எனக்கு நீங்கள் அளித்த ‘பகுத்தறிவுப் போராளி' பட்டத்தை ‘‘பட்டமாகக்'' கருதவில்லை; ‘‘சட்டமாகக்'' கருதுகிறேன்!
உலக திராவிடர் மகளிர் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை
சென்னை, ஜன.26 வாழ்க்கையில் நான் பெரியாருடைய கைபிடித்து, அவருடைய தொண்டனாக, தொண்டர் களுக்குத் தொண்டனாக, வாழ்நாள் மாணவனாக இன்றைக்கும் திகழ்வதிலே எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகின்ற இந்த நேரத்தில், நீங்கள் எனக்குப் பட்டத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். அதை நான் பட்டமாகக் கருதவில்லை; சட்டமாகக் கருதுகிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 12.12.2021 அன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிமுதல் 12.05 மணிவரை அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பு காணொலிமூலம் நடத்திய உலக திராவிடர் மகளிர் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்புரையாற்றினார்.
அவரது ஏற்புரை வருமாறு:
பாராட்டாகக் கருதவில்லை - ஆணையாகக் கருதுகிறேன்
பாசத்தோடும், பரிவோடும் நடைபெறக்கூடிய இந்தக் கொள்கைக் குடும்ப உறவுகள் விழா - உலக திராவிடர் மகளிர் மாநாடு என்ற சிறப்பான நிகழ்விலே, உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடியவர்கள் அத்துணை பேரையும் ஒழுங்காக இணைத்து, சிறப்பான வகையிலே அருமையாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஏறத்தாழ மூன்று மணிநேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
பற்பல நாடுகளிலும் உள்ள எல்லோருக்கும் இன்னும் நிறைய பேசவேண்டும் என்ற ஆசையோடு இருக்கின்றனர். நான் பேசுவது முக்கியமல்ல; நீங்கள் பேசுவதை நான் கேட்டு, உங்களுடைய பேச்சை நான் பாராட்டாகக் கருதவில்லை; ஆணையாகக் கருதுகிறேன்.
ஏனென்றால், மிகச் சிறப்பான வகையில், ஒவ்வொரு வரையும் நான் பெயர் சொல்லி விளிக்கவேண்டும்; வணக்கம் தெரிவிக்கவேண்டும் என்று நினைத்தாலும், நேரம் நெருக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்களும் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
எனவேதான், நேரிடையாக நான் செய்திக்கே செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறேன். அதற்காக நீங்கள் அனைவரும் பொறுத்தருளவேண்டும், மன்னிக்கவேண்டும்.
நான் ஒரு தாயை பிறக்கும்பொழுதே இழந்திருக்கிறேன்; வாழும்போது ஏராளமான தாய்களைப் பெற்றிருக்கிறேன்
எனக்கு இன்றைக்கு ஏற்பட்டு இருக்கின்ற உணர்வுகள், வார்த்தைகளால் வர்ணிக்க முடியா தவை. நான் ஒரு தாயை பிறக்கும்பொழுதே இழந் திருக்கிறேன். ஆனால், வாழும்போது ஏராளமான தாய்களைப் பெற்றிருக்கிறேன், உலகம் முழுவதும்.
எனக்கு சகோதரிகள் கிடையாது, பிறக்கும் பொழுது. ஆனால், வாழும்பொழுது 89 வயதிலே, என்னுடைய சகோதரிகளுக்குக் குறைவே இல்லை.
என்னுடைய பேரப் பிள்ளைகள் ஏராளம் இருக்கிறார்கள்; இப்படி நண்பர்கள் என்று சொல் வதைவிட, எங்கள் கொள்கை உறவுகள் என்னை பாராட்டும்பொழுது, இது ஒரு குடும்ப விழா - பெரியார் பன்னாட்டமைப்பு - டாக்டர் சோம.இளங் கோவன், சரோஜா இளங்கோவன், அதுபோலவே, எங்களுடைய கொள்கைக் குடும்பத்திலே, பகுத்தறிவு செல்வமாக இருக்கின்ற கனிமொழி அவர்களுடைய சிறந்த உரை - பாராட்டு என்று சொல்வதைவிட, ஆழமான உரை, உண்மையான உரை.
அதுபோலவே, அருள்மொழியினுடைய தொடக்க உரை. அதுபோலவே, ஒவ்வொருவருடைய முத்தாய்ப்பான கருத்துகள்.
எதைச் சொல்வது, எதை விடுவது என்று தெரியாத அளவிற்கு இருந்தாலும்கூட, ஒன்றை நான் முதலில் நன்றாகத் தலைவணங்கித் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டமாகக் கருதவில்லை; சட்டமாகக் கருதுகிறேன்!
வாழ்க்கையில் நான் பெரியாருடைய கைபிடித்து, அவருடைய தொண்டனாக, தொண்டர்களுக்குத் தொண் டனாக, வாழ்நாள் மாணவனாக இன்றைக்கும் திகழ்வதிலே எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகின்ற இந்த நேரத்தில்,
நீங்கள் எனக்குப் பட்டத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். அதை நான் பட்டமாகக் கருதவில்லை; சட்டமாகக் கருதுகிறேன்.
வாழ்க்கையில் வளமாக இரு என்று சொல்வதைவிட,
நீ வாழ்நாள் முழுவதும் போராளியாகவே இரு.
களத்தை மறக்காதே -
வளத்தை நீ விரும்பியது இல்லை என்றாலும்,
வளம் முக்கியமல்ல -
களம்தான் உனக்கு முக்கியம்
என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நீங்கள் எனக்கு ஆணையிட்டு இருக்கிறீர்கள்; சட்டம் போட்டு இருக் கிறீர்கள்.
இந்த சட்டத்தை மீறப்படாத சட்டமாக நான் காப்பாற்றிக் கொள்வேன். சட்டத்திற்குள்ளே செயல்படுவேன்.
ஏனென்றால், இதில் பெருமைகள் வருவதைவிட, போராளியாக வாழ்வதுதான் மிகவும் முக்கியம்.
ஒரு உறுதி எடுத்துக்கொண்டேன்!
ஒரே ஒரு உறுதி எடுத்துக்கொண்டேன். அதற்கு நீங்கள் ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி!
பெரியார் விட்ட பணிகளை,
அவர்கள் போட்டுத் தந்த பாதையில்
செய்வோம் என்ற உறுதி!
அந்த உறுதிதான், என்னை என்றைக்கும் பகுத்தறிவுப் போராளியாக ஆக்கக்கூடிய ஒன்றாக வைத்திருக்கும்.
எனவேதான் நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள்.
சோர்ந்துவிடாதே -
அயர்ந்துவிடாதே -
நின்றுவிடாதே -
போராளியாகக் களத்தில் நில் என்று கட்டளையிட்டுள்ளீர்கள்.
நம்முடைய ஆயுதங்கள் எவை என்று சொல்லுகின்ற நேரத்தில், மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்திகள் என்னவென்றால்,
ஒப்பற்ற சமத்துவத்தை உருவாக்கவேண்டும்
நம்முடைய ஆயுதங்கள் - நாம் எடுக்கவேண்டிய ஆயுதம் எது என்பதை நாம் தீர்மானிப்பதைவிட, களத்திலே - நம்முடைய எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
அந்த வகையிலே, அருமை நண்பர்களே!
நம்முடைய இன எதிரிகள்,
பகுத்தறிவுக்கு விரோதமானவர்கள்,
மனிதநேயத்தைக் குழிதோண்டிப் புதைக்கவேண்டும் என்று பேதமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றவர்களுக்கு ஒப்பற்ற சமத்துவத்தை உருவாக்கவேண்டும்.
தந்தை பெரியார் சொன்னார், மகளிர் என்று சொல்லக் கூடிய அந்த வாய்ப்பு, மக்கள் தொகையில் சரி பகுதி - அந்த மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய மகளிருடைய உரிமைகள் காப்பாற்றப்பட்டால், அதுதான் சிறப்பு.
தந்தை பெரியார் - தெளிவாகவும், உறுதியாகவும் சொன்னார்
ஆண்களைப் பார்த்துத் தெளிவாக சொன்னார் தந்தை பெரியார் - தெளிவாகவும், உறுதியாகவும் சொன்னார்.
பெண்கள் சிறப்பாக வாழவேண்டும் என்று சொன்னால், ஆண்களே, நீங்கள் ஒழுக்கத்தோடு இருக்கவேண்டும் என்று.
எனவேதான், இது ஆணாதிக்க சமுதாயமாக இன்ன மும் இருந்துகொண்டிருக்கிறது; பேதமுள்ள சமுதாயமாக இருக்கிறது.
பிறவி பேதத்தை ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய இலக்கு!
பிறவி பேதத்தை ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக் கத்தினுடைய இலக்கு. பெரியாருடைய லட்சியம்.
அதனுடைய ஒரு பகுதிதான் பெண்ணடிமை
அதனுடைய ஒரு பகுதிதான் ஜாதி.
