பாரீஸ், ஜன.8 பிரான்சு நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் கோரத்தாண்டவமாடுகிறது. 5.1.2022 அன்று ஒரு நாளில் அங்கு 3 லட்சத்து 32 ஆயிரத்து 252 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 334 பேர் இறந்தும் உள்ளனர்.
இதுதொடர்பாக பாரீஸ் நகரில் அரசு செய்தித் தொடர்பாளர் கேபிரியேல் அட்டல் பேசினார். அப்போது அவர், பிரான்சில் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் முடியவில்லை. 2 வாரங்களில் பரவல் 3 மடங்கு ஆகி உள்ளது. 1 லட்சம் பேருக்கு 1,800 பேர் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்தான். இந்த நிலை அடுத்த சில வாரங்களில் மேலும் மோசமாகும். தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு சேருகின்றனர் என குறிப்பிட்டார்.
இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டிலும் கரோனா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பேர் (சரியாக 1 லட்சத்து 94 ஆயிரத்து 747 பேர்) பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 38 லட்சத்து 35 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 15இல் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில் ஒரே நாளில் 7 லட்சத்து 4 ஆயிரத்து 369 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். 2,113 பேர் இறந்துள்ளனர். தினசரி சராசரி பாதிப்பு 5.84 லட்சமாக உள்ளது.
6.1.2022 அன்றைய நிலவரப்படி அங்கு இதுவரை 5.77 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.32 லட்சம் பேர் பலியாகியும் உள்ளனர்.
No comments:
Post a Comment