திராவிடர் இயக்க ஆட்சியில் சமூகநீதியின் பலன் நாடு முழுவதும் கிடைத்திட வழி ஏற்பட்டது : தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 26, 2022

திராவிடர் இயக்க ஆட்சியில் சமூகநீதியின் பலன் நாடு முழுவதும் கிடைத்திட வழி ஏற்பட்டது : தமிழர் தலைவர்

"நாடு தழுவிய அளவில், சமூகநீதிக்கான இயக்கம் கட்டமைக்கப்படும்"

சென்னை, ஜன.26 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு (கிமினி) மாநிலங்களால் வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை தொடர்போராட்டங்கள் மூலமாகப் பெற்ற சமூகநீதிக்கான வெற்றியைக் கொண்டாடும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிகு பங்களிப்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காணொலி வாயிலாக பாராட்டு விழா நடைபெற்றது.

26.01.2022 அன்று பகல் 11.00 மணி அளவில் தொடங்கி நடைபெற்ற பாராட்டு விழா மற்றும் சமூகநீதி இயக்கத்துக்கான ஒருங்கிணைத்த தேசியதிட்டம் (2022-2024) நிகழ்வினை AIBCF, SRA, PAGAAM, BAMCEF, WTP and Lead India அமைப்பினர் நடத் தினர்.

நிகழ்வில் முதன்மை உரையினை 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெற இடைவிடா சட்டப் போராட்டம் நடத்திய வழக்குரைஞர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் வழங்கினார்.

விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சமூகநீதிச் சாதனையைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரையின் சுருக்கம்:

வெற்றி விழா நாயகர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்றுள்ள சமூகநீதிப் போராளிகள், தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மருத்துவக் கல்லூரியில் மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்த மகத்தான சாதனையினை தமிழ்நாடு முதலமைச்சர் புரிந்துள்ளார்கள். இந்த வெற்றி தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; சமூகநீதித் தளத்தில் ஒட்டு மொத்தமாக நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு - மருத்துவக் கல்வி பயில விரும்பும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்கக் கூடிய வெற்றியாகும் இது. சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இது குறித்த வழக்கினை திறம்பட நடத்திய  - வெற்றி வாகை சூடிய முதுநிலை வழக்குரைஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான பி. வில்சன் அவர்களுக்கு அனைவரது பாராட்டுதல்களும் உரித்தாகும்.

நாடு முழுவதும் சமூகநீதியின் பயன் கிடைப்பதற்கு தமிழ்நாடு கடந்த காலங்களில் வழிகாட்டியிருக்கிறது.

1951ஆம் ஆண்டில் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்த வேளையில் திராவிடர் இயக்கத் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் களம் இறங்கி போராடியதால் அரசமைப்புச் சட்டம் முதன் முறையாகத் திருத்தப்பட்டு பிரிவு 15(4) புதிதாக சேர்க்கப்பட்டது. கல்வியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான  இடஒதுக்கீடு தொடர்ந்திட வழி ஏற்படுத்தப்பட்டது. கம்யூனல் ஜி.ஓ.  என்பது அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் நடைமுறையில் இருந்தது. பிரிவு 15(4) மூலம் இந்திய துணைக் கண்டம் முழுவதற்கும் இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த வழி வகுக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான ஒட்டு மொத்த  இடஒதுக்கீடு (கல்வியிலும், வேலை வாய்ப்பிலும்) 69 விழுக்காடு  என்பதை உறுதிப்படுத்த முதன் முறையாக தனிச் சட்டத்தை இயற்றி  76ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இடம் பெறச் செய்து பாதுகாக்கப்பட்டது. இந்த வகையிலும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

93ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் [பிரிவு 15(5)] ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திட வழி ஏற்பட்டது. அந்த திருத்தம் கொண்டு வரப்பட்ட பொழுது திராவிட முன்னேற்றக் கழகமானது மத்தியில் அய்க்கிய முன்னணி அரசில் அங்கம் வகித்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி இருந்து ஆவன செய்தார். சமூகநீதியின் பலன் நாடு முழுவதும் கிடைத்திட வழி ஏற்பட்டது.

