பேராசிரியரின் உரையைச் சுட்டிக்காட்டி கழகத் துணைத் தலைவர் உரை
சென்னை, டிச.29 நம்மை சூத்திரன் என்று சொல்லும் ஒரு மதத்தை நாம் ஏற்க முடியுமா? என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
தாய்க்கழகத்தின் சார்பில் நூற்றாண்டு விழா
கடந்த 20.12.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் தாய்க் கழகத்தின் சார்பில் (திராவிடர் கழகம்) நடைபெற்ற இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற் புரையாற்றினார்.
அவரது வரவேற்புரை வருமாறு:
நமது இனமானப் பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவை உரிமையோடு தாய்க்கழகமான திராவிடர் கழகம் எடுக்கக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமை வகிக்கக்கூடிய கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே,
சிறப்பு விருந்தினராக வருகை தந்து சீரிய உரையினை வழங்கவிருக்கக்கூடிய மரியாதைக்குரிய அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்களே,
நம்முடைய இயக்கம் நடத்துகின்ற எல்லா நிகழ்ச்சி களிலும், தவறாமல் பங்குகொள்ளக்கூடிய திராவிட இயக் கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீ. அவர்களே,
பேராசிரியர் அவர்களுடைய மருமகனும், தலைசிறந்த இருதய நிபுணருமான டாக்டர் சொக்கலிங்கம் அவர்களே,
இனமானப் பேராசிரியர் அவர்களுடைய அருமைச் செல்வர் அன்பிற்குரிய அன்புச்செல்வன் அவர்களே,
இந்நிகழ்வில் பங்குகொண்டிருக்கின்ற பல்வேறு துறை களைச் சார்ந்த அருமைப் பெருமக்களே, மும்பையிலிருந்து வந்திருக்கக்கூடிய தீரன் அவர்களே, அருமைத் தாய்மார்களே அனைவருக்கும் வணக்கம்.
திராவிடர் கழகத்தினுடைய கடமை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நம்முடைய இனத் திற்காகவும், மொழிக்காகவும் பாடுபடக் கூடிய பெருமக் களை தவறாமல் நினைவு கூர்ந்து, அவர்களுக்குரிய மரியாதையை செலுத்துவது திராவிடர் கழகத்தினுடைய கடமையாக என்றைக்கும் இருந்து வந்திருக்கின்றது.
அந்த வகையிலே, திராவிட இயக்கத்தினுடைய மிக முக்கிய தூண்களில் ஒருவராக இருக்கக்கூடிய நம்முடைய பேராசிரியர் பெருமகனாருடைய நூற்றாண்டு தொடக் கத்தை - இந்த கரோனா காலத்தில், எந்த அளவிற்கு சிறப்பாக நடத்த முடியுமோ, அந்த அளவிற்கு நாம் முயற்சி எடுத்துக்கொண்டோம்.
இங்கே காணொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டதுபோல, கடந்த சில ஆண்டுகாலமாக அவருடைய இறுதிக் காலத் தில், ஏராளமான நிகழ்ச்சிகளில், நம்முடைய பெரியார் திடலுக்கு வந்து அவர் கலந்துகொண்டார்.
இங்கே மன்றத்தினுடைய வலதுபுறத்தில் இருக்கக்கூடிய அன்னை நாகம்மையார் அரங்கத்தைக்கூட பேராசிரியர் அவர்கள்தான் திறந்து வைத்தார் என்பதை இந்த நேரத்தில் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.
நீதிக்கட்சியினுடைய நூற்றாண்டு விழாவின்போதுகூட நம்முடைய பேராசிரியர் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை நினைவு கூருகின்றேன்.
யாருக்கும் தோன்றாத ஒரு புதுமையான நிகழ்ச்சி
2018 ஆம் ஆண்டில், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள், தமிழ்நாட்டில் யாருக்கும் தோன்றாத ஒரு புதுமையான நிகழ்ச்சியை நடத்தினார்.
