- முனைவர் க.தமிழமல்லன்
பெரியாரின் பிறங்கடையாய்ப் பெருமை யோடு
பெரும்பணிகள் ஆற்றுபவர் போர்க்கு ணத்தார்!
தெரியாத பேர்களுக்கும் அன்பைக் காட்டும்
தெளிவான பண்பாளர்! உழைப்பின் குன்றம்!
சரியான பகுத்தறிவைக் கடைப்பிடிக்கும்
சார்பில்லா நடுநிலைக்கோர் எடுத்துக் காட்டு!
புரியாத மாந்தர்கள் புரிந்து கொண்டால்
போற்றுவார்கள், வணங்குவார்கள், அய்யா வாழ்க!
ஆசிரியர் ஏன்றாலே அனைவ ருக்கும்
அறிமுகமே தேவையில்லை தெரியும் நன்றாய்!
பேசரிய பண்புகளின் தொகுப்பாய்க் காண்பார்
பேச்செல்லாம் எழுத்தெல்லாம் கொள்கை சொல்லும்!
கூசுகிலா ஜாதிமக்கள் நுழைவுத் தேர்வைக்
கொண்டுவந்து தமிழகத்தில் திணிக்கின் றார்கள்!
ஆசிரியர் கி.வீரமணி களத்தில் நின்று,
அடியோடு வீழ்த்திடவே போர்செய் கின்றார்!
திருக்குறளைப் பழிக்கின்ற திருடர் கூட்டம்,
திராவிடத்தின் போர்த்தலைவர் முழக்கம் கேட்டு
மருண்டோடும்! ‘நீட்'டென்னும் நுழைவுத் தேர்வை
மலைபோலத் தடுக்கின்ற மறவர் அய்யா!
கருவினிலே அழிந்துவிட்ட மொழியை எல்லாம்
கணக்கில்லாத் தொகைகொட்டி வளர்க்கும் போக்கைப்
பெருவலிவாய் இடித்துரைக்கும் அய்யா வாழ்க!
வீரமணி என்றென்றும் வென்று வாழ்க!
வீழாத இனங்காக்க மொழியைக் காக்க
வீரர்தம் படைநடத்தும் தலைவர் வாழ்க!
விடுதலையை உண்மையேட்டை வெளியார் காண
சோராமல் உழைத்துவரும் அறிஞர் செம்மல்,
சுறுசுறுப்பின் அடையாளம்! விரிந்த நெஞ்ச
வீரமணி நூறாண்டைத் தாண்டி வாழ்க!
வெற்றிபெறும் பகுத்தறிவு - வீழும் மூடம்!
No comments:
Post a Comment