பொதுவுடைமையினர் தந்தை பெரியாரை விமர்சித்த காலத்திலேயே தந்தை பெரியாரைப் புகழ்ந்து பேசியவர் தோழர் தா.பாண்டியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

பொதுவுடைமையினர் தந்தை பெரியாரை விமர்சித்த காலத்திலேயே தந்தை பெரியாரைப் புகழ்ந்து பேசியவர் தோழர் தா.பாண்டியன்

தோழர் தா.பா. நினைவைப் போற்றும் இந்நாளில் சுயமரியாதை சமதர்ம சமுதாயத்தை உருவாக்க தோழமையுடன் செயல்படுவோம்

தோழர் தா.பாண்டியன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் சூளுரை

சென்னை, டிச. 28- சென்னை - பெரியார் திடலில் நேற்று (27.12.2021) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் - மறைந்த தா.பாண்டியன் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், தமது மரணத்துக்குப் பிறகும், அனைவரையும் தட்டி எழுப்பக் கூடியவராக தா.பாண்டியன் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

மேலும் முதலமைச்சர் அவர்கள், தி.மு.. - பொது வுடைமை இயக்கத்திற்கு இடையே இருப்பது தேர்தல் உறவல்ல; கொள்கை உறவு! சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் தோழமையுடன் செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.

தி.மு.. தலைவரும் - தமிழ்நாடு முதலமைச்சருமான மு.. ஸ்டாலின் சென்னை - எழும்பூர், பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன்  படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு :-

தோழர் தா.பாண்டியன் என்றாலே, தலை தாழாத பாண்டியன் என்றுதான் பொருள். எப்போதும், யாருக்கும், எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாத பாண்டியனாகத்தான் அவர் வாழ்ந் திருக்கிறார். இங்கே எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். கடந்த பிப்ரவரி மாதத்திலே மதுரையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில மாநாடு. அந்த மாநாட்டில் தா.பாண்டியன் ஆற்றியிருக்கக் கூடிய உரையை எல்லோரும் தவறாமல் சுட்டிக் காட்டி, அந்த மாநாட்டிலே நானும் பங்கேற்றேன். அந்த மாநாட்டிலே பங்கேற்று நிறைவுரையாற்றக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்த மேடையில் பேசும்போது, சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிசத் தத்துவம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோல இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்திருக்கிறீர்கள். அந்த அழைப்பை ஏற்று நானும் அதில் பங்கேற்றுப் பேசியிருக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இந்தியக் கம் யூனிஸ்ட் கட்சிக்கும் இருக்கக் கூடிய நட்பு, அது வெறும் நட்போ, தோழமையோ மட்டுமல்ல, நாம் ஒரே குடும்பம். அதுவும் சாதாரணக் குடும்பமல்ல, கொள்கை குடும் பம். அந்தப் பாச உணர்வோடுதான் நான் பேசினேன். அத்தகைய பாச உணர்வோடு நெஞ்சிலே நிலைநிறுத்தி நான் அந்த மாநாட் டிலே உரையாற்றி இருக்கிறேன். இந்த உணர்வு என்பது இன்று - நேற்று ஏற்பட்ட உணர்வு அல்ல. இரண்டு இயக்கங்களும் தோன்றிய காலத்தில் இருந்து உருவான உணர்வு! என்று நான் அந்த மாநாட்டிலே குறிப்பிட்டுச் சொன்னேன்.

அதோடு, பாசிச பா...வுக்கும், அடிமை .தி.மு..வுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் வர இருக்கக்கூடிய தேர்தல் என்று குறிப்பிட்டுச் சொன்னேன். நம்முடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார். இது படம் மட்டுமல்ல. பாடம் என்று சொன்னார். ஆகவே இந்தப் பாடத்தை ஏற்கெனவே தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் இந்திய அளவிலே நாம் இந்தப் பாடத்தை யாருக்குப் புகட்டவேண்டுமோ அவர்களுக்குப் புகட்டிட வேண்டும் என்று பாடமாக இருக்கக்கூடிய இந்த படத்தைத் திறந்து வைத்திருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் அத்தனை பேரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மதுரை மாநாட்டில் கர்ஜித்த தா.பாண்டியன்!

நான் மாநாட்டிலே கலந்துகொண்ட போது தா.பா. பேசினார். தமிழகத்திலே ஒரு ஆட்சி மாற்றம் வரவேண்டும். நல்ல காலம் பிறக்க வேண்டும். வரவிருக்கக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் எடுத்துரைத்தார். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கி றோம். இதைப் பார்க்க அவர் இல்லையே என்ற ஒரு ஏக்கம்தான் இன்றைக்கு என்னுடைய மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது.

88 வயதில் உடல்நலம் குன்றிய நிலையில் மதுரையிலே சக்கர நாற்காலியில் வந்து அவர் பேசினார் என்று சொல்ல மாட்டேன். கர்ஜித் தார். மதுரையே அலறக்கூடிய அளவிற்கு அவர் பேசினார்.

