அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒமைக்ரான் காரணமாகவும், ஏற்கெனவே உள்ள டெல்டா வைரஸ் காரணமாகவும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாவது அலையின்போது, கரோனா நோயாளிகளில் 20 முதல் 23 சதவீதம்பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தது.
ஆனால், தற்போது 5 முதல் 10 சதவீத நோயாளிகளுக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. இருப்பினும், நிலைமை வேகமாக மாறக்கூடும். ஆகவே, மருத்துவமனையிலும், வீட்டு தனிமையிலும் இருக்கும் நோயாளிகளை மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணித்து வர வேண்டும். சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட மனித வளத்தை பெருக்க வேண்டும்.
பல்வேறு மாநிலங்கள் பிரமாண்ட மருத்துவமனைகள், கள மருத்துவமனைகள், தற்காலிக மருத்துவமனைகள் ஆகியவற்றை அமைத்து வருவது பாராட்டுக்குரியது. ஆனால் இவை மட்டும் போதாது.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக விதவிதமான படுக்கை பிரிவுகளை ஒதுக்க வேண்டும். அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால், அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வழிமுறை இருக்க வேண்டும்.
தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனைக்கு ஓய்வு பெற்ற மருத்துவர்களையும், எம்.பி.பி.எஸ். மாணவர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகளை, தேவைப்பட்டால் கரோனா மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல போதிய ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment