வெள்ளப் பிரச்சினையை சமாளித்த செயல் திறன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

வெள்ளப் பிரச்சினையை சமாளித்த செயல் திறன்

அக்டோபர் இறுதி வாரத்தில் துவங்கிய மழை நவம்பர் மாதம் சில நாட்கள் நின்ற போதிலும் தொடர்ந்து பெய்தமழை அதுவும் 80 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த பெருமழை இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாயின.

மழைவெள்ளம் அதன் பாதிப்பு என்பது 2014 ஆம் ஆண்டி லிருந்தே தொடர்கதையாகிவிட்டது, 2015 ஆம் ஆண்டு மழைவெள்ளம் சென்னையைப் புரட்டிப் போட்டது, இதன் காரணமாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்கள் 2015-ஆம் ஆண்டுபோல் வெள்ளம் வராமல் போனதே என்று ஆறுதல் அடைவதோடு மற்றபடி மழைக் காலம் என்றாலே மழை நின்று சில வாரங்களுக்கு மழை நீரோடு வாழப்பழகி வந்தனர்.

இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக மு..ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஏற்கெனவே நகரநிர்மானம் மற்றும் மக்கள் துயர்நீக்கும் பணியில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், சென்னை மாநகர மேயராகவும் இருந்தவர் என்பதால் தன்னுடைய தலைமையிலேயே மழைவெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்க களமிறங்கினார்.

இதன்படி தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையில் 14.11.2021 அன்று பெருநகர வெள்ள இடர் தணிப்பு, மேலாண் மைக்கான குழு ஒன்று அமைக்கப் பட்டது.

ஓய்வு பெற்ற அய்..எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையிலான இக்குழுவில், டில்லி நகர் மற்றும் ஊரமைப்பு நிறுவன தலைமை திட்டஅலுவலர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை,

சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஜானகிராமன்,  மும்பை அய்.அய்.டி. கட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா,

சென்னை அண்ணா பல்கலைக்கழக மனித குடியமர்வு மய்ய இயக்குநர் பிரதீப்மோசஸ்,

அய்தராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் துறை யின் பிரதிநிதி, அண்ணா பல்கலைக்கழக ரிமோட் சென்சிங் நிறுவனப் பேராசிரியர் திருமலைவாசன்,

அய்.அய்.டி. கட்டுமானப் பொறியியல் துறை தலைவர் பாலாஜி நரசிம்மன்,  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை திட்ட அதிகாரி, சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பொதுவாக கடந்த 10 ஆண்டுகளாக பேரிடர் காலங்களில் அரசு நியமிக்கும் குழுக்களில் ஏனோதானோ வென்று அந்தத் துறை செயலாளர் தலைமையில் அந்தத் துறையில் உள்ள அதிகாரிகளை வைத்தே குழு அமைப்பார்கள், அதிகாரிகள் குறைவு, வேலைப்பளு ஏற்கெனவே கையில் உள்ள திட்டங்கள் என பல நெருக்கடியில் இருக்கும் அதிகாரிகளை திடீரென ஏற்படும் பெருவெள்ளப் பாதிப்பையும் நிர்வகிக்கக் கூறும் போது அவர்கள் திணறிவிடுகிறார்கள். அவர்களால் திட்டமிட முடியாமல் போகிறது.

அதைவிட துறை ரீதியிலான போட்டியின் காரணமாக பிற துறை அதிகாரிகள் ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை. நிதி ஒதுக்குவதில் சிக்கல், ஊழல் இன்ன பிற என பல தடைக் காரணங்களால் மழைவெள்ளப் பாதிப்பை சரிவர கையாளாமல் போனது; இதன் காரணமாகத் தான் 2015 முதல் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மழை நின்றுவிட்ட போதிலும் வாரக் கணக்காக தண்ணீர் தேங்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மழைப்பாதிப்பு ஒருபுறம் - மழை நின்ற பிறகு தேங்கி நிற்கும் தண்ணீரால் ஏற்படும் பாதிப்பும் தொற்றுநோய்களால் ஏற்படும் பாதிப்பும் அக்டோபர் முதல் டிசம்பர் 2-ஆம் வாரம் வரை சென்னையை பாடாய்ப் படுத்திவிடும். 

இம்முறை அப்படி அல்ல, மக்கள் நலனில் அக்கறை கொண்டு நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணிபுரியும் முதல மைச்சர் மு.. ஸ்டாலின் இரவு பகல் பாராது மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தானே முன்னின்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டு வெள்ள மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 அது மட்டுமல்ல, இனி மேலும் இது போன்று நடக்கக்கூடாது என்பதற்காக நிரந்தர தீர்வுக்கான பேராசிரியர்கள். துறை வல்லுநர்கள் இந்தத்துறையில் திறம்படப் பணியாற்றிய மேனாள் அதிகாரிகள் என ஒரு குழுவை அமைத்தார். முதல் அமைச்சர் இப்போது அத்துறையின் அதிகாரிகளுக்குப் புதிய திட்ட ஆலோசனைகள் கிடைக்கும், பணி நெருக்கடிகளும் இருக்காது, நல்ல பயன்கள் உடனடியாக கிடைப்பதால் உற்சாகத்தோடு வேலை பார்க்க முடிகிறது.

 இதன் பயன் உடனடியாக தெரிய வந்தது. மழை நின்று 2 நாட்களில் சென்னை அசோக் நகர் 18-ஆவது நிழற்சாலை போன்ற இடங்களில் மார்பளவு நீர் நின்ற பகுதியில் இங்கு தண்ணீர் நின்றதா என்று அப்பகுதி மக்களே தங்களைக் கிள்ளிப்பார்க்கும் அளவிற்கு நீர் அகற்றப்பட்டது மட்டுமன்றி தண்ணீர் இருந்த சுவடுகள் கூட தெரியாமல் சாலை தூய்மைப் படுத்தப்பட்டு பள்ளிக் குழந்தைகள் மகிழ்ச்சியோடு சாலை களில் நடக்கின்றனர்.

என்றாலும் இவைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு, தொலை நோக்குத் திட்டங்கள் தேவை. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இத்தகு பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை அறிந்து அதன்படி செயல்படலாம் அல்லவா!


No comments:

Post a Comment