வீரமும் தீரமும் நிறைந்தவர்!

மதுரையில் நான் நின்று பேசி இருக்கிறேன், இப்போது உட்கார்ந்து பேசுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுச் சொன்னார். இடுப்பு எலும்பு அவருக்குப் பழுதாகி அதனால் உடல் நலிவுற்றிருக்கக் கூடிய நிலையிலே அவர் பேசினார். ``என் மண்டை ஒழுங்காகத்தான் ஒத்துழைக்கிறது. நான் சாகும்வரை தட்டி எழுப்புவேன்! என்னை மட்டுமல்ல - என்னுடைய செம்படையையும் எந்தக் கொம்பனாலும் அடக்க முடியாது என்று குறிப்பிட்டுச் சொன்னார். இந்த வீரமும், தீரமும்தான் தோழர் தா.பாண்டியன் அவர்கள்!

தமிழ்நாட்டில் .தி.மு.. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று அன்றைக்குச் சபதம் எடுத்தார்.

தானாக எதுவும் மாறாது! நாம்தான் மாற்ற வேண்டும்!' என்று சொன்ன தோழர் தா.பா.அவர்கள், வெற்றி விழா கூட்டத்தில் சந்திப் போம்! என்று முழங்கினார். என்னு டைய வருத்தமெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இவ்வளவு பெரிய வெற்றியைப் பார்க்காமலே சென்றுவிட்டார் என்கிற வருத்தம் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நான் பலமுறை நேரடியாக அவரைச் சந்தித்தேன். அவர் தன்னுடைய உடல்நலத்தைப் பற்றி நாங்கள் விசாரித்துக் கொண்டிருப்போம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் பதில் சொல்லமாட்டார். அரசியலைப் பேசுவார். நாட்டு நிலைமையைப் பற்றி பேசுவார். மத்தியில் நடக்கக்கூடிய ஆட்சியினுடைய கொடுமையைப் பற்றி பேசுவார். ஆகவே அவரது அடையாளமே அவரது தோளில் இருந்த அந்த சிவப்புத் துண்டுதான். அவர் தனது தோளில் தாங்கியது சிவப்புத் துண்டு மட்டுமல்ல; சிவப்பு இயக்கத்தையே எப்போதும் அவர் தாங்கியிருந்தார். இறப்பதற்கு முந்தைய நாள் - மருத்துவமனையில் படுக் கையில் இருக்கும்போது அவரது சிவப்புத் துண்டு மடித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.

நள்ளிரவில் விழித்ததும் தா.பாண்டியன் அவர்கள், மருத்துவமனையில் இருக்கக் கூடிய செவிலியரைக் கூப்பிட்டு என் சிவப்புத் துண்டு எங்கே? என்னிடம் கொடுத் துடுங்கம்மா'' என்று சொல்லி இருக்கிறார். சாகும் வரை தட்டி எழுப்புவேன் என்று அவர் மதுரை மாநாட்டில் சொன்னார். என்னைப் பொறுத்தவரைக்கும், மரணத்துக்குப் பிறகும் தட்டி எழுப்பும் மனிதராக தோழர் தா.பா. அவர்கள் திகழ்ந்து கொண்டிருக் கிறார்கள். அதுதான் உண்மை!

தியாகம், அதுவும் பொதுவுடைமை இயக்கத்தின் தியாகம் என்பதற்கு எடுத்துக்காட்டு என்றால், அது தோழர் ஜீவா அவர்கள். தோழர் ஜீவாவை எல்லோரும் சொன்னார்கள். தோழர் ஜீவா அவர்களை நான் பார்த்தது கிடையாது. நான் அவரது உரையைக் கேட்டது இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி எங்களிடத்தில் அதை நினைவுப்படுத்தி எடுத்துச் சொல்லுவார். எப்படிப் பேசுவார் என்பதை கலைஞர் அவர்கள் பேசி யும் எங்களிடத்தில் காட்டுவார். அத்தகைய தோழர் ஜீவா அவர்களால் உருவாக்கப்பட்டு, ஜீவாவைப் போல தமிழ்நாடு முழுவதும் முழங்கி வந்தவர்தான் தோழர் தா.பா. அவர்கள்.

இலக்கியத்திலும் தேர்ந்தவர் தா.பா.!

தமிழ்நாட்டு மேடைகளை ஆட்சி செய்த வர்கள் என்று பட்டியலிட்டால் அதில் தோழர் தா.பா. அவர்களின் பெயர் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்குத் தனிச்சிறப் பான பேச்சாளர். மிகப்பெரிய கருத்தியல்களையும் எளிமையாக, பாமரர்களுக்கும் புரியும் வகையில் சொல்வதிலே எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பவர். கொள்கை சார்ந்து பேசுவது என்றால் அதைப் போல சீரியசாகப் பேசுவது என்று இல்லாமல் நகைச்சுவையாகவும் பேசுவார்.

அவரது இன்னொரு தனித்தன்மை, தலைவர் கலைஞர் அவர்களைப் போலவே, அரசியலில் மட்டுமில்லாமல் இலக்கியத்தையும் இணைத்து இரண்டிலும் பயணித்தவர் நம்முடைய தோழர் தா.பா. அவர்கள். தோழர் ஜீவா அவர் கள், கலை இலக்கியப் பெரு மன்றம் தொடங்கியபோது, தோழர் தா.பா. அவர்களைப் பொதுச் செயலாளராக நியமித்தார்கள். அத்தகைய இலக்கிய ஆளுமையாகவும் தோழர் தா.பா. இருந்தார்.

அரசியல் மேடைகளைப் போலவே இலக்கிய மேடை களிலும் வலம் வந்தார். தா.பா. அவர்கள். மேடைகளில் பேசுவதைப் போலவே, எழுத்திலும் பயணித்தார். அவர் எழுதிய புத்தகங்களே அதற்குச் சாட்சியமாக இருக்கின்றன.

தனக்கு உடன்பாடு இல்லாத வைகளை தயவுதாட்சண்யம் பார்க் காமல் விமர்சிக்கும் நெஞ்சுரம் அவ ருக்கு இருந்தது. சொந்தக் கட்சியில் இருக்கும் கொள்கை முரண்களைக் கூட அவர் சுட்டிக் காட்டு வதற்குத் தயங்கியது இல்லை.

எழுதியும் - பேசியும் - போராடியும் -

வாதாடியும் வலம் வந்தவர்!

ஜனசக்தி' இதழில் 'சவுக்கடி' என்ற தலைப்பில் அவர் எழுதிய கடைசிப் பக்கம் அனைவராலும் விரும்பிப் படிக்கப் பட்ட பகுதியாக இருந்தது. இப்படி நித்தமும் எழுதியும், பேசியும், போராடியும், வாதாடியும் வலம் வந்த வராக இருந்தவர்  தோழர் தா.பா. அவர்கள். தோழர் தா.பா. அவர்களது படத்திறப்பு, புகழஞ்சலிக் கூட்டத்தை இந்தப் பெரியார் திடலில் ஏற்பாடு செய்தது மிகமிக பொருத்த மானது. இறுதிக் காலத்தில் அவர் அடிக்கடி பெரியார் திடல் கூட் டங்களில்தான் கலந்துகொண்டிருக்கிறார்

வாழ்நாளெல்லாம் தந்தை பெரியார்

 புகழ் பாடியவர்!

தந்தை பெரியார் அவர்களைப் பொது வுடைமைக் கட்சியினரே விமர்சித்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் கூட, தந்தை பெரியாரைப் புகழ்ந்து பேசி வந்தவர்தான் தோழர் தா.பா. அவர்கள்.

பெரியாருக்குத் தந்தை' என்ற பட்டம் ஏன் என்பதற்கு யாரும் சொல்லாத விளக்கத்தைச் சொன்னவர் நம்முடைய தோழர் தா.பா. அவர்கள். தன் சொத்தையும், குடும்பச் சொத்தையும், கழகச் சொத்தையும் சேர்த்து தாய் தந்தை இல்லாத பிள்ளைகளைத் தத்தெடுத்து, வளர்த்து, அந்தப் பிள்ளைகளுக்கு தனது இனிஷியலைக் கொடுத்து, அடை யாளம் கொடுத்து, படிக்க வைத்து, பட்டம் பெற வைத்து, அந்தப் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் ஒரு மனிதரைத் தந்தை என்று சொல்லாமல், யாரைத் தந்தை என்று சொல்வது? என்று கேட்டவர் தோழர் தா.பா. அவர்கள். அதனால்தான் அவரது படத்திறப்பு பெரியார் திடலில் நடப்பது பொருத்தமானது என்று நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று தோழர் தா.பா. அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரும், தந்தை பெரியாரும், தோழர் ஜீவாவும் இணைந்திருந்த காலம்போல் உருவாக வேண்டும் என்று அடிக்கடி அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படித்தான் செயல்பட்டு வருகிறோம் என்பதன் அடையாளம்தான் திராவிட இயக்கத் தலைவர்களும், பொதுவுடைமை இயக்கத் தலைவர்களும் இந்த மேடையில் ஒருசேர உட்கார்ந்து இருப்பது! நமக்குள் இருப்பது தேர்தல் உறவு அல்ல; கொள்கை உறவு!

கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்லும் பொன்னுலகை உருவாக்கத்தான் நாம் நினைக்கிறோம். அத்தகைய சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உருவாக்க நாம் அனை வரும் தோழமையுடன் செயல்படுவோம்.

அதுவே தோழர் தா.பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் நான் பதிவுசெய்து, தோழர் தா.பா. அவர்களுக்கு எனது செவ்வணக்கத்தைச் செலுத்தி விடைபெறுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment