'நீட்சே'
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தனது முதல்பேச்சினை (maiden speech) அண்மையில் அரங்கேற்றினார். முதல்பேச்சே நாட்டு நிலைமையை - ஜனநாயக நாட்டின் தூண்களாகக் கருதப்படும் நீதிமன்றம், சட்டமன்றம், நிர்வாகம், ஆகிய துறைகளில் ஆதிக்கச் சமுதாயத்தினரின் அதிகார நிலைமையை அப்பட்டமாக வெளிப் படுத்தியது. உறுப்பினரின் பேச்சு தங்களுக்கு சாதகமாக உள்ளது என துவக்கத்தில் வரவேற்ற பா.ஜ.கட்சியின் உறுப்பினர்கள் பேச்சின் போக்கு பார்ப்பனர்களின் ஆதிக்கம் மோலோங்கி இருப்பதை புள்ளி விபரங்களுடன் சுட்டிக்காட்ட முனைந்த பொழுது, கூச்சலை எழுப்பி தடைப்படுத்த முயற்சித்தனர்.
நீதிமன்றத்தில் (உச்சநீதிமன்றம் & உயர்நீதிமன் றங்கள்) மாண்புடன் கருதப்பட வேண்டிய நீதிபதி பதவிகள் குடும்ப வாரிசுகளால் நிரப்பப்படும் நிலை யினை ஜான் பிரிட்டாஸ் எடுத்துக் கூறியபொழுது, பரம்பரை அதிகார ஆளுமை (Dynasty) எனக் குறிப்பிட்டார். அரசியலில் உள்ளதைப் போலவே நீதிமன்றங்களிலும் குடும்ப வாரிசுகள் பதவிக்கு வருகின்ற சூழ்நிலை உள்ளது எனக் கூறியதும் பா.ஜ.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்று கரவொலி எழுப்பினர். உறுப்பினர் பேச்சும் மாநிலங்கள் அவையில் நிலவிய சூழலும், ஒளியிழைப் படங்களாக சமூக ஊடங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. உறுப்பினரின் பேச்சு நீதித்துறையில் அங்கம் வகித்த பார்ப்பன நீதிபதிகளின் அளவுக்கு அதிகமான விகிதத்தை சுட்டிக் காட்டியது. ஆரம்பநிலையில் ஆதரவு தெரிவித்து மேஜையை தட்டியவர்கள் பின்னர் கூக்குரல் எழுப்பி பேச்சினை தடைப்படுத்தத் தொடங்கினர். அந்தக் கூட்டத்தை நடத்திய அவையின் துணைத் தலைவர், உறுப்பினருக்கு பேசுவதற்கு வழங்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது எனவும், தொடர்ந்து பேசினால் அவை அவைக் குறிப்பில் இடம் பெறாது எனக் கூறுகிறார்.
உறுப்பினர் பேச்சு வரையறை நேரத்தை விட அதிகமான வரலாறு பல, கடந்த காலங்களில் நிகழ்ந் துள்ளது. இருந்தாலும் நீதித்துறையில் நிலவிடும் ஆதிக்க சக்திகள் பற்றிய புள்ளி விபரங்களுடன் உறுப்பினர் பேச்சை தொடர்ந்ததால் அவையில் இருந்த பா.ஜ.கட்சி உறுப்பினர்களால் அந்தப் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; கூச்சல் எழுப்பி தடுக்கப் பார்த்தனர்.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் மாநிலங்களவையில் நடைபெற்றது குறித்தும் அடுத்தநாளில் அந்தப் பேச்சு பற்றி எந்த தேசிய ஊடகங்களிலும் வரவில்லை என்பது பற்றியும் குடியரசுத் துணைத் தலைவர், மாநிலங்கள வையின் தலைவர் என்ற நிலையில் தெரிவித்துள்ள கருத்து பாராட்டுதலுக்குரியது.
“அபாரம், உண்மையாகவே உரையினை மகிழ்ச்சியுடன் ரசித்தேன், மறுநாள் எனக்கு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் வகையில், மாநிலங்களவையில் அந்த உறுப்பினர் ஆற்றிய உரையின் ஒரு வரி கூட தேசிய ஊடகங்களில் செய்தியாக இடம் பெற வில்லை” என வருத்தத்துடன் அவைத் தலைவர் மாண்பமை எம். வெங்கையாநாயுடு தெரிவித்தார்.
ஊடகங்கள் முழுவதும் பார்ப்பன ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுது, பார்ப்பனரல்லாதார் நலம் வேண்டி - அவர்களின் பிரதிநிதித்துவம் வேண்டிடும் ஒரு செய்தியானது தேசிய ஊடகங்களால், பிரசுரிப்பதிலிருந்து இருட் டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடுமையான செயலை, ஊடகங்கள் நடந்து கொண்ட நியாயமற்ற முறையை நாட்டின் உயர்ந்த நிலையில் உள்ள தலைவரே - குடியரசுத் துணைத் தலைவரே வெளிப் படுத்தியுள்ளார்.
ஊடக ஜனநாயகத்தின் நாடு தழுவிய சீரழிந்த நிலையை இது காட்டுகிறது. ஆதிக்கவாதிகள் உண்மை நிலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சென்ற டையக்கூடாது என்று கருதுகின்றனர்.
நாடாளுமன்றத்தில்தான் மக்களால் (நேரடி யாகவும் மறைமுகமாகவும்) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சுதந்திரமாகப் பேசமுடியும்; இங்கு பேசினால்தான் நீதிமன்ற நிலைமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசமுடியும்; வெளியில் பேசினால் ‘அவமதிப்பு’ வழக்கு தொடுக்கப்படலாம்; உரையின் நோக்கமும் சிதைக்கப்படலாம்.
உண்மை நிலையை அழுத்தமாக பேசக்கூடிய இடம் சட்டமன்றமும், நாடாளுமன்றமும்தான்; உரை யாற்றிய உறுப்பினரது நோக்கம் ஆக்க ரீதியானது. துவக்கத்தில் கைதட்டி வரவேற்று பின்னர் பேச்சுக்கு எதிர்ப்பு காட்டிய பா.ஜ.கட்சி உறுப்பினர்களின் சமூக அக்கறையின்மை, ஆதிக்க மனப்பான்மை அம்பல மாகிவிட்டது.
ஜான் பிரிட்டாஸ் அவர்களின் நாடாளுமன்ற பேச்சினை ஏன் தேசிய ஊடகங்கள் ஒரு வரி கூட எழுதவில்லை என ஆதங்கப்பட்ட நாட்டின் குடியரசுத் தலைவர் பாராட்டுதலுக்குரியவர். கட்சி அரசியலைத் தாண்டி எதிர்கால தலைமுறையினரின் வளர்ச்சி முன்னேற்றம் பற்றி அக்கறைப்படும் அரசியல் - அறிவாளர் அவர் என்பதை தனது நீண்ட நெடிய பொது வாழ்க்கையின் பின்னணியில் உணர்த்தியுள்ளார். ஆதிக்க சக்திகள் அனைத்துத் துறைகளிலும் ஆட்சி செலுத்தி வரும் நிலையில் குடியரசுத் துணைத் தலைவரின் பார்வையும், விமர்சனமும் ஒரு வெள்ளிக் கீற்று கிளம்பியதைப் போன்றதாகவே தெரிகிறது.
நியாய உணர்வுடைய அனைவரும், சமூக நீதியில் நாட்டம் உள்ளோர் அனைவரும் பாராட்ட வேண்டியதாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும் பான்மைப் (Majority) பிரதிநிதிகளைக் கொண்டு நடைபெறுவது ஜனநாயகம்; பெரும்பான்மைப் பிரதிநிதிகள் பெரும்பான்மைவாதப் (Majoritarianism) பிரதிநிதிகளாகி விட்டால் ஜனநாயகம் விரைவில் வீழ்த்தப்பட்டுவிடும்.
அந்நிலை வரக்கூடாது. நாட்டு நிலைமையை, நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற உரைகளை அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இனிவரும் காலங்களில் ஊடக நியாயத்துடன் வெளியிட வேண்டும்.
No comments:
Post a Comment