எட்டு கோடி மக்களின் சிந்தனையையும் -வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்த தத்துவத் தலைவர்தான் தந்தை பெரியார்!
தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் கருத்துரை
சென்னை, டிச.30 தந்தை பெரியார் தனித் தத்துவமிக்க தலைவர்; தம் சிந்தனையால் எட்டு கோடி தமிழ் மக்களின் சிந்தனையையும், வாழ்க்கை முறையையும், செயல்பாட் டையும் மாற்றி அமைத்தவர் தந்தை பெரியார் என்றார் தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரான பழனிவேல் தியாகராசன் அவர்கள்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்
கடந்த 23.12.2021 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் மாண்பமை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மானமிகு பழனிவேல் தியாகராசன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தந்தை பெரியார் நினைவு நாளினையொட்டி இந்தக் கருத்தரங்கத்திற்கும், நூல் வெளியீட்டு விழாவிற்கும் ஏற்பாடு செய்த அனைவருக்கும், வரவேற்புரையாற்றிய வழக்குரைஞர் மதிவதனி அவர்களுக்கும்,
நூல் வெளியிட்ட பொத்தனூர் க.சண்முகம் அவர் களுக்கும், நோக்கவுரையாற்றிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், முன்னிலை வகிக்கும் வீ.குமரேசன் அவர்களுக்கும், வீ.அன்புராஜ் அவர்களுக்கும், வி.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், இரா.தமிழ்ச்செல்வன் அவர் களுக்கும்,
இங்கே சிறப்பாக கருத்துரையாற்றிய பத்திரிகையாளர் ராதிகா சுதாகர் அவர்களுக்கும்,
சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர் களுக்கும், தலைமையுரையாற்றவிருக்கின்ற ஆசிரியர் அவர்களுக்கும், நன்றியுரையாற்றவிருக்கின்ற தே.செ. கோபால் அவர்களுக்கும், இணைப்புரை ஆற்றிக்கொண்டி ருக்கின்ற பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார் திடலில் மூன்றாவது முறை...
இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் மூன்றாவது முறை யாக இந்தத் திடலில், இந்த அரங்கத்தில் பங்கேற்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.
முதன்முறையாக 2015 ஆம் ஆண்டில், நீதிக்கட்சி யின் நூற்றாண்டு தொடக்க விழாவிற்கு ஆசிரியர் அவர்கள் ஏற்பாடு செய்தபொழுது,
மேனாள் தலைவர்களுடைய வாரிசுகளைக் கண்ட றிந்து, அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், கண்டறிந்த வாரிசாக நான் இங்கே வந்து பங்கேற்றேன்.
2016 இல் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு, 2017 இல் நீதிக்கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்றபொழுது, இங்கே சட்டமன்ற உறுப்பி னராக மதிப்பிற்குரிய எங்கள் மேனாள் பொதுச் செயலாளர் அய்யா பேராசிரியர் அவர்களோடு மேடையில் அமர்ந்து உரையாற்றினேன்.
பேராசிரியர் அவர்களோடு பங்கேற்றேன்
பேராசிரியர் அவர்களோடு நான் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி அதுதான். அந்த நினைவுகள் எல்லாம் என் மனதில் மகிழ்ச்சியோடு பசுமையாக இருக்கின்றன.
இன்றைக்கு இங்கே நான் வருவது மூன்றாவது முறை - அமைச்சராக - ஆசிரியர் அவர்கள் கூறும்பொழுது, சில நாள்களுக்குமுன் நீதிக்கட்சியின் நூற்றியோராவது நிறைவு நாள் டிசம்பர் 20 ஆம் தேதி என்றார். ஆகவே, இன்றைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் இந்நிகழ்வில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையினுடைய விளைவு - பலன் - அவர் மறைந்த பிறகுதான் - அறிய வரும் - தெரியவரும்.
ஒரு மனிதனின் மறைவிற்குப் பின்தான், அவருடைய முழு அடையாளம் தெரிய வரும்
என்னுடைய தந்தையார் திடீரென்று 2006 ஆம் ஆண்டில் மறைந்தபொழுது, டோக்கியோவிலிருந்து நான் அவசர அவசரமாகத் திரும்பினேன்.
என் தந்தையார் பல ஆண்டுகளாக அரசியலில் - இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர்; ஒருமுறை பேரவைத் தலைவர்; அதற்குப் பிறகு நான்கு நாட்களுக்கு அமைச்சராக இருந்தார். அரசியல் வெற்றி என்று பார்த்தால், சாதாரணமானதுதான் - மிகச் சிறப்பு என்று சொல்ல முடியாது.
ஆனால், ஊரே அசந்து போகின்ற அளவிற்கு, அவருடைய இறுதி நிகழ்வில் மக்கள் பங்கேற்று, அவ்வளவு உணர்ச்சிவயத்துடன் அவரை வழியனுப்பியதை நான் கண்டேன். ஒரு மனிதனின் மறைவிற்குப் பின்தான், அவருடைய முழு அடையாளம் தெரிய வரும்.
அந்த அடிப்படையில் சிலர், அவர்களுடைய வாரிசு களுக்கு சொத்து, பொருள் சேர்த்துவிட்டுச் செல்வார்கள்.
சிலர் அதைவிட சிறப்பாக, எழுத்தாளர்களாக இருந்து, கருத்து, கவிதை, புத்தகங்கள் என்று வரலாற்றைப் படைத்துவிட்டுச் செல்வார்கள்.
இன்னும் சிலர், ஓர் இயக்கத்தையே உருவாக்குகின்ற அளவிற்கு, காரல்மார்க்ஸ் போன்று, ஒரு தத்துவத்தை உருவாக்கி, அதுவரை சிந்திக்காத ஒரு பொதுவுடைமை கருத்தை உருவாக்கி விட்டுச் செல்வார்கள்.
தந்தை பெரியார் ஒரு தனித்துவம் பெற்றவர்
அந்த வரிசையில் பார்த்தால், தந்தை பெரியார் ஒரு தனித்துவம் பெற்றவர்.
ஏனென்றால், சில நாள்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில் கேட்டார்கள், வெற்றி என்றால் எந்த அடிப்படையில் நீங்கள் செய்த பணிக்கு எதை அடையாளம் என்று கருதுவீர்கள்? என்று.
நான் அதற்குப் பதில் சொன்னேன், நான் நிதியமைச்சர் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டினுடைய நிதிநிலை, நாங்கள் ஆட்சிக்கு வரும்பொழுது இருந்ததைவிட, நாங்கள் இருக்கும் காலத்தில் சிறப்பாக இருக்கவேண்டும்; அது முதல் வெற்றி.
அதற்குமேல், சிஸ்டமேட்டிக்காக, சில கருவிகள், சில விதிமுறைகள் போன்றவற்றை எல்லாம் நிரூபித்து, அதன் மூலம் இந்தப் பாதையிலிருந்து விலகாமல், ஒரு மாடலை உருவாக்கினேன் என்றால், அது அதற்கடுத்த வெற்றி.
அதற்கடுத்து, என் தத்துவத்தை இந்த நிதித்துறையின் கலாச்சாரத்தில், ஓர் அடையாளமாக்கி, அதை பலர் பின்பற்றுகின்ற அளவிற்கு, தத்துவத்தை உருவாக்கி வைத்துவிட்டுப் போனேன் என்றால், அதைவிட சிறப்பு.
அல்டிமேட் அச்சிவ்மெண்ட்
அவற்றையெல்லாம் மீறி, என்னிடம் பயிற்சி பெற்று, என்னுடன் இருந்து உழைத்து, அதனால், அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றால், அதுதான் எனக்கு அல்டிமேட் அச்சிவ்மெண்ட் என்று சொன்னேன்.