தந்தை பெரியார் கொள்கை வழியில் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி வழியில் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அதே கொள்கைத் தடத்தில் மருத்துவக் கல்வியில் ஒன்றியத் தொகுப்பில் நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பளித்திட 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைப் பெற்றுத் தந்துள்ளார்.

இந்த சாதனை, சமூகநீதி மாநிலமான பெரியார் மண்ணில், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் நடைபெறும், திராவிடக் கொள்கைப் பாரம்பரியத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை ஆகும். அப்படிப்பட்ட சமூகநீதிச் சாதனையை தமிழ்நாடு முதலமைச்சர்  சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் படைத்துள்ளார்.

இது சமூகநீதித் தளத்தின் ஒரு தொடக்கம் தான். இந்த நிலை தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும். நாடு தழுவிய அளவில் சமூகநீதி இயக்கமாக கட்டமைக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசுப் பணிகளில் 1990-இல் வி.பி. சிங் அவர்களால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கொண்டு வரப்பட்ட 27 விழுக்காடு இடஒதுக்கீடு இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டதற்கு 14-15 விழுக்காடு அளவில்தான் பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் உள்ளது என பதில் அளித்துள்ளனர். ஆதிக்க சக்திகளின் அடக்குமுறை தகர்க்கப்பட வேண்டும். நாம் கேட்பது அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல; புறம்பானதும் அல்ல.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை களைப் போராடிப் பெற்றிட வேண்டிய நிலையாக உள்ளது. உரிமைகளை வென்றெடுக்கும் களம் இது. துரோணச்சாரியார்கள் காலம் முடிந்து விட்டது. ஏகலைவர்கள் காலம் இது.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் - இடஒதுக்கீட்டின் மூலம் 'தகுதி - திறமை போய்விட்டது' எனும் கூற்று தவறு என சுட்டிக்காட்டி உள்ளது - வரவேற்கத்தக்க பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு ஆகும்.
நாடு முழுவதும் சமூகநீதி உணர்வுகள், உரிமைகள் மலர இயக்கத்தினை உருவாக்குவோம். அரசியல் கட்சிகளின் எல்லைகளைத் தகர்த்து இந்த இயக்கத்தினை உருவாக்குவோம். எது நம்மை பிரிக்கிறதோ அதை ஆழமாகப் புதைப்போம். எது இணைக்கிறதோ அதை அகலப்படுத்துவோம்.  நாடு தழுவிய இயக்கத்தினை சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 



முதலமைச்சர் உரை
    சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உரையின் சுருக்கம்:
இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் - சமூகநீதியின்  வெற்றிநாள். திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதுபோல, திராவிடர் இயக்கம் பாராட்டை எதிர்பார்த்து நடைபெறுகின்ற இயக்கம் அல்ல; சமூகநீதியை கடமையாகக் கருதி செயல்படும் இயக்கமாகும். மருத்துவக் கல்வியில் ஒன்றியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டு போராடிப் பெற்றதற்கு எனக்கு பாராட்டு என்றார்கள். இந்த பாராட்டை எனக்கானதாக  கருதவில்லை. தி.மு.க.வின் அடிப்படையாக இருக்கும், போராடிய தொண்டர்களுக்கான பாராட்டு என்பதாகத்தான் கருத வேண்டும்.
சமூகநீதி என்பது அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கின்ற நீதியாகும். 1921ஆம் ஆண்டில் அன்றைய நீதிக்கட்சி வகுப்புரிமை ஆணையை பிறப்பித்தது. 1951ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டம் முதன் முறையாக திருத்தப்பட்டு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராசர் ஆகிய தலைவர்கள் முயற்சியால் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர், முதலமைச்சராக இருந்தபொழுது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25இலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது; அதைப் போலவே தாழ்த்தப்பட்ட, பழங்குடியிருக்கான இடஒதுக்கீடு 16லிருந்து 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. பின்னர் பழங்குடி வகுப்பினருக்கு 1 விழுக்காடு என தனி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்த இடஒதுக்கீடு 69 விழுக்காடாக உயர்ந்திட தி.மு.க. காரணமாக இருந்தது. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு எனவும், மீதமுள்ள 30 விழுக்காட்டில் முஸ்லிம் வகுப்பினருக்கு 3.5 விழுக்காடும் தி.மு.க. அரசால் வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கான 18 விழுக்கட்டில் உள் ஒதுக்கீடாக  3 விழுக்காடு அருந்ததியின மக்களுக்கு வழங்கியதும் தி.மு.க. அரசுதான். இதன் தொடர்ச்சிதான் இன்று மருத்துவக் கல்வியில் மத்திய தொகுப்பில்  (கிமினி) பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இதுவரை இடஒதுக்கீடு இல்லாமல் இருந்த நிலையினை மாற்றி 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்திட, நீண்ட காலப் போராட்டம், நீதிமன்றத்தில் முயற்சி எடுத்து இறுதியில் இன்று வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி தானாகக் கிடைத்திடவில்லை.
ஒன்றியப் பா.ஜ.க. அரசிடம் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையாகக் கேட்டும் செவி சாய்க்கப்பட வில்லை. நீதிமன்றங்களில் தி.மு.க. வழக்குப்போட்டு - சாதகமான தீர்ப்பினை பெற்று - அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த ஆர்வமும் காட்டாத பா.ஜ.க. அரசினை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடுத்து வேறுவழியில்லாமல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒன்றிய தொகுப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காட்டை கொடுக்க பா.ஜ.க. முன் வந்துள்ளது. இந்த வெற்றியினை தனது வெற்றியாக பா.ஜ.க. கூறி வருவது உண்மைக்குப் புறம்பானது.

