இலங்கை அரசு சிறைபிடித்த 68 பேரை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் : மீனவர் சங்கம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 27, 2021

இலங்கை அரசு சிறைபிடித்த 68 பேரை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் : மீனவர் சங்கம் அறிவிப்பு

இராமநாதபுரம்,டிச.27- இலங்கை அரசு சிறை பிடித்துள்ள 68 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என இராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் 68 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் டிச.18, 19 ஆகிய தேதிகளில் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதைக் கண்டித்தும், மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் டிச.20ஆம் தேதி முதல் இராமேசுவரம், மண்டபம், பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மண்டபம் மீனவர்கள் மற்றும்பாம்பன் மீனவர்கள் (26.12.2021) வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்று மீன்பிடிக்கச் சென்றனர்.

இராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இராமேசுவரத்தில் நேற்று (26.12.2021) நடைபெற்றது. மீனவர் சங்க துணைத் தலைவர் எமரிட் தலைமை வகித்தார்.

மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ், சகாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 68 தமிழ்நாட்டு மீனவர்கள், 10 விசைப்படகுகளை இலங்கை அரசு விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். ஜன.1ஆம் தேதி மாலை தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க மீனவர் குழுவை அழைத்துச் செல்வதாக தமிழ்நாட்டு மீன்வளத் துறைஅதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


No comments:

Post a Comment