அந்த அடிப்படையில் பார்த்தால், 8 கோடி மக்கள் இருக்கின்ற தமிழ்ச் சமுதாயத்திற்கு, நம் அனைவருடைய வாழ்க்கை முறையையும், சிந்தனையையும், தத்துவத்தை யும், செயல்பாட்டையும் மாற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். எல்லாவற்றையும்விட பெரிய வெற்றி அதுதான்.
அதற்குப் பெரிய அளவில் சில எடுத்துக்காட்டுகள் இருக்கலாம்; சின்னச் சின்ன அளவில் சில உதாரணங்கள் இருக்கலாம்.
நான் ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் சொல் கிறேன்.
எட்டு கோடி மக்களுக்கும் இருக்கின்ற அரசாங்கத் தினுடைய தலைவர் எங்கள் முதலமைச்சர் அவர்கள், இங்கே நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் பட்டியலைப் படித்தார்.
எத்தனை வகையில் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்; சமூகநீதிக்காக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார் என்று. அந்தத் திட்டங்களுக்கான சில குழுக்களில் நானும் உறுப்பினராக இருக்கிறேன்.
செப்டம்பர் 17: சமூகநீதி நாளாக அறிவிப்பு - உறுதிமொழியேற்பு!
ஆனால், முக்கியமான ஒரு நிகழ்வு - தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூகநீதி நாளாக அறிவித்து, அனைத்து கிட்டத்தட்ட 10 லட்சம் அரசு பணியாளர்களும், அதிகாரத்தில் இருக்கின்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்து, அந்த வழியில் நாம் செல்வோம் என்று, ஒவ்வொரு முறையும் ஆண்டுதோறும் சொல்லவேண்டியது என்பது சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு. அந்தத் தத்துவத்தின் நீடிப்பு அது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் என்று ஒன்று உண்டு. மாநிலங் களுடைய நிதியமைச்சர் பங்கேற்று பல விவாதங்கள் நடைபெறும். அந்தக் கவுன்சிலில், வாக்கெடுப்பு முறை யைப் பார்த்தீர்களேயானால், ஒன்றிய அரசு, தனக்கு வேண்டியதை எப்படி வேண்டுமானாலும் சாதித்துக் கொள் ளலாம்; வேண்டாம் என்பதை, எப்படியாவது தடுத்துவிட லாம் என்கின்ற ஒருமுறையை உருவாக்கி வைத்திருக் கிறார்கள்.
அந்த முறையை நான், பல கட்டுரைகளில், அதிலுள்ள தவறுகளை எப்படியெல்லாம் திருத்தலாம் என்று எழுதியிருக்கிறேன். ஆனால், இன்றைக்கு இருக்கின்ற முறையில்தான் நாம் செயல்படவேண்டும்.
அப்பொழுது சில விவாதங்கள் வந்தபொழுது, அரசி யலில் இருக்கும் ஒருதரப்பினர், ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும்; இதெல்லாம் ஒருமனதாக ஏற்கப்படுகிறது என்று பலமுறை திருப்பித் திருப்பிக் கூறினார்கள்.
நாங்கள் எல்லாம்
சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்தவர்கள் என்றேன்!
அப்பொழுது நான், மாண்புமிகு ஒன்றிய நிதிய மைச்சரிடம் கூறியது, ‘‘ஒருமனதாக என்பது எந்த சமுதாயத்திற்கும் நல்லது அல்ல; ஒரு ஜனநாயக நாட்டில், வெவ்வேறு கருத்துகளைக் கேட்டு, விவா தித்து, பெரும்பான்மை ஆதரவு பெற்ற கருத்தோ அல்லது கன்சன்சஸ் என்கின்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளலாமே தவிர, ஒருமனதாக என்று சொல்வது - விரும்பக்கூடிய முடிவல்ல. ஏனென்றால், நாங்கள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்தவர்கள்.
என் கருத்து, என் கருத்துதான். அந்தக் கருத்தை மீறி, வாக்களித்து நீங்கள் வேறொரு முடிவிற்கு வந்தீர்கள் என்றால், சிஸ்டத்தில் அதுதான் வருகிறது; ஆகவே, நான் அதனை எதிர்க்கவில்லையே தவிர, அதனால், என் கருத்தை மாற்றிக் கொள்கின்றவன் அல்ல'' என்று நான் கூறினேன்.
இதை நாட்டளவிலோ, பெரிய விவாதம் செய்தோ நாம் சிந்திக்கவேண்டாம்; கடந்த 10 ஆண்டுகளாக வேறொரு ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது.
முந்தைய ஆட்சியினரால் குனிந்து வளைந்து கும்பிட்டவர்கள் - இன்றைக்கு நிமிர்ந்தார்கள்!
அந்த ஆட்சியினுடைய கலாச்சாரங்கள் சில என்னை வருந்தத்தக்க சூழ்நிலைக்குத் தள்ளின. நான் அமைச்சராகி, கோட்டைக்குச் செல்லும் பொழுதெல்லாம், சீனியர் பி.ஏ., ஸ்பெஷல் பி.ஏ., முதல் அலுவலக உதவியாளர் வரைக்கும் - ஓர் அமைச்சர் வரும்பொழுது, குனிந்து வளைந்து வணக்கம் சொல்லும் பழக்கம் கண்டு இரண்டொரு நாள் எனக்கு மனம் வருத்தமாக இருந்தது. அதைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், நமக்குத் தெரியும், அவர்கள் அதை யாரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள் என்று.
ஒரு வார காலத்திற்குப் பிறகு, என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
நான் சொன்னேன், ‘‘நாமெல்லாம் சுயமரியாதை இயக் கத்திலிருந்து வந்தவர்கள்; பகுத்தறிவு நாட்டில் இருக்கிறீர்கள் - ஏன் வளைகிறீர்கள்; கும்பிடுங்கள், நானும் கும்பிடுகிறேன். வளைகின்ற பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்’’ என்றேன்.
மூன்று மாதங்கள் கழித்து அவர்களைப் பார்த் தால், யாருக்காகவும் அவர்கள் வளைவது கிடையாது; நிமிர்ந்து நின்றுதான் கும்பிடுகிறார்கள், கோட்டையில்.
இதற்குமேலும் ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால், எங்கள் பரம்பரையைப்பற்றி உங்களுக்குத் தெரியும் - மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரம், ஆயிரங்கால் மண்டபம் கட்டிய வம்சத்திலிருந்து வந்தவர்கள் நாங்கள். அந்தப் பழக்கத்தை நாங்கள் தொடர்ந்து, எங்கள் முன்னோர் வழியில் சென்று கொண்டிருக்கின்றோம்.
சின்ன வயதிலிருந்தே அதே பழக்கத்தில் நாங்களும் வளர்ந்து கொண்டு வந்திருக்கிறோம். நான் பல ஊடகங் களில் தெரிவித்ததுபோல, எங்களுக்கு இருக்கின்ற நம்பிக் கைக்காக நாங்கள் செயல்படுகிறோமே தவிர, இந்த நாளில், இங்கே இருக்கவேண்டும்; இப்படி நடக்கவேண்டும்; அப்படி நடக்கவேண்டும் என்பதெல்லாம் எங்களுக்குப் பழக்கமில்லை.
யாரோ விருப்பமிருக்கின்றவர்கள், கட்டி விட்டிருக்கி றார்கள், நான் எடுக்காமல் விட்டிருக்கிறேன். நான் போய், கேட்டுக் கட்டவில்லை.
அது என்னுடைய வழி - நம்முடைய வீட்டில் பிள் ளைகளை வளர்க்கும்பொழுது, அவர்களிடம் அரசியலைப் பற்றி பேசவேண்டியதில்லை என்று நான் நினைத்தி ருந்தேன்.
நாம் பகுத்தறிவு குடும்பம்தானே? என்றான் என்னுடைய மகன்
ஒருநாள் வெளியூரிலிருந்து வீட்டிற்குச் சென்றபொழுது, என்னுடைய மூத்த மகன் பழனி என்னிடம், ‘‘ஏம்பா, ஒரு பணியாளர் வந்து, அம்மாவிடம், இந்தப் பூஜை, அந்தப் பூஜை அப்படி செய்யவேண்டும், இப்படி செய்யவேண்டும்; படையல் போடவேண்டும் என்று சொல்லிக் கொண்டி ருந்தார். நாம் பகுத்தறிவு குடும்பம்தானே, ஏன் இதுபோன்ற வற்றைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்'' என்று கேட்டான்.
ஆகவே, சிறுவர்கள்கூட, வாழ்க்கை முறையை பெற் றோரிடம் கற்றுக்கொள்கிறார்கள் என்ற மகிழ்ச்சியோடு, நம்பிக்கை உருவாக்கும் வகையில் நடந்த அந்த ஒரு சம்பவத்தை நான் நினைவு கூர்கிறேன்.
கடைசியாக ஒருவருக்கு நான் நன்றி சொல்லி முடிக்க வேண்டும்.
எழுத்தாளர் பெருமாள் முருகன்
அவர் யார் என்றால், சிவகங்கையில் ஓர் அரசியல்வாதி இருக்கிறார். பொதுத் தேர்தலில் அந்த அளவிற்கு வெற்றி இல்லை என்றாலும், இந்த ஸ்கவுட் தேர்தலிலும் அந்த அளவிற்கு வெற்றி இல்லாதவர்.
அவர் ஏற்கெனவே மறைமுகமாக எனக்கு ஒரு நன்மை செய்தார்.
ஏதோ ஒரு காரணத்திற்காக, நான் பதில் சொல்லியிருக் கும்பொழுது, ஒரு பெரிய சர்ச்சை உருவானபொழுது, எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள், எனக்கு ஆதரவாக ஒரு கவிதை எழுதினார்.
அந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்ததால், தமிழில் இருந்ததை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து, பிரேம் செய்து, அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறேன்.
அதை என்னுடைய மகன்களிடமும், துணைவியாரி டமும் நான் சொன்னேன்,
‘‘இதுவரைக்கும் நான் அரசியலில் செய்த எந்த செய லையும்விட, பெருமாள் முருகன் அவர்கள், பிற்படுத் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நான் ஒரு போராளியாக இருக்கிறேன் என்று கூறுவது என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய பெருமையாகும். ஆகவேதான், அதை பிரேம் செய்து வைத்திருக்கிறேன்'' என்றேன்.
அந்த நன்மையையும் அதே நபர்தான் செய்தார். ஆகவே, அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
ஏன் இதை இங்கே சொல்கிறேன் என்றால், இன்னொரு நன்மையையும் அவர் செய்தார்.
ஏதோ ஒரு ஊடகத் துறைக் கூட்டத்தில், என்னைப்பற்றி சொல்லி, ‘‘அவருடைய பின்புலம் நோண்டப்படும்'' என்று அவர் ஓர் எச்சரிக்கை வைத்தார்.
அந்த சம்பவத்தின் விளைவாக, எனக்கு மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்ற நிகழ்வு நடந்தது.
1928 இல் ‘குடிஅரசு' தலையங்கம்
நண்பர் ஒருவர், 25.3.1928, ‘குடிஅரசு' தலையங்கத்தை அனுப்பி வைத்தார். இதுவரையில் என்னுடைய வாழ்க்கை யில் இது இருக்கிறது என்று தெரியாது. அதை நோண்டி எடுத்து, எனக்கு அனுப்பி வைத்தார்.
