மாநகராட்சித் தேர்தல்: ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

மாநகராட்சித் தேர்தல்: ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல்

சென்னை, ஜன.28 பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை குழுவில் உள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான பயிற்சி கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று (27.1.2022) ரிப்பன் மாளிகையில் நடந்தது.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:-

பறக்கும் படை குழுக்கள்

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்புமனுக்கள் எவ்வாறு பெறப்பட வேண்டும். சின்னங்கள் ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டல அலுவலகங்களில் நாளை(அதாவது இன்று) காலை 10 மணி முதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பணம் அல்லது பொருட்களை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்வதை கண்காணிக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும், மண்டலத்துக்கு 3 குழுக்கள் என 45 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும். இந்த குழுவில் உதவி பொறியியலாளர்கள், 2 காவலர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் உள்பட 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பறிமுதல் செய்யப்படும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் 26.1.2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொண்டு சென்றால் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்படும் என கூறினார்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, 200 வார்டுகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ள பறக்கும் படை குழுவினருக்கான வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கரோனா பாதித்த ஒரு மாத குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை

சென்னை, ஜன.28 இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா 3ஆவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கரோனா பாதித்தஒரு மாத குழந்தை ஒன்று கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மூலம் குணமடைந்து கடந்த வாரம் வீடு திரும்பியது. இந்த குழந்தை கடந்த சில வாரங்களுக்கு முன் காய்ச்சல் அறிகுறி காரணமாக பிரசாந்த் மருத்துவமனைக்கு வந்தது. அப்போது அந்த குழந்தைக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில்அந்த குழந்தைக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த குழந்தைகளின் தீவிரசிகிச்சைபிரிவில் அனுமதிக்கப் பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. குழந்தைக்கு சரியானசிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதிசெய்வதற்காக குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து இம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பிரசாந்த் மற்றும் குழந்தைகள் மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் பிரகாஷ் ஆகியோர் கூறுகையில், தொற்று நோய் பரவத் தொடங்கிய நாள் முதல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலருக்கும் நாங்கள் கரோனா சிகிச்சை அளித்து வருகிறோம். கொரோனா பாதித்த 25 முதல் 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இங்கு சிறப்பாக சிகிச்சை அளித்து அவர்கள் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றுள்ளனர். ஆனால் அவற்றில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாகும். இதன் காரணமாக அந்த குழந்தைக்கு சரியான சிகிச்சை அளித்து விரைவில் குணமடையச் செய்ய வேண்டும் என்பதிலேயே எங்களின் முழு கவனமும் இருந்தது. அதற்கு எங்கள் மருத்துவமனையில் உள்ள பிறந்தகு ழந்தைகளின்தீவிரசிகிச்சைபிரிவு குழு மற்றும் செவிலியர்கள் சிறப்பாக பங்காற்றினர் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment