ஜப்பானியர் போரிலிறங்கி வருடங்கள் மூன்றரைக்குமேல் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை பலப்பட்டே வந்திருக்கும். காரணம் அவர்கள் அச்சமயத்தில் அடைந்த வெற்றிகளேயாகும். அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் அவர்கள் இந்தியாவின்மீதும் படையெடுத்தார்கள். ஆனால் கடந்த நான்கு, அய்ந்து மாதங்களாக நடந்துவரும் போரின் முடிவுகளிலிருந்து அந்நம்பிக்கை பாழாகியிருக்கும் என்றே நம்புகின்றோம். அஸ்ஸாம் முனையில் மட்டுமல்ல, பசிபிக் கடற்போரிலும், வட பர்மாவிலும் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்து வருகிறது. ஆதலால் அவர்கள் நம்பிக்கை, இவைகளினால் ஓரளவுக்கு குலைக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
1941இல் இருந்த நிலைமைக்கும் 1944இல் இருக்கும் நிலைமைக்கும் நேசதேசங்களின் பலத்தில் எவ்வளவு வித்தியாசம் இருந்து வருகிறதென்பதையும் இப்போர் முடிவுகள் அவர்களுக்கு நன்கு விளக்கியிருக்கும்.
நாட்டாசையின் மீதே அவர்கள் பர்மாமீதும், இதர நாடுகள் மீதும் படையெடுத்தார்கள் என்றாலும், சீனாவுக்குப் போகும் சப்ளையைத் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான நோக்கமாகும். இதே நோக்கத்தின் மீதே மணிப்பூர் மீதும் படையெடுத்தார்கள். ஏனெனில், வடபர்மாவில் ஜெனரல் ஸ்டில் வெல்லின் படைகள் ஜப்பானியரைத் தாக்கிக் கொண்டே வருகின்றன.
அவைகளுக்கு சப்ளை வந்து கொண்டிருந்தால்தானே போராட முடியும். சப்ளை வராமல் தடுத்துவிட்டால் ஜெனரல் ஸ்டில் வெல்லின் படைகள் சரணடைந்து விடும் என்றும், சீனாவுக்குப் போகும் சப்ளையையும் தடுத்துவிடலாம் என்றும் ஜப்பானியர் கருதியிருந்தனர்.
ஆனால், அந்த எண்ணத்தில் நேசப் படையினர் மண்ணைப் போட்டு விட்டனர். ஜெனரல் ஸ்டில்வெல்லினுடைய கூட்டுப் படைகளுக்கு விமானம் மூலமாக வேண்டிய சப்ளைகள்
நேச நாட்டினரால் அனுப்பப்பட்டு வந்ததும் எதிரிப் படையின் பின்னணியில் எதிரியின் போக்குவரத்துக்களைப் பாழ்படுத்திக் குழப்பம் உண்டாக்கும் வேலையில் ஜெனரல் லெண்டாயின் தலைமையில் சிண்டிட் படைகள் செய்து வந்த வேலையும் அவர்கள் எண்ணத்தைப் பாழாக்கிவிட்டன.
கோஹிமா முற்றுகை தகர்க்கப்பட்டு விட்டது. மணிப்பூர் முற்றுகை முறியடிக்கப்பட்டு அப்பகுதியிலிருந்த ஜப்பானியப் படைகளுக்கு ஏராளமான நட்டம் உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. மோகாங் என்ற இடம் நேச நாட்டினரிடம் பிடிபட்டது. இம்பால் - கோஹிமா ரோட்டை 52 மைல் தொலைவுக்குக் கைப்பற்றி விட்டனர்.
இறுதியாக, இந்திய மண்ணில் கால் ஊன்றலாம் என்ற ஜப்பானியர் நம்பிக்கை குலைக்கப்பட்டு விட்டது. கோஹிமா ரோடு பிரிட்டிஷ் கையில் வந்து விட்டதால், பிரிட்டிஷ் இந்தியப் படைகள் மத்திய பர்மாவில் மேற்கொண்டு முன்னேறிக் கொண்டு போகும் என்பதுடன், வடபர்மாவில் ஜப்பானிய நிலையங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றப்படும் என்பதையும் நாம் உறுதியாக நம்பலாம்.
No comments:
Post a Comment