மேற்சொன்ன இரண்டும்தான் பிறவி பேதத்திற்கு அடையாளம் என்று சொல்லும்பொழுது, அதற்கு சரியான விடை காணவேண்டும் அந்தக் களத்திலே என்றால், எல்லோரும் பகுத்தறிவுப் போராளியாக மாறினால்தான், சமுதாயத்தை மாற்ற முடியும்.
பகுத்தறிவைப்பற்றி பேசினால் மட்டும் போதாது நண் பர்களே, போராளியாக மாறவேண்டும். இங்கே இலங்கை மட்டக்களப்பு சகோதரிகளும், மற்ற தோழர்களும் சொன் னதைப்போல, வன்முறையில் பெரியாருக்கு நம்பிக்கை யில்லை.
அறிவாயுதம்தான் அவருடைய ஆயுதம்.
ஆயுதங்களை எடுப்பது போர்க்களத்திலே என்று சொன்னால், ஏதோ நாம் வன்முறையைத் தூண்டக் கூடியவர்கள் அல்ல - அறிவாயுதத்தை எடுக்கக் கூடிய வர்கள்.
சிந்தித்துப் பார் -
நம்பாதே -
உன்னுடைய அறிவைப் பயன்படுத்து -
பகுத்தறிவு என்பது மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்னாரே,
அந்த மானமும், அறிவும் பகுத்தறிவினுடைய பயனாக வரக்கூடிய சூழ்நிலையிலே நண்பர்களே, மிகச் சிறப்பான வகையில் ஒரு வாய்ப்பினை உருவாக்கவேண்டும்.
உலக திராவிடர் மகளிர் மாநாட்டில் பகுத்தறிவுப் போராளி என்று எனக்கு பட்டம் கொடுத்திருக் கிறீர்கள் - எனக்குக் கட்டளையிட்டு இருக்கிறீர்கள்.
களத்தை மறக்காதே-
கடமையை மறவாதே -
கடமையில் தொய்வடையாதே
என்று சொன்னதாகத்தான் நான் அதனை எடுத்துக் கொள்கிறேன்.
பகுத்தறிவுச் செல்வம் கவிஞர் கனிமொழி
குறிப்பாக சொல்லவேண்டுமானால் நண்பர்களே,
நம்முடைய பகுத்தறிவுச் செல்வம் கவிஞர் கனிமொழி அவர்கள், மிகச் சிறப்பான முறையில் சொன்னதைப்போல,
திராவிட இயக்கத்திலே அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்று இப்படி பலர் வந்தாலும்,
திராவிடர் இயக்கம் என்பது இருக்கிறதே, அது அடிப்படையிலே பகுத்தறிவு இயக்கம்.
அறிவுப் போர் - அமைதிப் போர் - ரத்தம் சிந்தாத புரட்சி!
பகுத்தறிவு என்று சொல்வதில், அவரவருக்குரிய வாய்ப்புகளிலே வித்தியாசம் இருக்கும். யாரையும் நாம் வற்புறுத்துவதில்லை; யார்மீதும் திணிப்பது இல்லை நம் முடைய கருத்தை - சிந்திக்க வைப்பதுதான் நம்முடைய வேலை.
அதற்காகப் போர் புரிகின்ற நேரத்தில், அந்தப் போர் என்பது அறிவுப் போர் - அமைதிப் போர் - ரத்தம் சிந்தாத புரட்சி.
அந்த வகையிலே நீங்கள் அளித்த பட்டத்தைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன், பணி செய்ய கட்டளையிட்டு இருக்கிறீர்கள் என்று.
இதற்கு எனக்கு என்ன தகுதி என்றால்,
‘‘நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்’’ -
சொந்த புத்தியைப் பயன்படுத்தாமல், பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்துகின்றவன் என்கின்ற காரணத் தினாலே, நான் என்றைக்கும் பகுத்தறிவுப் போராளியாக - போராளியாக நின்று கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பை நீங்கள் இன்றைக்குப் புதுப்பித்திருக்கிறீர்கள். அதற்காக மீண்டும் மீண்டும் தலைவணங்கி நன்றி சொல்லுகின்றேன்.
இந்த நேரத்தில், இவ்வளவு நேரம் நீங்கள் சொல்லிய பெருமைகள் என்னுடைய பெருமைகளோ, அல்லது தனிப்பட்ட பண்புகளோ அல்ல - இவ்வளவும் யாருக்கு உரியது என்றால்,
என்னுடைய அறிவாசானுக்கு,
என்னுடைய ஞானாசிரியனுக்கு
நம்மையெல்லாம் உயர்த்திய அறிவாசான்,
ஒப்பற்ற தலைவர்,
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.
போராளியாக என்னை செதுக்கிய பட்டறை பெரியாரின் பட்டறை!
எனவே, நீங்கள் என்னை ஒரு போராளியாகப் பார்ப் பதற்கு - இந்தப் போராளியாக என்னை செதுக்கிய பட்டறை பெரியாரின் பட்டறை.
ஆகவேதான், இந்த சிறப்பை பெரியாரின் நினைவிடம் நோக்கி நான் காணிக்கையாக்குகின்றேன்.
அடுத்து, ஒரு பெரிய கொள்கைக் குடும்பமாக - நேரிலே பார்க்கவில்லை என்றாலும், நமக்கு ஜாதி, மதம், நாடு, பிரிவு எதுவுமில்லை. வளர்ச்சிப் பற்று - மனிதப்பற்று என்று சொன்னார்களே, அதற்கு அடையாளம் இன்றைய மாநாடு.
இந்த மாநாட்டில், எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா பகுதிகளிலிருந்தும் தோழர்கள் பாலின வேற்றுமை இல்லாத அளவிற்குப் பங்கேற்று உரையாற்றி இருக்கிறீர்கள்.
நீங்கள் எல்லாம் சிறப்புக்குரியவர்கள் - இவ்வளவு பெரிய அளவிற்கு நான் உழைப்பதற்குக் காரணமானவர்கள். அருமை இயக்கத்தினுடைய உறவுகள்.
தோழர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்
அது சிகாகோவில் உள்ள பெரியார் பன் னாட்டமைப்பாக இருந்தாலும்,
மியான்மா நாட்டில் இருந்தாலும்,
மலேசிய அமைப்பிலே இருந்தாலும்,
சிங்கப்பூரிலே இருந்தாலும்,
ஆஸ்திரேலியாவிலே இருந்தாலும்
நாம் எல்லோருமே ஒரே சிந்தனை உடைய வர்கள்தான்.
பேதமற்ற பெருவாழ்வு-
சுயமரியாதை வாழ்வே - சுகவாழ்வு என்ற உணர்வை நாம் பெறுவதற்குக் காரணமாக - இந்த உற்சாகத்தை நீங்கள் தந்து கொண்டிருக்கிறீர்களே,
நான் இதை தோழர்களுக்குக் காணிக்கையாக்கு கிறேன்.
என்னுடைய வாழ்விணையருக்குத் தலைதாழ்ந்த நன்றி
எல்லாவற்றையும்விட, இன்னும் இதற்கு மூலகாரணம், இந்த அளவிற்கு நான் உழைப்பதற்குக் காரணம், நீங்களே தெளிவாக சொன்னதைப்போல, என்னுடைய வாழ் விணையர் திருமதி மோகனா அவர்களாவார்கள்.
அவர்கள் இந்த அளவிற்கு எனக்குப் பெரிய பலத்தைத் தந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், அந்த மணவிழாவின் மூலமாகத்தான் இந்த இயக்கத்திற்கே ஒரு பெரிய லாபம் என்று சொல்லவேண்டும்; எனக்கு லாபமா? இல்லையா? என்பது பிறகு.
இயக்கம் வாழ்வதற்கு, இயக்கத்தினுடைய கருவிகள், ‘‘விடுதலை’’ போன்றவை நிலைநாட்டப்பட்டு இருப்பதற்கு, அந்த ஏற்பாடுகள் காரணமாக அமைந்தது என்று சொல்லுகின்ற நேரத்தில்,
அவர்கள் கடந்த 63 ஆண்டுகளும், எனக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக என்னைத் தூண்டக் கூடியவனாக, அயர்வற்றவனாக ஆக்குவதற்குக் காரணமாக இருக்கின்றவர்களுக்கு இந்த நேரத்தில்,
அய்யாவிற்கு,
அன்னை மணியம்மையார் அவர்களுக்கு,
இயக்கத் தோழர்களுக்கு,
இயக்க வரவுகளுக்கு,
கொள்கை உறவுகளுக்கு,
உலகம் முழுவதும் உள்ள கொள்கை உறவுகளுக்கு,
அதேபோல, என்னுடைய வாழ்விணையருக்குத் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த வகையிலே, என்னுடைய உடன்பிறவா சகோதரராக என்றைக்கும் இருக்கக்கூடியவர் பெரியார் பன்னாட்டமைப்புக் குடும்பம் - குறிப்பாக இளங்கோவன் அவர்களும், அவருடைய வாழ்விணையரும். அதேபோல, ரவி, வினோபிரியா - அதேபோல, ஒவ்வொருவருடைய பெயரையும் இங்கே சொல்லவேண்டும்.
(தொடரும்)
No comments:
Post a Comment