தமிழர்களைக் கரம்பிடித்து அழைத்துச் செல்பவர் நமது ஆசிரியர் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
ஆசிரியர் பேசுகிறார் என்றால் ஆதாரம், ஆவணம் பேசுகிறது என்று பொருள் - பேராசிரியர் ஜவாஹிருல்லா
தமிழர் உரிமைக்கு ஆசிரியர் தேவை - உடல் நலம் கருதி சுற்றுப் பயணத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - தோழர் முத்தரசன்
திராவிடர் கழகத்தை எவராலும் அழிக்க முடியாது - மாண்புமிகு அமைச்சர் பொன்முடி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (2.12.2021) பல வகைகளிலும் சிறப்பாக நடைபெற்றது. முதல் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் வாழ்த்து, பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்திப்பு, கழகத் தோழர்கள் சந்திப்பு, சந்தா அளிப்பு, பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளிப்பு - தலைவர்களின் உரைவீச்சு என்று எல்லா வகையிலும் சிறப்பான கொள்கைப் பரப்பு விழாவாக நடைபெற்றது.
தமிழ்நாடெங்கும் கருத்தரங்குகளும், கழகக் கொடியேற்று நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.
முதல் அமைச்சர் நேரில் வாழ்த்து
நேற்று காலை 9.30 மணியளவில் சென்னை அடையாறு ஆசிரியர் இல்லத்தில் முதல் அமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகத் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சர்கள் துரை. முருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத் தலைவர், புதிதாக வெளியிடப்பட்ட இயக்க நூல்களை அளித்து நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
பெரியார் திடலில் பிறந்த நாள் விழா
சென்னை பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் பிறந்த நாள் விழா காணும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் அவர்தம் வாழ்விணையர் வீ. மோகனா அவர்களுக்கும் வாழ்த்துகள் கூற வந்த - தமிழ்நாடெங்குமிருந்தும் வந்திருந்த இயக்கப் பொறுப்பாளர்களைச் சந்தித்தனர்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தொடங்கி, கழகத் தோழர்கள் கியூவில் நின்று கழகத் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். தனியாக அமைக்கப்பட்டிருந்த உண்டியலில் - உறைகளில் விவரம் எழுதி நன்கொடைகளை அளித்தனர்.
முற்பகல் 11.15 மணி அளவில் பாராட்டு - வாழ்த்தரங்கம் தொடங்கப்பட்டது.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். கழகத்தின் வெளியறவுச் செயலாளர் கோ. கருணாநிதி நோக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தனது உரையில் குறிப்பிட்டதாவது: இன்றைக்குத் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். 89 ஆண்டில் 79 ஆண்டுப் பொது வாழ்க்கை என்னும் விகிதாசாரம் இவருக்கு மட்டுமே உண்டு.
அதே போல் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா தலைமையில் தி.மு.க. உருவான அந்தக் கால கட்டத்தில் மாணவர் வீரமணிக்கு வயது 16. கழகத்தில் இவரை ஆற்றுப்படுத்திய அவரின் மூத்த அண்ணன் கி.கோவிந்தராசன் மற்றும் சுற்றியிருந்த தோழர்கள் அனைவரும் தி.மு.க.வுக்கு சென்று விட்ட நிலையில், 16 வயதே நிறைந்த மாணவர் வீரமணி மட்டும் தனித்த சிந்தனையாளராக உறுதி குலையாதவராக தந்தை பெரியாரே எம் தலைவர், திராவிடர் கழகம் எனது கழகம் - அதன் கொள்கைகளே எமக்கானது - என்பதில் தெளிவாக, உறுதியாக இருந்தார். பொதுவாக ஒரு பதினாறு வயது என்கிறபோது, பிறரைச் சார்ந்துதான் முடிவெடுப்பார்கள். அதற்கு முற்றிலும் விதி விலக்காக நின்றார் நமது ஆசிரியர். அன்று தொடங்கி தந்தை பெரியார் மறைவு வரையிலும் தந்தை பெரியாரை அகலாது - பயணித்தார். அய்யாவின் மரணத்துக்குப் பிறகும் இன்று வரை, ஏன் நாளையும் தந்தை பெரியார் விட்டுச் சென்ற கொள்கைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக - அதே பணியாகவே இருந்து வருகிறார்.
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்ற போராட்டத்தின் வெற்றியையும், தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார்.
தந்தைபெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக முதல்அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததும், அந்நாளில் தந்தை பெரியார் கொள்கைகளை முன்னிறுத்தி அரசு அலுவலகங்களில் அனைவரும் உறுதிமொழி எடுக்கச் சென்றதும் மிக முக்கியமான வரலாற்றுப் பிரகடனமாகும். இந்த நிகழ்ச்சி நமது தலைவரைப் பெரும் உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.