இதற்கிடையே சட்டப்போராட்டம் நடத்திய மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் பி.வில்சன் அவர்கள் பெரிதும் பாராட்டுக்குரியவர். தனது சொந்த வழக்கைப்போல நடத்தினார். அவரை வழக்குரைஞர் என சொல்லுவதை விட சமூகநீதிப் போராளி என்றுதான் அழைத்திட வேண்டும், பாராட்டிட வேண்டும்.
இந்த நிகழ்வு நல்ல தொடக்கம். நிச்சயம் கூடிய விரைவில் சமூக நீதிக்கான நாடு தழுவிய அளவில் இயக்கத்தினைக் கட்டமைப்போம்.   அனைவருக்கும் அனைத்தும் என்பது தான் திராவிட இயக்கக் கொள்கை! 

சமூக நீதி களத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர்  காண விரும்பிய வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சமூகநீதிக்கான உரிமை மீட்புப் பணியினை ஒருங்கிணைத்து இயக்கமாக கட்டமைப்போம். நாம் அடிக்கடிசந்திக்க வேண்டும். அதுவே நாம் விரும்புகிற சமூகநீதியினை வென்றெடுக்க வழி வகுக்கும். நாடு தழுவிய அளவில் ஒன்றிணைவோம். நன்றி.
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமதுரையில் குறிப்பிட்டார்.
பங்கேற்ற தலைவர்கள்
    சமூகநீதிக்கான இணைய கருத்தரங்கமாக, தமிழ்நாடு முதலமைச்சரைப் பாராட்டும்   நிகழ்வில் மராட்டிய மாநில அரசின் உணவு பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சாகன் சந்திரகாந்த் புஜ்பல் (சமூகநீதிக்கான கி. வீரமணி விருது பெற்றவர்) ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆடிமுலப்பு சுரேஷ், பீகார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் டெரிக் ஓபிரையன், இந்திய  யூனியன் முஸ்லீம் லீக் (கேரளா) நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான ஏ.டி. முகம்மது பஷீர், ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ்குமார் ஜா, பாம்செப் அமைப்பின் நிறுவனர் பி.டி. போர்க்கர், பாகாம் அமைப்பின் நிறுவனர் சர்தார் ஜிஜேந்திர் சிங் ஜால்வி மற்றும்  Lead India  அமைப்பின் தலைவர் டாக்டர் ஹரி எப்பனபள்ளி ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் வரவேற்புரையினை AIBF  அமைப்பாளர்  நீதியரசர் வி. ஈஸ்வரய்யா மற்றும் நன்றியுரையின் அலகாபாத் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிவீரந்திரசிங் யாதவ் வழங்கினர்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞர் ரிச்சர்ட் வில்சன் காணொலி ஒருங்கிணைப்பினைமேற்கொண்டார்.
தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல நாடுகளிலிருந்தும் சமூகநீதி செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மனித உரிமைப் போராளிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment