பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (1)

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எம்.. தேர்வு முடித்து, தேர்வு முடிவுக்குக் காத்திருப்பான விடுமுறையில் இருந்தேன். ஈரோட்டில் பெரியார் மன்றத்தில் தங்கி; பல கட்டட புதுப்பிப்புப் பணிகளைப் பார்த்திருந்த வேளையில் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியாரிடமிருந்து அழைப்பு வந்தது. குறிப்பிட்ட பணிஏதும் தராமலேயே அவ்வப்போது பல நிகழ்வுகள் - இயக்கப் பணிகளைச் செய்யச் சொல்வார். புலவர் கோ. இமயவரம்பனும், நானும் அவைகளைச் செய்வதோடு, அதில் புத்தக வெளியீடு - 'குடிஅரசு' அச்சகத்தின் பொறுப் பாளர் இராமானுஜம் உள்பட இணைந்து பல பணிகளைச் செய்வோம்.

பெரியார் மன்றத்தில் ஒரு சிறிய அறையில் அய்யா பழைய கட்டிலில் - தரையில்  ஓலைப் பாயில் அம்மா (அன்னையார்) அய்யா அருகில் (அய்யா விழுந்துவிடாமல் பாதுகாக்கும் நிலையில்) படுத்திருப்பார்.

கட்டிலேகூட அதிக உயரம் கிடையாது; பக்கத்தில் ஒரு சிறு சமையல் அடுப்பங்கரை - அம்மா சமையல், மன்றத்தில் சாப்பாடு. எங்களது படுக்கை, குளியல் எல்லாம் ஒரு பகுதியில் - பாய், தலையணை சகிதம்.  அய்யாவைச் சந்திக்க வரும் உறவுக்காரர்கள், ஊர்க்காரர்கள் வரை எப்படிப் பேசி விடயம் விசாரித்து மகிழ்கிறார்கள் என்பதைக் கண்டு அனுபவம் பெறும் வகுப்பு போல அந்த அன்றாட நிகழ்வுகள்!

ஈரோடு . சண்முகவேலாயுதம், பழம்பெரும் கொள்கை வீரர் - 'ஈரோட்டு பாதை' ஆசிரியர் - நகைச்சுவை ததும்ப பேசுபவர் - அறிஞர் அண்ணா 'விடுதலை' ஆசிரியராக ஈரோட்டில் தங்கிப் பணிபுரிந்த காலம் முதற்கொண்டு அய்யாவின் அருந்தொண்டர். - அவரது தொழில் பத்திரம் எழுதுதல்.  எனவே ஈரோட்டில் சொத்து விற்பனை - யார் யார் வீடு எங்கே எதற்காக எவருக்கு விற்கிறார்கள், யார் வாங்குகிறார்கள் என்பது இவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆண்டுக்கு ஒரு முறை ஈரோட்டுக்கு வந்து சில நாள்கள் தங்குவார் அய்யா!

ஓராண்டு ஈரோட்டுக் குடும்பங்கள் பலரது கதைகளை விசாரித்து, . சண்முகவேலாயுதம் மற்றும் பெரு வணிகர்கள் அங்கப்பச் செட்டியார், அண்ணாமலை கவுண்டர் (அடையாளத்திற்காக ஜாதிப் பட்டத்தை விடாமல் எழுதுகிறேன்) முதலாளி சாயபு, பெரிய அக்கிரகாரத்தின் இஸ்லா மியத் தோழர்கள் -  இஸ்மாயில் குடும்பத்தினரிடம் உரையாடுவார் (பெரிய அக்கிரகாரம் என்ற ஊர்த் தெரு. அங்கே பெரிதும் இஸ்லாமியர்களே வாழும் ஊராட்சி, அய்யாவிடமும் கழகத்திடமும் மிக்க அன்பு கொண்டவர்கள்).

விரல் விட்டு எண்ணிடக் கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் ஒவ்வொரு வரையும் தனித்தனியே நேரில் அழைத்து, நலம் - குடும்ப வரவு - செலவுகள் உள்பட விசாரித்து உரையாடுவார் - இல்லை இல்லை உறவாடுவார் - பார்த்தும் கேட்டும் பரவசமாவோம்!

கருங்கல்பாளையம் பழனிவேலு, வாத்தியார் பெருமாள், பொடிக்கடை அரங்கசாமி, அய்யா வின் ஏஜண்ட் உதவியாளர் ஆர்.டி. முத்து, வீரப்பன் சத்திரம் தோழர்கள் - இப்படிப் பலர். பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அம்மாவும், அய்யாவும் உரையாடும் போது - அது மிக மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தரும்!

அன்னையார், எஸ்.ஆர். கண்ணம்மாள் அம்மாவுக்கு "இந்தாங்க என்று இரண்டுப் புதுப் புடவைகள் தருவாங்க", "கண்ணு, (இப்படித்தான் தன் தங்கையை அய்யா வாஞ்சையோடு அழைப் பார். நேரில் கண்ட காட்சி) என்ன வாங்கிட்டுப் போறே, வாகிட்டே" இப்படி வம்பிழுப்பார் அய்யா!

"ஆமா நீ மகராசன் ஊருக்கு, உங்க ஆளுங்க நாள் தவறாமல் ஏதாவது பணம் காசி கொடுத்துக்கிட்டே இருக்கிறாங்க - எனக்கு என்னப்பா - இது மாதிரி  கொடுத்தா அதுவும் உனக்குப் பொறுக்கலையா" என்று இடித்துச் சிரித்துப் பேசுவார்!

அய்யா, "உனக்குக் கொடுக்கிறார்களே அதுவும் ஏங்காசிதான்! சரிசரி அனுபவிச்சுட்டுப் போ!" என்று பதில் கிண்டல் அடிப்பார்.

இரண்டு பேரும் பட்டிமன்றத்தில் இடம் பேசினால் கண்ணம்மாள் அம்மாதான் வெற்றி பெறுவார். அய்யா கண்ணம்மாள் அம்மாளிடம் பேசி ஜெயிக்க முடியாது!

என்ன வக்கணை, என்ன அண்ணன் - தங்கை பாசம் அந்த முதுமையில் என்று நாங்கள் வியந்து, மகிழ்ந்து, உணர்ந்து பார்ப்போம்!

எஸ்.ஆர். சாமி, அவரது அண்ணன் எஸ்.ஆர். சந்தானம் இருவரும் மவுனமாக சிரித்துக் கொண்டே நின்று எங்களுடன் சேர்ந்து வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்கள்!

சண்முகவேலாயுதம் இருந்தால் கொஞ்சம் 'அன்பு கலகத்தை' சற்று முடுக்கி விட்டு அண் ணனையும், தங்கையையும் விவாதிக்க வைப்பார்.

இல்லையென்றால் விரைந்து ஈரோடு கச்சேரி வீதி இல்லத்திற்கு சாப்பாட்டுக்கு அய்யாவை அழைத்து விட்டு, சென்று விடுவார்.

.சண்முகவேலாயுதம் மாதிரி அய்யாவின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் சொன்னவர் எவரும் இல்லை. அவ்வளவு துல்லியமான கணிப்புடன் எங்களுக்கு அய்யாவைப்பற்றிச் சொல்வார். எங்களை அழைத்து நடைபயிற்சியில் பல சுவையான தகவல்களைச் சொல்வார்!

நினைத்து நினைத்துச் சிரித்து மகிழத்தக்க பல செய்திகள்.

(திங்கள் நீளும்)

No comments:

Post a Comment