‘‘தலைவர் உத்தமபாளையம் முதலியார் மறைந்தார்’’
பெரியார் எழுதிய தலையங்கம் அது. அந்தத் தலை யங்கத்தின் தலைப்பு ‘‘தலைவர் உத்தமபாளையம் முதலி யார் மறைந்தார்'' என்று என் கொள்ளுத் தாத்தாவைப்பற்றி பெரியார் எழுதிய தலையங்கம்.
நீதிக்கட்சி எப்படி ஆரம்பித்தது; அதில் அவருடைய பங்கு என்ன? தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் அவ ருடைய பங்கு என்ன? எத்தனை வகையில் சமுதாயத் திற்குப் பணி செய்தார் என்பதைப்பற்றியெல்லாம் அந்தத் தலையங்கத்தில் பெரியார் அவர்கள் தீட்டியிருந்தார்.
அதைப்பற்றி என்னுடைய குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டேன். இங்கே சிறப்பாக நீங்கள் வைத்திருக்கும் இணைய தளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்பதினால், அதனை நான் பிரேம் போட்டு வைக்கவில்லை.
அதற்காகவும் அந்த சிவகங்கை நபருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
மூன்று மாதங்களுக்கு முன்புதான்
எனக்குத் தெரிய வந்தது
ஏனென்றால், என் தாத்தாவிற்கும், அய்யா பெரியாருக் கும் இருந்த உறவு எனக்குத் தெரிந்ததே தவிர, என் கொள்ளுத் தாத்தா அளவிற்கு அந்த உறவு இருந்ததுபற்றி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் எனக்குத் தெரிய வந்தது.
ஆகவே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பதை நான் கடமையாகவும், பெருமையாகவும் கருதித்தான் இங்கே வந்திருக்கிறேன்.
பல இயக்கங்கள், பல கட்சிகள் பல காரணங் களுக்காக செயல்படுவார்கள். எனக்கு எப்பொழு துமே ஒரு ஆச் சரியமும், பெருமையும், ஏன் ஓரள விற்கு அதிர்ச்சியையும் உருவாக்குவது ஒன்று உண்டு.
எப்படி பெரியார் அவர்கள், நிதியையும், கலாச் சாரத்தையும், கருத்தையும், உழைப்பு முறையையும் உருவாக்கி, அதைப் பின்பற்றி, ஆசிரியர் அவர்களும், அவர்களுக்குப் பிறகு வருகின்றவர்களும் - இவ்வளவு சிறப்பாக அவருடைய வாழ்க்கையினு டைய முக்கிய இலக்குகளை, இன்னும் தொடர்ச்சி யாக, அவர்களுடைய இலக்குகளாக எடுத்து நடத்து கின்றனர் என்கிற வியப்பு மேலிடும்.
புத்தகங்களை வெளியிட்டு - புத்தகம் வாங்கும் பழக்கத்தைத்
தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறீர்கள்!
சிறப்பான நூலகம், சிறப்பான இணைய தள வெப் பேஜ், ஹோம் பேஜ் - ஆண்டுதோறும் சிறப்பான நூல்கள் -வரலாற்று சிறப்புமிக்க - வரலாற்றில் இருந்த உதாரணங்கள், உரைகள், நிகழ்வுகளையெல்லாம் எடுத்து நடத்துகின்றனர் என்கின்ற வியப்பு மேலிடும்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு நான் வரும்பொழுதும், நூல்களை வெளியிட்டு, அதை சிலர் வாங்கும் பழக்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, இது பல தலைமுறையினருக்குப் பலனாக இருந்திருக்கிறது.
அவர்களுடைய பணி இன்னும் வருங்காலத்தில், பல தலைமுறையினருக்குப் பலனாக இருக்கவேண்டும் என்று விரும்பி, வாழ்த்தி, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, நான் விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு மாண்பமை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மானமிகு பழனிவேல் தியாகராசன் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment