உத்தராகண்ட் மாநிலத்தில் சம்பவாத் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அரசு விதிகளின்படி சமையற்காரர் சுனிதா தேவி என்பவர் பணியில் அமர்த்தப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சமைத்த உணவை சாப்பிட மாணவர்கள் மறுத்துவிட்டனராம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது, அதில் "சம்பாவத் அரசுப் பள்ளியில் படிக்கும் அனைவருமே பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர். அப்படி இருக்கும் போது இங்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்தவர் பணியில் நியமிக்கப் பட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சமைத்துக் கொடுக்கும் போது, எங்கள் சாஸ்திரநடைமுறைக்குப் பாதிப்பு ஏற்படுகிறது; எங்கள் பிள்ளைகள் அதை தவறுதலாக சாப்பிட்டு விடுவார்கள். ஆகவே அவரை உடனடியாக மாற்றி உயர்ஜாதியினர் படிக்கும் இந்தப் பள்ளியில் உயர்ஜாதியைச் சேர்ந்த சமையற்காரரையே பணியிலமர்த்த வேண்டும்" என்று புகாரில் கூறி இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் இந்த மனுவை கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பிவைத்தார். அவரும் இந்த மனு குறித்து விசாரணை நடத்த சமையற்காரர் உள்ளிட்ட பள்ளி மற்றும் அவ்வூரில் உள்ள முக்கிய நபர்களை அழைத்தார். விசாரணை முடிவில் சமையற்காரர் அரசின் விதிப்படி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் எங்கும் தவறு நடக்கவில்லை என்று கூறினார். ஆனால் இதனை ஏற்காத மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி அப்பள்ளியில் பணிபுரியும் உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் மனைவி புஷ்பா பட்டு என்பவரை அப்பள்ளி தலைமையாசிரியரின் சிபாரிசின் பேரில் சமையற்காரராக நியமனம் செய்து உத்தரவிட்டார். மேலும் உயர்ஜாதியினர் படிக்கும் பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை நியமித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று வாய்மொழி உத்தரவாதம் அளித்தார்.
இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி ஆர்.சி. புரோகித் கூறும் போது “நாங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் களிடம் விளக்கிக் கூறியுள்ளோம். மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுனிதா தேவி அங்கு வேலை செய்வது அவருக்கு பாதுகாப்பானதாக இருக்காது, இருப்பினும் இது தொடர்பாக சுனிதா தேவி புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அவர் அங்கு பணி புரியவிருப்பம் இல்லை என்று எழுதிக் கொடுத்து விட்டார்.
தற்போது எங்கும் காலிப் பணியிடம் இல்லாத காரணத்தால் அவரைத் தற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளோம். விரைவில் வேறு பள்ளியில் பணி இடம் காலியாகும் போது அவருக்கு வேலை தருவோம், இந்த விவகாரம் தொடர்பாக முழு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளேன்" என்று கூறினார்.
இதுதொடர்பாக உத்தராகண்டைச் சேர்ந்த ஒடுக்கப் பட்டோர் அமைப்பு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது, அந்த அமைப்பைச் சேர்ந்த திலிப் மண்டல் என்பவர் கூறும் போது “அரசு ஒருவரை விதிப்படி நியமனம் செய்துள்ளது, ஜாதியின் பேரால் அந்த நியமனத்தை ரத்து செய்து உயர்ஜாதியைச் சேர்ந்த ஒருவரை நியமித்து அதிகாரிகளே ஜாதிவெறிக்குத் துணை போயுள்ளனர். இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்" என்று கூறினார்.
இதே மாநிலத்தில், கல்வி அமைச்சரை கோவிலுக்குள் விடாமல் அவரது ஓட்டுநர் கோவிலுக்குச் சென்று 'பிரசாதம்' வாங்கி வந்து கொடுத்ததை 2019 ஆம் ஆண்டு அந்த அமைச்சரே சட்டமன்ற கூட்டத் தொடரில் கூறியதுண்டு; இப்பொழுது கல்வித் துறையே அரசால் நியமிக்கப்பட்ட ஒருவரை ஜாதியின் பேரால் பதவி நீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி பள்ளியின் சமையற் காரராக நியமிக்கப்பட்டநிலையில், எதிர்ப்பின் காரணமாக வேறு ஓர் ஊருக்கு மாற்றப்பட்டார். திராவிடர் கழகம் கடுமையாகக் கண்டித்துத் தீர்மானத்தையும் நிறைவேற்றிய நிலையில், உடனடியாக அந்த மாறுதல் ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் அதே பள்ளியில் பணியாற்றினார் என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.
உ.பி. முதல் அமைச்சர் தாழ்த்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுவதற்குமுன் அங்கு வாழும் மக்களுக்கு அரசு அதிகாரிகள் சோப், பவுடர் போன்ற பொருள்களைக் கொடுத்தது நினைவிருக் கட்டும். தமிழ்நாடு பெரியார் மண் - திராவிடப் பூமியின் அருமை இப்பொழுது தெரிகிறதா?
உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்ததில் உள்ள கொடுமை என்னவென்றால் சம்பந்தப்பட்டப் பெண்ணை பணி நீக்கம் செய்ததுதான்.
இப்பொழுது அங்கு ஏற்பட்டுள்ள நிலை என்ன? தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகப் பிள்ளைகள் உயர் ஜாதிப் பெண் சமைக்கும் உணவை சாப்பிட மறுத்து விட்டனர். சபாஷ்! தந்தை பெரியார் உத்தராகண்ட்டிலும் காலடி பதித்து விட்டார்! வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!
No comments:
Post a Comment