தமிழ்நாட்டின் பொதுவாழ்க்கையில் மிக நீண்ட காலம் உழைத்தவர்கள், பணியாற்றியவர்கள், தொண்டாற்றிய வர்கள் - அவர்களையெல்லாம் அழைத்துப் பெருமைப் படுத்த வேண்டும், சிறப்பு செய்யவேண்டும் என்று எண்ணி, கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில், தோழர் நல்லகண்ணு போன்றவர்களையெல்லாம் அழைத்து, அதேபோல, கழகத்தில் உள்ள மூத்த 80, 90 வயது நிறைந்த கழகப் பெருமக்களையெல்லாம் அழைத்து, அவர்களுக்கு சிறப்பு செய்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றவர் நம்மு டைய இனமானப் பேராசிரியர் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன்.
அந்த அளவிற்கு, நம்முடைய இயக்கத்தோடு, பெரியார் திடலோடு அவர் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.
அவருடைய பேச்சு என்பது, வெட்டு ஒன்று - துண்டு இரண்டாக இருக்கும்.
நகைச்சுவையுடனும், கருத்துடனும் பேசக்கூடியவர் பேராசிரியர்
ஒருமுறை பத்திரிகையாளர் ஒருவர் அவரைப் பேட்டி கண்டார்.
80 ஆம் வயதில் நுழைகிறீர்கள் என்று சொன்னபொழுது,
பேராசிரியர் அவர்கள் சிரித்துக்கொண்டே, ‘அது ஒன்றுதாம்பா கேட்காமலே வருகிறது’ என்றார்.
நீங்கள் அரசியலில் நுழையாமல் இருந்தால் என்று பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.
‘உங்களைப் போல செய்தியாளராக இருந்திருப்பேன்’ என்றார்.
இப்படி ஒரு நகைச்சுவையுடனும், அதேநேரத்தில் கருத்துடனும் கூறக்கூடியவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.
சூத்திரனாக்கும் மதத்தை ஏற்க முடியாது
25.3.1982 நாளிட்ட ‘விடுதலை’யில், தலைப்புச் செய்தி ஒன்று வெளிவந்தது.
‘‘என்னை சூத்திரனாக்கும் மதத்தை ஏற்க முடியாது; நான் இந்து அல்ல; தமிழனே’’ என்றார்.
பள்ளத்தூரில் பேசிய ஓர் அருமையான உரை.
தன்னைப்பற்றி குறிப்பிடும்பொழுது, நான் இந்து அல்ல, கிறிஸ்தவன் அல்ல, முஸ்லிம் அல்ல; ஆனால், நான் ஒரு மனிதன் என்று சொன்னார்.
இப்படி ஒரு தனித்தன்மையோடு கருத்துகளை எடுத்துச்சொல்லக் கூடிய மிகச் சிறந்த ஆற்றல் படைத்தவர்.
பொது வாழ்க்கையில் இருக்கக்கூடியவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள ஒருசெய்தி!
பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான செய்தி -
அவரைவிட, வயதில் குறைந்திருந்தாலும், இயக்க அளவிலே பேராசிரியர் அவர்கள் அதிக முதிர்ச்சி - சீனியாரிட்டி என்றாலும்கூட - ஒரு இயக்கம் என்று வருகின்றபொழுது, அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், திருவாரூர் நிகழ்ச்சிக்குத் தன்னை அழைத்தவர் கலைஞர் என்று தெரிந்திருந்தும்கூட, இந்த இயக்கத்தைக் காப்பாற்றக்கூடியவர் கலைஞர் - அவரை தலைவராக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன அந்தப் பாங்கு, அந்தப் பண்பாடு பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய வர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளக் கூடிய ஒன்றாகும்.
தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது - பகுத்தறிவா? இனநலமா?
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கக் கூடிய நம்முடைய மாண்பமை துரைமுருகன் அவர்கள், தந்தை பெரியார் காலத்தில்கூட ஒரு நிகழ்ச்சி- தந்தை பெரியாருடைய கடைசி பிறந்த நாள் என்று யாரும் தெரியாது; ஆனாலும், அது கடைசி பிறந்த நாளாக அமைந்தது. 1973, செப்டம்பர் 17 ஆம் தேதி - இதே இடத்தில், தந்தை பெரியார் முன்னிலையில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சி.
தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது - பகுத் தறிவா? இனநலமா? என்ற தலைப்பில் அந்தப் பட்டிமன்றம்.
ஓர் அணிக்குத் தலைவராக டாக்டர் மா.நன்னன் அவர்களும், இன்னொரு அணியில், இன்றைய அமைச்சர் அய்யா துரைமுருகன் அவர்களும் இருந்தார்கள்.
ஆனால், அதில்கூட, நம்முடைய அமைச்சர் துரை முருகன் அவர்கள், இனநலமே என்ற அணியில்தான் பேசினார்.
அப்பொழுது கடைசியாக தந்தை பெரியார் பேசு கின்றபொழுது, உங்களுக்கெல்லாம் என்ன தைரியம் இருந்தால், என்னை உட்கார வைத்துக்கொண்டு, என்னு டைய தொண்டில் விஞ்சி இருப்பது பகுத்தறிவா? இன நலமா? என்று பேசுவீர்கள் என்று கேட்டார்.
இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள். இதே இடத்தில், நம் முடைய ஆசிரியர் அவர்களுடைய பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு ஆற்றிய உரை - என்றைக்கும் நம்முடைய காதுகளில் ரீங்காரம் செய்துகொண்டிருக்கின்றன.
அன்றைக்கு ஏராளமான இளைஞர்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, அய்யா துரைமுருகன் அவர்கள், திராவிட இயக்கத்தில் இவ்வளவு இளைஞர்கள் இருப்பதைப் பார்த்து நான் மிகவும் பூரிப்படைகின்றேன் என்று சொல்லிவிட்டு, ஒன்றை சொன்னார்,
‘‘நானெல்லாம் படிப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டேன்; எவ்வளவு தூரத்திலிருந்து நடந்து வந்தேன். அந்தத் துன்பமும், அந்தக் கஷ்டமும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இன்றைக்கு இருக்கின்ற இளைஞர் களுக்கு அந்தக் கஷ்டங்கள் எல்லாம் தெரியுமா? என்று கேட்டால், நிச்சயமாகத் தெரியாது. ஆகவேதான் அவர்களுடைய வீறுகொண்டு எழும் தன்மை இல்லை’’ என்று குறிப்பிட்டார்கள்.
ஏராளமான வரவேற்பு எல்லா பக்கங்களிலும் இருந்து வந்தது
அதேபோல, வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நம்முடைய தலைவர் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச் சியில், அவர் ஆற்றிய உரை - மிகவும் குறிப்பிடத்தகுந்த உரை - விடுதலையில் இரண்டு பக்கங்கள் நிரம்பி வழிந்தன. அந்த உரைக்கு ஏராளமான வரவேற்பு எல்லா பக்கங் களிலும் இருந்து வந்தது என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சி திராவிடர் கழகத்தின் சார்பாக, தாய்க் கழகத்தின் சார்பாக உரிமையோடு, கடமையோடு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனை வரையும் அன்புடன் வருக, வருக என வரவேற்று,
இந்த நிகழ்ச்சிக்குக் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தலைமையேற்று நடத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த அய்ந்தாண்டுகளாக தவறாமல்....
இன்னொன்று, ஒவ்வொரு மாதமும், கடந்த அய்ந் தாண்டுகளாக தவறாமல் தலைவர் ஆசிரியர் அவர்கள், பேராசிரியரை அவருடைய இல்லத்தில் சந்தித்து அளவளாவிவிட்டு வந்தார். அதில் தவறுவதே கிடையாது. மகிழ்ச்சியாக அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இருந்தன என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி,
நம்முடைய மாநில மாணவர் கழக செயலாளர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்கள்.
இந்நிகழ்ச்சியில் தொகுப்புரை வழங்கவிருந்த நம் முடைய பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள், ஒரு சிறு விபத்தின் காரணமாக இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதைத் தெரிவித்து என்னுரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
No comments:
Post a Comment