அய்யாவின் சிந்தனைகள் தமிழ்ச் சமுதாயம் உள்ளவரை நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

அய்யாவின் சிந்தனைகள் தமிழ்ச் சமுதாயம் உள்ளவரை நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும்!

பேராசிரியர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் இருதய நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் உரை

சென்னை, டிச.29   அய்யாவின் சிந்தனைகள் தமிழ்ச் சமுதாயம் உள்ளவரை நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும் என்றார் பேராசிரியர் மருமகனும், இருதய நிபுணருமான டாக்டர் வெ.சொக்கலிங்கம்  அவர்கள்.

தாய்க்கழகத்தின் சார்பில் நூற்றாண்டு விழா

கடந்த 20.12.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில்   தாய்க் கழகத்தின் சார்பில் (திராவிடர் கழகம்) நடைபெற்ற  இனமானப் பேராசிரியர் .அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவில், பேராசிரியர் மரு மகனும், இருதய நிபுணருமான டாக்டர் வெ.சொக்க லிங்கம் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

முதன்மைக் காரணமாகத் திகழ்ந்த தந்தை பெரியாருக்கு என் முதற்கண் நன்றி!

அனைவருக்கும் என் மாலை வணக்கம்.

திராவிட இனத்தால் இணைந்த என் உறவினர்கள் அனைவரையும் இரண்டாண்டுகள் கடந்து சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன்.

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நூறாவது ஆண்டு பிறந்த நாள் விழா நம்மால் கொண் டாடப்படும் பேராசிரியர் - இங்கே அமர்ந்திருக்கும் நம்முடைய தமிழர் தலைவர், அமைச்சர், முன்னிலை ஏற்பவர்கள் இடையே என்னையும் சேர்த்து இருப்பதற்கு மிக முதன்மை காரணமாகத் திகழ்ந்த நம் தந்தை பெரியாருக்கு என் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெரியார் என்ற ஒருவர் இல்லாமல் போயிருந்தால், நாம் அனைவரும் காணாமல் போயிருப்போம்; அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

இருதயத் துறையில் 55 ஆம் ஆண்டு தொடக்கம்

ஒரு மகிழ்ச்சியான செய்தி - 54 ஆண்டுகள் இருதயத் துறையில் பணியாற்றி - 55 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கும் நன்னாளில், உங்கள்முன் இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு -

தந்தை பெரியார், அண்ணா, முத்தமிழறிஞர் கலை ஞர், பேராசிரியர் - இவர்கள் அனைவருக்கும் இந்த சொக்கலிங்கம் மருத்துவராகப் பணி புரிந்ததைப் மிகப் பெருமையாகக் கருதுகின்றேன்.

அவர்களிடம் நான் ஒன்றே ஒன்றை விரும்பியது - அவரிடம் நான் தெரிவித்துக் கொண்டது - நம்முடைய ஆசிரியருக்கும் அது தெரியும்.

இயற்கையிடம் விட்டுவிடு என்றனர்!

அவருடைய நூறாவது பிறந்த நாளை - அவருடைய முன்னிலையிலேயே கொண்டாடவேண்டும் என்று நினைத்தேன்.

அதற்கு தந்தையும் சரி, கலைஞரும் சரி, நீ முயற்சி செய்துகொண்டே இரு சொக்கலிங்கம் - இயற்கையிடம் விட்டுவிடு என்று சொல்லிவிட்டனர்.

ஆனால், ஒன்றே ஒன்றை அவர்களிடம் பார்த்தேன். அவர்கள் அனைவரும் உயிருள்ளவரை உழைத்துக் கொண்டிருந்தார்கள். உழைத்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவர்களுடைய உயிர் பிரிந்தது. அவர் கள் வாழ்ந்தது மட்டும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழுக்காகவும்தான்.

‘‘நூறாண்டுகள் வாழ வேண்டும்‘‘

கரோனா தொற்று வருவதற்கு முன்பு ஜப்பானில் 18 ஆயிரம் பேர் குழுமியிருந்த அரங்கத்தில் எனக்குப் பேசக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அங்கு பேசிய தலைப்பு ‘‘நூறாண்டுகள் வாழ வேண்டும்’’ என்று.

அந்த அறிவிப்பைப் (சிலைட்) போட்டவுடன், 2000 பேர் எழுந்து நின்று, என்னுடைய பேச்சை கேட்க விரும்பவில்லை என்று சொன்னார்கள்.

என்னவென்று கேட்டேன்,

எங்களுக்கு ஏற்கெனவே 100 வயது ஆகிவிட்டது சொக்கலிங்கம்; நூறு வயது வாழவேண்டும் என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டார்கள்.

எது நூறாண்டையும் தாண்டி வாழ வைத்திருக்கிறது?

அவர்கள் சொன்னவற்றிலிருந்து நான் கண்டுபிடித் தது என்னவென்றால், அவர்கள் அனைவரும் இயற் கையுடன், மொழிக்காக, நாட்டிற்காக வாழ்வதுதான் - அவர்களை நூறாண்டையும் தாண்டி வாழ வைத்தி ருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இப்பொழுது நம்மிடையே நான் கூறிய அனைவரும் இல்லாமல் இருக்கலாம்.

விதை விதைத்தவன் உறங்கினாலும், அந்த விதை கள் உறங்குவதில்லை.

தமிழ்ச்சமுதாயம் இருக்கின்ற வரையில்...

அவர்கள் விட்டுச் சென்ற எண்ணங்கள், அது எப்பொழுதும், தமிழ்ச்சமுதாயம் இருக்கின்ற வரையில், அய்யா தலைவருடைய வழியில், நாம் அனைவரும் பின்பற்றி செல்லும்பொழுது, நாம் மட்டுமல்ல, பல தலைமுறைகளைக் கடந்து இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள், ‘‘நீங்கள் வரு வது முன்பே தெரிந்திருந்தால், அழைப்பிதழில் பெய ரைப் போட்டிருப்பேன் சொக்கலிங்கம்’’ என்று சொன்னார்.

அழைப்பிதழில் என்னுடைய பெயர் இருக்கிறதோ, இல்லையோ, உங்கள் இதயத்தில் இந்த சொக்கலிங்கம் அமர்ந்திருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி.

பெரியார், பேராசிரியர் ஆகியோரின் கொள்கை - தத்துவம்!

மேல்படிக்குச் செல்ல கீழ்ப்படிகள் வேண்டும். மேலே சென்ற பிறகு, நாம் அனைவரும் கீழ்ப்படிந்து  இந்த சமுதாயத்தை முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் தந்தை பெரியார், பேராசிரியர் ஆகியோரின் கொள்கை - தத்துவம் - கோட்பாடும்கூட!

வாழ்க்கையில் மட்டும் ஒன்றை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள் - நூறு வயதைக் கடந்து வாழ வேண்டும் என்றால், சொக்கலிங்கம் உறவினராக மட்டும் இருக்கவேண்டும் என்றால்,

மூன்றுமந்திரங்களைக் கடைப்பிடியுங்கள்.

என்னடா, ‘மந்திரம்என்று சொல்லுகின்றானே என்று நினைக்கவேண்டாம்.

எண்ணும் எண்ணம் சீராக,

உண்ணும் உணவு சீராக,

உடற்பயிற்சி சீராக,

மேற்கண்ட மூன்றுமந்திரங்களைக் கடைப்பிடிக்கும் பொழுது, நாம் நூறு ஆண்டு கடந்து, நாம் சார்ந்திருக்கின்ற சமுகத்தையும், தமிழையும் காப்பாற்றுகின்ற சக்தியாக மாறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்று கூறி,

அவர்கள் அனைவரும் விட்டுச் சென்ற ஒன்றே ஒன்றைச் சொல்லுகின்றேன் - அமைச்சருக்கும் அது தெரியும். நெருங்கிய நண்பர் - உறவினரைவிட மேலாக நினைப்பவன் இந்த சொக்கலிங்கம்.

சமுதாயம்தான் நம்மைக் காப்பாற்றுகின்றது

நம் சிந்தனை - செயல் - சொல் அனைத்தும் தன் னைச் சார்ந்திருந்த சமுதாயத்திற்காக இருக்கும்பொழுது, சமுதாயம் மேன்மையடையும்பொழுது, அந்த சமுதாயம் தான் நம்மைக் காப்பாற்றுகின்றது என்பதைத் தெரிந்து கொண்டு,

உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்,

வெற்றி அடைவது மகிழ்ச்சியல்ல -

மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி என்று உணர்ந்து விட்டால், நம்மை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.

எங்களுடைய பாட்டி ஒருமுறை கேட்டார்கள் -

முயலுக்கும் - ஆமைக்கும் போட்டி வைத்தால், எது வெற்றி பெறும்? என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

தவறோ, சரியோ சொல்லுங்கள்.

ஆமை என்கிறீர்கள்.

முயலாமைதான் தோற்கும்

நான் என்னுடைய பாட்டியிடம் கேட்டேன், ஆமைக் கும் - முயலுக்கும் போட்டி வைத்ததே அயோக்கியத் தனம் அல்லவா  என்றார்.

இரண்டு ஆமைக்குப் போட்டி வையுங்கள்; அல்லது இரண்டு முயலுக்குப் போட்டி வையுங்கள்.

ஆனால், பெரியார் கொள்கையில், பேராசிரியருடைய அறிவுரையுடன்படி, இரண்டும் வெற்றி பெறும் -

ஒன்று மட்டும்தான் தோற்கும் -

முயலாமைதான் தோற்கும்.

முயலும் - ஆமையும் கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்று சொல்லி,

நாம் அனைவரும் வாழ்க்கையின் கணக்கில் இருக்கின்ற கால்குலேட்டர் பெறுகின்ற சிந்தனையைக் கடைபிடிக்கவேண்டும்.

நல்லதைக் கேட்டு -

கெட்டதைக் கழித்து

அறிவைப் பெருக்கி,

நேரத்தை சீராக வகுத்து

நல்ல பாதையைத் தேர்ந்து சம நிலையில் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். 

சொக்கலிங்கம் உதவியில்லாமல் நூறு ஆண்டுகள் கடந்து வாழ முடியும்

நாம் நூறு ஆண்டுகள் கடந்து வாழ்ந்து - நம்மைச் சார்ந்திருக்கின்ற இந்த சமுதாயத்தை வாழ வைக்கும் கருவியாக மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,

ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையைத் தான் அறிந்து, மற்றவர்களிடம் காப்பியடிக்காமல் வாழக் கற்றுக் கொண்டாலே, சொக்கலிங்கம் உதவியில்லாமல் நூறு ஆண்டுகள் கடந்து வாழ முடியும் என்று கூறி,

இந்த அரிய வாய்ப்புக்கு மீண்டும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இருதய நிபுணர் டாக்டர் வெ.சொக்க லிங்கம் உரையாற்றினார்.

No comments:

Post a Comment