் கூடாது.

நமது நாடு எத்தனையோ இக்கட்டான காலங்களைக் கடந்து வந்துள்ளது. வரலாற்றில் இருந்து நல்லதைத் தக்கவைத்து கெட்டதை நீக்க முடியுமா?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்

 2019இல் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்ட ஒரு பகுதியையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். சட்டத்தை, மக்கள் கையில் எடுப்பதன் மூலம் வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பதை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கின்றார். மேலும் "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 பிரிவுகள் வழங்கியபடி தங்கள் மதத்தைப் பயன்படுத்த, வழிபடுபவர்களுக்கு உரிமை உண்டு என்றும், தெய்வங்கள் அசல் இடத்தில் வைக்கப்படுவதை உறுதி செய்யும் உரிமை உண்டு என்றும் மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ள வாதம் தகுதி அற்றனவாகும்.

ஒரு கட்டமைப்பு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, அது அரசாங்கத்திற்குச் சொந்தமாக ஆக்கப்பட்ட பிறகு, அந்த இடத்தினை மீண்டும் மத சேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என மனுதாரர் கோருவதை ஏற்க முடியாது."

இவ்வாறு நீதிபதி நேஹா தீர்ப்பு அளித்து உள்ளார்.

இந்தக் கால கட்டத்தில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. இந்தக் கண்ணோட்டம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இன்னும் சொல்லப் போனால் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமானது  அயோத்தியில் இடிக்கப்பட்டதே!

தேசியத் தலைவர்கள் என்றும், மூத்த தலைவர்கள் என்றும் பெருமையாகத் தூக்கி நிறுத்தப்படும் .பி. வாஜ்பேயி, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண்சிங் போன்ற 68க்கும் மேற்பட்டவர்கள் இந்த இடிப்பில் சம்பந்தப் பட்டவர்கள் என்று லிபரான் ஆணையம் கூறவில்லையா?

பட்டப் பகலில் நடந்த கொடூரம் அது - அநாகரிகம், காட்டு விலங்காண்டித்தனமான அழி செயல் அது. இடிக்கப் பட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் உண்டு, என்றாலும் எவரும் தண்டிக்கப்படவில்லை என்பது மிகப் பெரிய தேசிய அவமானம் அல்லவா! உலக நாடுகள் மத்தியில் மாபெரும் தலைக்குனிவு அல்லவா!

இதற்குப் பிறகு நாட்டில் என்னதான் நடக்காது என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.

இப்பொழுது காசியில் உள்ள மசூதியும் குறி வைக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் உட்கார்ந்து இருக்கின்றனர் என்கிறபோது - இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி சிறுபான்மை மக்களின் கலாச்சார சின்னங்களுக்குக் குறி வைக்கப்பட்டால் நாட்டில் ஜனநாயகத்துக்கோ, அரசமைப்புச் சட்டத்துக்கோ தூசு அளவு மதிப்பும் மரியாதையும்கூட மிஞ்சாது.

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நேஹாவின் தீர்ப்பு மிகவும் சரியானது - நேர்மையானது - சட்டப்படியானதே! பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்னது உச்சநீதிமன்றமாயிற்றே! இதற்குமுன் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு ஈடு கொடுக்க முடியாதே!

எத்தனையோ பவுத்தப் பள்ளிகளும் சமணப் பள்ளிகளும், இந்து அரசர்களால் மாற்றி அமைக்கப்பட்டன என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. அவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் நிலைமை என்ன ஆகும்?

'இந்து ராஜ்ஜியம்' என்பதுசொல் அளவில் இருக்கும் போதே இந்த நிலை என்றால், ஒருக்கால் அந்த ராஜ்ஜியத்திற்கு முடி சூட்டப்பட்டால் முழுமையான அளவுக்கு நாடு புதைக் குழிக்குச் செல்லுமா, செல்லாதா? சிந்திப்பீர்!

No comments:

Post a Comment