காவல்துறையினர் ஊன்றிப் படிக்க - மதக்கலவரமும் காவல்துறை பணியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 4, 2022

காவல்துறையினர் ஊன்றிப் படிக்க - மதக்கலவரமும் காவல்துறை பணியும்

எஸ். ராமநாதன், அய்.பி.எஸ். [கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஓய்வு)]

‌1. இந்தியா அண்மைக் காலத்தில் இந்து மத வெறியர்களின் கைக்குள் சென்று விட்டதாகவே உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களும், சமுதாயப் பார்வையாளர்களும்  கணிக்கின்றனர்.

2. இப்பதிவில் கண்டபடி கோவை பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொடுத்து வரும் பயிற்சியும் அவற்றை கண்காணிக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகளை அவர்கள் தாக்கிய சம்பவமும் நாட்டின்  சமுதாய வல்லுநர்களின் பார்வையை உறுதி செய்கின்றது.

3. நான் காவல் துறையில் 1993இல் அப்போதைய செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட {தற்போதைய தாம் பரம் ஆவடி காவல்துறை ஆணையகங்களின் (Commissionerates) பெரும் பகுதியை உள்ளடக்கியது} காவல்துறை கண்காணிப்பாளராக (SP) பணிபுரிந்த போது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பயிற்சி பற்றிய நட வடிக்கையில் நான் எடுத்த நடவடிக்கைகள், பெற்ற அனுபவம் ஆகியவை பற்றி இங்கே பகிர்ந்து கொள்வது சாலச் சிறந்தது. காவல்துறை பணிக்கு வழி காட்டலாகவும் இருக்கும்.

4. பல்லாவரத்தில் பள்ளி ஒன்றின் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களது ஒரு மாத பயிற்சியை முடித்து விட்டு இறுதிநாளில் ஊர்வலமாக பல்லாவரம் நகரத்தில் செல்வதற்காக செயின்ட் தாமஸ் மவுண்ட் (St. Thomas Mount)  காவல்துறை துணை கண்காணிப் பாளரிடம் அனுமதி கேட்டார்கள்.

5. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் குறிப்பாக இஸ்லாமி யர்களும் கிறிஸ்தவர்களும் வசிக்கின்ற பகுதியில் ஊர்வலம் போக வேண்டுமென்று விண்ணப்பம் செய்ததால் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் என்னிடம் அறிவுரை கேட்டார்.

6. என்னுடைய தெளிவான அறிவுரைப்படி "ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் ஊர்வலம் பல்லாவரத்தில் உள்ள இந்துக் கோவிலை சுற்றி  இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்ற சாலைகளில் செல்லலாம் என்றும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும்" மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனுமதி வழங்கினார்.

7. அதை ஏற்றுக் கொள்ளாத ஆர்.எஸ்.எஸ். காரர்கள் 'தாங்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் வசிக்கின்ற பகுதியில்தான் ஊர்வலம் செல்வோம்' என்று  அவர்களுக்கு அறிவுரை ஆசானாக அப்போது இருந்த உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் (பெயர் தவிர்க்கப்படுகிறது) தலைமையில் அடம் பிடித்து சட்டத்தை மீறி ஊர்வலம் செல்வோம்" என்று   கூட்டத்தில் கர்ஜித்தனர்.

8. ஆர்.எஸ்.எஸ்.அய் சேர்ந்த அவ் உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞரோ "எல்லோருக்கும் மேலே உள்ள அரசு அதிகாரியிடம் பேசிவிட்டேன். இவர்கள் அனுமதி நமக்கு தேவையில்லை. நாம் ஊர்வலம் கண்டிப்பாக எடுப்போம்" என்று அவர்கள் மத்தியில் முழக்கமிட்டார்.

9. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சட்டம் ஒழுங்கை மீறி அராஜகத்தை எந்த நேரத்திலும் கையில் எடுப்பார்கள் என்ற நிலையில் மாவட்ட காவல்துறை துணை கண் காணிப்பாளர் தலைமையில் ஒரு காவல் படையை அப்பள்ளியின் வளாகத்திற்கு வெளியில் எந்தச் சூழலையும் எதிர் கொள்ளும் நிலையில் நிறுத்திய தோடு ஆர்.டி.. வையும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அங்கு முகாமிடச் செய்தேன். அவர்கள் கலவரத்தில் ஈடு படும் சூழ்நிலையில் பத்து நிமிடத்திற்குள் அவ் விடத்தை அடையக்கூடிய வகையில் நான் தயார் நிலையில் என் அலுவலகத்தில் இருந்தேன்.

10. பகல் சுமார் 12.30 மணிக்கு அப்போதைய காவல்துறைத் தலைவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  பல்லாவரத்தில் நடந்து கொண் டிருக்கும் சட்டம் ஒழுங்கு சூழலை என்னிடம் கேட்டு தெரிந்தபிறகு,  "தான் அதிகமான காவல் படையை அனுப்பு வதாகவும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கேட்டபடி இஸ்லாமியக் கிறிஸ்துவ தெருக்களில் ஊர்வலத்தை அனுமதித்து அராஜகம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளலாமே" என்று அறிவுரை கொடுத்தார்.

