முதல் நாள் 19 பேர் வேட்புமனு தாக்கல் தேர்தல் ஆணையம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

முதல் நாள் 19 பேர் வேட்புமனு தாக்கல் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை, ஜன.30 தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி மாதம் 19ஆம்தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி மாதம் 19ஆம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  தொடங்கியுள்ளது.

அந்தவகையில் 12 ஆயிரத்து 838 பதவிக்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது.

 வேட்புமனு தாக்கல் தொடங்கியது

 முதல் மிகவும் குறைவானவர்களே வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வந்தனர். அந்தவகையில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 19 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேரும் அடங்குவர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கு 2 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகாமல் நகர்ப்புற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம்

தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை, ஜன.30 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 28 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அட்டவணை 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் உரியவாறு பதவியில் இருந்து விலகாமல் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தால் ஏற்கெனவே வகிக்கும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.

உரிய பதவியில் இருந்து விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். 

வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஏற்கெனவே வகித்த பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள், ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வாக்குச் சாவடியை

தெரிந்து கொள்ள புதிய இணையதளம்

சென்னை, ஜன.30 சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க உங்கள் வாக்கு சாவடி எங்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்திடும் வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த 45 பறக்கும்படை குழுக்களும், தலைமையிடத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் ஏற்கனவே செயல் பாட்டில் உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும், பொது மக்கள் தங்களின் மண்டலம் மற்றும் வார்டு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அதன் விவரங்கள், 200 வார்டுகளுக்கான மறு வரையறை குறித்த விவரங்கள், வேட்புமனு படிவம், உறுதிமொழி படிவம் உட்பட பல்வேறு படிவங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வாக்குச் சாவடியை அறிந்து கொள்ளும் வகையிலும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மேற் குறிப்பிட்ட விவரங்களை http://election.chennaicorporation.gov.in/gcculb22/    என்ற இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment