அரியானா மாநிலம் தாத்ரியில் கடந்த 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு சமூக நிகழ்வில் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பங்கேற்றார்.
அப்பொழுது அவர் தெரிவித்த தகவல் முக்கியமானது. "நான் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். விவசாயிகள் பிரச்சினை குறித்துப் பேசினேன். அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்றேன். அதற்கு அவர் மித மிஞ்சிய ஆணவத்துடன் "அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்?" என்று கேட்டார்
.நான் அவரிடம் "ஆமாம், நீங்கள் மன்னராக இருப்பதால் அவர்கள் இறந்தார்கள்" என்று கூறினேன். அவர் உடனே நீங்கள் அமித் ஷாவைப் பாருங்கள் என்றார். நானும் அமித் ஷாவைப் பார்த்தேன்.
அமித் ஷாவோ, "ஒரு நாய் இறந்தாலும் கூட பிரதமர் இரங்கல் கடிதத்தை அனுப்புகிறார்" என்று கூறினார்."
அவர்களின் பேச்சு குறித்து இவ்வாறாக சத்யபால் மாலிக் குறிப்பிட்டார்.
அவருடையை பேச்சை சுட்டிக் காட்டி காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. பிரதமரின் தற்பெருமை, கொடூர சிந்தனை மற்றும் உணர்வற்ற போக்கைக் காட்ட இந்த ஒரு பேட்டி போதும் என்று காங்கிரஸ் சாடியுள்ளது. சத்யபால் மாலிக் பேச்சு அடங்கிய வீடியோவை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
அதில், மேற்கூறிய வார்த்தைகளைப் பதிவிட்டு, இது ஜனநாயக - நாடு கவனிக்க வேண்டிய விஷயம் என்றும் கூறியுள்ளது. சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டவர், பின்னர் அவர் கோவா மாநில ஆளுநரானர். தற்போது அவர் மேகாலயா மாநில ஆளுநராக உள்ளார்.
இந்நிலையில், "தன்னுடைய கருத்துகளுக்காக பணியிட மாறுதல்கள் நிகழும் என்றால் அதற்காக நான் சிறிதும் அஞ்சப்போவதில்லை" என்று சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.
இவ்வளவுக்கும் இந்த சத்யபால் மாலிக் யார்? உத்தரப்பிரதேசத்தில் பிஜேபியின் முக்கிய தலைவராகக் கோலோச்சியவர். பிஜேபியின் முக்கிய தலைவராகக் கருதப்பட்டவர்.
தீவிர அரசியலில் இருந்த இவர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்த போது அங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அம்மாநிலத்தில் இருந்த கடைசி ஆளுநர் இவர்தான். அதன் பிறகு அது யூனியன் பகுதியாக மாற்றப்பட்டது.
பின்னர் கோவா ஆளுநராக இருந்து, தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார். மேகாலயா சட்டமன்றம் இப்பொழுது பி.ஜே.பி., ஆட்சியாக மாறியது எப்படி?
60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் 2 பாஜக உறுப்பினர்களின் ஆதர வோடு 23 தேசிய மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து மேகாலயாவில் இப்பொழுது பிஜேபி ஆட்சியில் உள்ளது.
சொல்லியிருப்பவர் பிஜேபிக்கு எதிரான சிந்தனை உடையவர் அல்லர். உ.பி.யில் பிஜேபியின் முக்கிய தலைவராக விளங்கியவர். பிரதமரின் நல்லெண்ணத்தில் பல மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர். அத்தகைய ஒருவரே பிரதமர் நரேந்திர மோடி குறித்து இப்படிக் கூறியுள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
15 மாதங்கள் நாட்டின் தலைநகரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அறப்போர் நடத்தியுள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். ஒரு முறைகூட பிரதமர் விவசாயிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிய வில்லை.
ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?
"விவசாயிகள் அனைவரும் எனக்காகவா இறந் தார்கள்?" என்று ஒரு பிரதமர் பதில் சொன்னதற்கு ஆளுநர் மாலிக் சொன்ன பதில் அர்த்தமிக்கதே. "நீங்கள் மன்னராக இருப்ப தால்தான் 500 விவசாயிகள் இறந்தனர்" என்று நேருக்கு நேர் சொன்னது வரவேற்கத்தக்கதே!
வெளித் தோற்றத்திற்கு வேறுவிதமாக காட்சி அளிப்ப தாகக் காட்டப்படும் பிரதமர் மோடியின் உண்மையான உருவத்தை, உள்ளத்தைத் தெரிந்து கொள்ள இது ஒன்று போதாதா?
No comments:
Post a Comment