11. நான் காவல்துறை தலைவரிடம், "அராஜகம் இல்லாமல் ஊர்வலத்தை அவ்வழிகளில் என்னிடம் இருக்கின்ற காவல் படையை வைத்தே இன்று நடத்தி விடுவேன். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இஸ்லாமிய கிறிஸ்துவ தெருக்களில் செல்லும்போது  போடுகின்ற அராஜக வன்முறை கலந்த முழக்கங்கள் அவர்கள் மத்தியில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி மத விரோதத்தை வளர்த்துவிடும் என்று கூறியதோடு,

அந்நிலை வராமல் முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்றும் அப்படி நாம் செய்யாததால் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக் காடு மதக்கலவரம் பல ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தீராத விரோதத்தையும் அராஜகத்தையும் ஒவ்வொரு ஆண்டும் கொட்டிக் கொண்டிருக்கிறது என்றும் எடுத்துக்கூறி இன்னொரு மண்டைக் காடாக பல்லாவரம் மாறுவதை நாம் அனுமதிப்பது சரியாகாது"

என்று காவல்துறை தலைவரிடம் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கூறினேன்.

(நான் "ஆமாம் சார்" போடவுமில்லை; காவல் படையை குவிக்கவும் இல்லை.)

12. அப்போதுதான் காவல்துறைத் தலைவர், "ஆர்.எஸ்.எஸ்.கார மூத்த வழக்குரைஞர் தலைமைச் செயலாளரை அணுகியதாகவும், தலைமைச் செயலாளர் ஊர்வலத்தை அனுமதிக்கலாமே என்றும் தன்னிடம் (டி.ஜி.பி.யிடம்) கூறியதாகவும்" என்னிடம் கூறினார்.

13. "அதனால்தான் போலும் அவ் மூத்த வழக் குரைஞர் இவர்களிடம் (மாவட்ட காவல்துறை நிர்வாகத்திடம்) நாம் அனுமதி பெறத் தேவையில்லை, நான் மேலே அனுமதி வாங்கி விட்டேன் என்று அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்) மத்தியில் பேசியிருக்கிறார்" என்று காவல்துறை தலைவரிடம் தெரியப்படுத்தினேன்.

14. அதைக் கேட்ட காவல்துறை தலைவர், "அப்படியா பேசினார் என்று கூறிவிட்டு தலைமைச் செயலாளர் அனுப்பிய அவ் மூத்த வழக்குரைஞர் தன்னைப் (டி.ஜி.பி.யை) பார்க்க வருவதாகவும் அவரை மதியம் இரண்டு (14.00 hrs) மணிக்குள் உங்களைப் பார்க்கச் சொல்லி அனுப்புகிறேன் என்றும் நீங்களே எது சரியோ அதன்படி முடிவெடுத்து அவரிடம் சொல்லிவிடுங்கள்" என்றும் கூறினார்.

15. மூத்த வழக்குரைஞர் மதியம் 2 மணிக்குள் என்னைப் பார்க்க வரவில்லை. மாறாக மாலை 5 மணிக்கு  தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை பார்க்க வேண்டும் என்று நேரம் கேட்டார். நான் ஏற்கெனவே திட்டமிட்ட வேறு பணியில் இருந்ததால் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரைச் சந்தியுங்கள் என்று கூறிவிட்டு துணை கண்காணிப்பாளரை அழைத்து நான் ஏற்கெனவே கூறியவாறே இந்துக்கள் தெருக்களில் மட்டும் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுங்கள் என்று திடப்படுத்தி விட்டேன்.

16. மாலையில் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரைச் சந்தித்த உயர் நீதிமன்ற ஆர்.எஸ்.எஸ்.அய் சேர்ந்த அவ் மூத்த வழக்குரைஞர்  "உங்களது மாவட்ட கண்காணிப்பாளர் மிகவும் கடுமையானவர் (Your SP is the toughest officer as I have ever come across) என்பதை அவர் தொலைபேசியின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டதாகவும், அவர் எந்தப் பாதைகளில் அனுமதி கொடுக்கிறாரோ அதே பாதைகளில் நாங்கள் ஊர்வலத்தை நடத்துகிறோம் என்றும் மத விரோத முழக்கங்களை போட மாட்டோம் என்றும், உறுதி கூறி அனுமதியைப் பெற்றுச் சென்றார். அடுத்த நாள் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் அதன் வரலாற்றில் இல்லாத அடிப்படையில் அமைதியாக நடந்து முடிந்தது.

17. காவல்துறைத் தலைவர் தொலைபேசியில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் நான் கடைப்பிடித்த உறுதிப்பாட்டை பாராட்டினார். இவற்றையெல்லாம் ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்த நமது மாநில உளவுத்துறை "பல்லாவரத்தில் இன்று சட்டம் ஒழுங்கு என்ன ஆகுமோ என்று எதிர்பார்த்த நிலையில் எஸ்.பி. பிரச்சினையை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார்" என்று அவர்களுக்குள்ளே பேசித் திருப்திப் பட்டதாக எனக்குத் தகவல் வந்தது.

18. பல்லாவரம் மற்றொரு மண்டைக்காடாக மாறாமல் தடுக்கப்பட்டது. நாட்டின் மதக்கலவர வரைபடத்தில் அதன் பெயர் இல்லை. இப்படிப்பட்ட ஜாதி மதக் கலவரங்களை அடக்கியது உள்பட பல்வேறுபட்ட பணிகளை நான் பணிக்காலம் முழுவதிலும் செய்துள்ளேன். இப்பணிக்காக அரசோ துறையோ எனக்கு எந்த வெகுமதியையும் (medals) கொடுக்கவில்லை.

19. நான் காவல் துறைத் தலைவரின் ஆலோச னையை கேட்கவில்லை என்றோ தலைமைச் செயலாளர் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வில்லை என்றோ நான் எடுத்த நடவடிக்கைகளில் யாரும் சொல்ல இயலாது என்றே கருதுகிறேன்.

No comments:

Post a Comment