திராவிட மாடல் ஆட்சியாக இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கக் கூடிய ஆட்சியாக தி.மு.க. ஆட்சி ஒளிவீசுகிறது. இந்த ஆட்சிக்கு வரும் எதிர்ப்புகளை எதிர் கொண்டு பாதுகாப்பது கருஞ்சட்டைப் படையின் முக்கியமான கடமை என்றும், கழகத் தலைவர் அறிக் கையின் வாயிலாகக் குறிப்பிட்டதையும் கழகத் துணைத் தலைவர் தமது தலைமை உரையில் சுட்டிக் காட்டினார்.
நூல் வெளியீட்டு விழா
'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' ஆண்டு விழா மலரை திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் வெளியிட்டார். Worthy Living why and How? Asiriyar K. Veeramani அவர்களால் எழுதப்பட்ட நூலினை, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹில்லா வெளியிட்டார். "வாழ்வியல் சிந்தனைகள்" (தொகுதி - 16) (ஆசிரியர் கி. வீரமணி) நூலை இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் வெளியிட்டார். Carry torch forward - Asiriyar K. Veeramani எனும் நூலினை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு முனைவர் க. பொன்முடி வெளியிட்டார்.
அந்நூல்களை முறையே திராவிடர் கழக அமைப்புச் செயலாளர்கள் வீ. பன்னீர்செல்வம், ஊமை செயராமன், ஈரோடு சண்முகம், திராவிடன் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செய லாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் தனது உரையில் பொதுவாக 80 வயதை அடைந்தவர்களை கையைப் பிடித்து அழைத்துச் செல்லுவார்கள். ஆசிரியர் 89 வயது அடி எடுத்து வைத்தாலும், நம்மைக் கைப் பிடித்து அழைத்துச் செல்லக் கூடியவர் என்றார்.
பகுத்தறிவுக் கருத்துகளை எழுதி வந்தவர் இப் பொழுது வாழ்வியல் சிந்தனைகளை எழுத ஆரம் பித்து விட்டாரா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'வாழ்வியல் என்றால் பகுத்தறிவுக்குச் சம்பந்தம் இல்லை என்று அத்தகையவர்கள் நினைக்கிறார்கள்!' என்று ஒரு மட்டை அடி கொடுத்தார்.
பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவா ஹிருல்லா அவர்கள் தனது உரையில், "பொதுவாக நாங்கள் பிறந்த நாள் விழாக்களில் பங்கேற்பது கிடையாது. ஆனாலும் ஆசிரியர் அவர்களின் அர்ப்பணிப்புத் தொண்டு என்பது நமது சமுதாயத்துக்கானது, பிற்போக் குச் சக்திகளுக்கு எதிரானது, இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவையானது என்கிறபோது இத்தகு விழாக்களில் பங்கு ஏற்பது அவசியமாகிவிட்டது.
ஆசிரியர் பேசுகிறார் என்றால் ஆதாரங்கள், ஆவணங்கள், தரவுகள் பேசுகின்றன என்று பொருள். அவர் உரையை இதே இடத்தில் முதன் முதலாக முசுலீம் லீக் மாநாட்டில் 1980இல் கேட்டேன். புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு அவர் ஆதாரப் பூர்வமாகப் பேசியதைக் கேட்டபோது, பார்த்தபோது நாமும் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று கருதினேன்" என்றார்.
"சமூகநீதிப் பிரச்சினையாக இருந்தாலும், மதச் சார்பின்மை பிரச்சினையாக இருந்தாலும் முதல் குரல் வெடித்துக் கிளம்பக் கூடிய இடம் இந்தப் பெரியார் திடல்தான் - நமது ஆசிரியர்தான்" என்றார்.
"ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ஆசிரி யரின் 'வாழ்வியல் சிந்தனைகள்' என்னும் இந்நூல் 57 தலைப்புகளில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத் துப் பிரச்சினைகளையும் பேசுகிறது - ஒரு கலைக் களஞ்சியம் என்று சொல்லத் தோன்றுகிறது" என்றார்.
தோழர் இரா. முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் தன் கருத்தாகக் கூறியதாவது: ஆசிரியர் என் தந்தை; நான் மகனாக இருந்து பேசுகிறேன்.
ஒருமுறை தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியது - என் நினைவிற்கு வருகிறது. தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு வெறிச் சோடிப் போன தமிழ்நாட்டை அவ்வாறு ஆகாமல் காப்பாற்றுபவர் வீரமணி என்று சொன்னது மிகவும் உண்மை.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
திராவிடர் கழகத்தில் கொள்கை உணர்வோடு அர்ப்பணித்துப் பணியாற்றும் தொண்டர்கள், இளைஞர்கள் இருக்கிறார்கள். பெண்கள் இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டர்கள் நிறைந்த கழகம். விடுதலை சந்தா என்று கேட்டால் கொடுக்கிறார்கள். நிதி கேட்டாலும் கொடுக்கிறார்கள். போராட்டம் என்றால் வருகிறார்கள். சிறைச்சாலை என்றாலும் சிரித்த முகத்தோடு வருகிறார்கள்.
அப்படி ஒரு மகத்தான இயக்கம் இது. இது அழியாது - யாராலும் அழிக்கவும் முடியாது. விஞ்ஞானத்திற்கு அழிவு ஏது? அது வளர்ச்சி அடைந்துதான் தீரும்.
இந்த இயக்கத்தின் தலைவர் ஆசிரியர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று கேள்விப்பட்டபோது பதறிப் போனோம். கட்சி களுக்கு அப்பாற்பட்டவர்களும் கவலைப்பட்டார்கள். அவர் நலம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள்.
89 வயதிலும் முன்புபோல ஆசிரியர் அலைய வேண்டுமா? சுற்றுப் பயணத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாதா? இது எங்களுடைய கருத்து மட்டுமல்ல - கழகத்தைச் சேர்ந்தவர்களும் கருதுகிறார்கள். நாங்கள் சொல்ல முடியாது; நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஆசிரியர் அவர்களே! நீங்கள் எங்களுக்குத் தேவை - நாட்டுக்குத் தேவை - நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தை முன் வைக்கிறோம் என்றார்.
மாண்புமிகு முனைவர் க. பொன்முடி
தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
இந்தப் பெரியார் திடல் நான் வளர்த்த இடம்! என்னை ஆளாக்கிய இடம்! ஆசிரியர் அவர்களால் வார்த்து எடுக்கப்பட்டவன் நான். என்னுடைய முனைவர் பட்டத்துக்கான ஆய்வு இந்தப் பெரியார் திடல் நூலகத்தின் துணையோடு எழுதப்பட்டதுதான். இரவு தூக்கமும் இந்த நூலகத்தில்தான். கவிஞர் வீட்டில்தான் சாப்பாடு - என்றைக்கும் மறவேன்.
ஆசிரியர் அய்யாவுடன் நானும், சபாபதி மோகனும் சுற்றாத ஊர் இல்லை. பட்டிமன்றம், கருத் தரங்கம், மாநாடுகளில் மொழி பெயர்ப்பு என்று எங்களுக்கெல்லாம் பயிற்சி அளித்துத் தயாரித்தவர் நமது ஆசிரியர். பகுத்தறிவாளர் கழகத்திற்கு டாக்டர் நன்னன் தலைவர் - எனக்குத் துணைத் தலைவர் பதவியைக் கொடுத்தவர் - ஆசிரியர்.
சதா படித்துக் கொண்டே இருக்கிறார் - 89 வயதிலும் படித்துக் கொண்டே இருக்கிறார்! இந்தியாவில் மட்டு மல்ல, உலகளவில் எடுத்துக் கொண்டாலும் இவரைப் போல படிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது.
திராவிடர் கழகம் சமூகநீதிக்கான இயக்கம், பகுத்தறிவு இயக்கம், ஜாதி ஒழிப்பு இயக்கம். இந்த இயக்கத்தை எந்தக் காலத்திலும் யாராலும் அழிக்க முடியாது - முடியவே முடியாது.
நமது ஆசிரியர் அவர்களைப் பொறுத்தவரை, பிறந்த நாளைக் கொண்டாட விரும்பாதவர், அதனால்தான் இது ஒரு நூல் வெளியீட்டு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் அவர்களின் கருத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார் நமது ஆசிரியர்.
தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு சமூகநீதித் தளத்தில் ஆசிரியர் அவர்களின் சாதனை மிகப் பெரியது. மனிதனுக்குத் தேவை சுயமரியாதை. அதனை வலியுறுத்தக் கூடிய இயக்கம் இது.
கலைஞர் அவர்களும் சரி, தளபதி ஸ்டாலின் அவர்களும் சரி திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான சமூகநீதிக்கு எப்பொழுதும் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள் - வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
நிகழ்ச்சியில் சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் உரை யாற்றினார்.
அவர் தனது உரையில் தந்தை பெரியார் மறை விற்குப் பிறகு கழகத்தில் ஆசிரியருக்கு சிலர் எதிராக செயல்பட்டனர். அத்தகையவர்களைக் கழகத் தலைவர் அம்மா அவர்கள் கழகத்தை விட்டு நீக்கினார்கள்.
இன்னொரு கட்டத்தில் ஆசிரியர் அவர்கள் கழகத் தின் தலைமைக்கு வந்தபோது பழையவற்றை எல்லாம் மறந்து விட்டு, பெருந் தன்மையுடன் கழகத்தில் முக்கிய பொறுப்புகளை அத்தகையவர்களுக்கும் அளித்தார். அப்படிப் பொறுப்பு அளிக்கப்பட்டவர்களுள் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டார்.
திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி நன்றி கூறிட விழா நிறை வடைந்தது. அனைவருக்கும் புலால் விருந்தளித்து உபசரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment