மறைந்தாரே இராயபுரம் கோபால் வீர வணக்கம்! வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 27, 2021

மறைந்தாரே இராயபுரம் கோபால் வீர வணக்கம்! வீர வணக்கம்!

'அண்ணன் இராயபுரம் கோபால்' என்று அந்த வட்டாரத்தில் அன்பு வாஞ்சையோடு அழைக்கப் படும் கழகத்தின் செயல் வீரர் இரா.கோபால் (வயது 67) நேற்றிரவு (26.12.2021) மறை வுற்றார் என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறன் பட பணியாற்றிய உழைப்புத் தேனீ! கட்டுப்பாட்டின் இலக் கணம்!!  மேலத் தஞ்சை மாவட்ட கழக இளைஞரணித் தலைவராக, பட்டுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக, திருவாரூர் மண்டல திராவிடர்  கழகத் தலைவராக, திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக, கடைசியாக திராவிட விவசாய தொழிலாளரணியின் மாநில செயலாளராக  பணி யாற்றியவர்.

கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுச் சிறையேகிய செம்மல்! தடாவில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்.

இராயபுரத்தில் தம் சொந்த இடத்தில் பெரியார் படிப்பகம், பெரியார் சிலை நிறுவியவர். கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் அந்த வட்டாரத்தில் மதிப்புறு மாமனிதராக உலவிய கருஞ்சட்டை வீரனின் மறைவிற்கு ஆறுதல் எப்படிக் கூறுவது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

அவரின் பிரிவால் சொல்லொணாப் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் வாழ்விணையர், நமது  சகோதரியார் வளர்மதி, மகன் பிரபாகரன், மகள் கோமதி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆறுதல் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

தலைமைக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்துவர்.

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை       

27-12-2021         

No comments:

Post a Comment