ஊன்றிப் படித்து உண்மையை உணர்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

ஊன்றிப் படித்து உண்மையை உணர்க!

 ஆளுநர் அறிக்கையா?

அனந்தபுரம் தீட்சதரின் உபந்நியாசமா?

‘‘மதச்சார்பின்மை'' என்ற அரசமைப்புச் சட்ட உறுதிமொழி காற்றில் பறக்கிறது!

ஆளுநர் அறிக்கையா? அனந்தபுரம் தீட்சதரின் உபந்நியாசமா? என்றும், மதச்சார்பின்மை என்ற அரசமைப்புச் சட்ட உறுதிமொழி காற்றில் பறக்கிறது என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் மேதகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் குடியரசு தின வாழ்த்துச் செய்தியாக மக்களுக்கு அறிக்கை ஒன்றைத் தந்துள்ளார். 8 பக்கங் களைக் கொண்ட அந்த அறிக்கையைப் படிக்கும் பொழுது, ஒரு மாநில ஆளுநரின் அறிக்கையா? அனந்தபுரம் அனந்தராம தீட்சதரின் உபந்நியாசமா? அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் ஆன்மிகச் சொற்பொழிவா? என்றுதான் எண்ணத் தோன்றும்.

அப்படி என்னதான் ஆளுநரின் அறிக்கை கூறு கிறது?

1. ஆன்மிகத்தில் திளைத்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.

2. ஓங்குயர் ஞானியான திருவள்ளுவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தெய்வீகம் கமழுகின்ற புனிதத் திருக்குறளை நமக்கு அளித்துள்ளார். திருக் குறளில் காணப்படுகிற இம்மைக்கும், மறுமைக்குமான ஞானமே, பாரதத்தின் அழிவற்ற ஆன்மிகத்தின் ஊற்றுக்கண் எனலாம்.

3. ஒவ்வொரு பாரதீய குடிமகனின் உள்ளத்திலும் நிரந்தரக் கோவில் கொண்டுள்ள ஸ்ரீராமனின் வாழ்க் கையைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடிக் கொடுத் துள்ளார்.

4. நாமெல்லோரும் நாயன்மார்களின், ஆழ்வார் பெருமக்களின், அவ்வைப் பாட்டியின், ஆண்டாள் நாச்சியாரின் பெருமைக்குரிய குழந்தைகளாவோம்.

5. நம் நாட்டின்மீதான படையெடுப்பாளர்களும், காலனி ஆதிக்கக்காரர்களும் நம் பண்பாட்டுப் பெரு மிதத்தைக் குலைப்பதற்கு முயன்றனர். வட்டார இன, மொழி போன்ற செயற்கைப் பாகுபாடுகளின் நச்சு விதைகளைத் தூவினர்.

6. நாம் சுதந்திர நாடானவுடனேயே காலனி ஆட்சியாளர்களால் நம்முடைய தனி மற்றும் கூட்டு மனங்களில் விதைக்கப்பட்ட நச்சு விதைகள் குறித்தும், அவற்றின் நீண்ட கால விளைவுகள் குறித்தும் அண்ணல் காந்தியடிகள் எச்சரித்தார்.

7. 2000 ஆண்டுகளுக்குமேலாக பாரதத்தின் பண் பாட்டு மய்யமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நம்முடைய வாழ்வின் அசைவுகள் அனைத்திலும் பக்தி உணர்வு பரவியுள்ளது. நாட்டிலேயே அதிகப்படியான கோவில் கள் கொண்டுள்ள மாநிலம் நம்முடையதே ஆகும். சில கோவில்கள் 2000 ஆண்டுகள் பழைமையானவை. இவை பயன்பாட்டில் இருக்கிற உயிர்ப்புமிக்க கோவில் களாகும். இவை விலை மதிப்பிட முடியாத பண்பாட்டு ஆன்மிகச் சொத்துகள் என்று நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார் மேதகு ஆளுநர் அவர்கள்.

ஆன்மிகத்தில் திளைத்த பாரதத்தை உருவாக்க வேண்டுமாம். அது என்ன ஆன்மிகம்? கடவுள் சம்பந்தப்பட்டதா - மதம் சம்பந்தப்பட்டதா? சாஸ்திர சம்பிரதாயங்கள் சம்பந்தப்பட்டவையா? மானுடம் சம்பந்தப்பட்டவையா?

இந்த ஆன்மிகம் மக்களை இணைப்பதா? பிளப் பதா? என்று தெளிவாக்கப்படவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், இது ஒரு மூடுதிரை.

பிறப்பிலேயே உயர்ந்த ஜாதி என்றும், தாழ்ந்த ஜாதி என்றும் பிளவுபடுத்தும் ஏற்பாடு - இதைக் கேள்வி கேட்க முடியாது; காரணம், இது கடவுள் ஏற்பாடு. பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் - பிராமணன்; காலில் பிறந்தவன் - சூத்திரன். இந்தப் பூலோகத்தைப் பகவான் படைத்ததே பிராமணர்களுக்காகத்தான். சூத்திரர்களைப் படைத்ததே பிராமணர்களுக்கு அடிமை வேலை செய்யத்தான். சூத்திரன் என்றால் ஏழு வகைப்படுவான்; அதில் ஒன்று விபசாரியின் மகன். இந்த ஆன்மிக ஏற்பாட்டைத் தான் ஆளுநர் பெரு மகனார் எதிர்பார்க்கிறாரா?

இதில் திருக்குறளையும் கொண்டு வந்து சேர்த் திருப்பதுதான் மிகப்பெரிய முரண்பாடு! திருக்குறளில் காணப்படுகிற இம்மைக்கும், மறுமைக்குமான ஞானமே பாரதத்தின் அழிவற்ற ஆன்மிகத்தின் ஊற்றுக் கண்ணாம்.

திருக்குறளில் எந்த இடத்தில் இம்மை - மறுமை பேசப்படுகிறது? திருக்குறளில் கடவுள் என்ற வார்த் தையாவது உண்டா? மதம் என்ற சொல்லைக் காட்ட முடியுமா? ஜாதி என்ற பிரயோகத்தைக் கூற முடியுமா?

இன்னும் சொல்லப்போனால், மனுதர்மத்திலும், கீதையிலும் சொல்லப்படும் பிறப்பின் அடிப்படையிலேயே ஜாதி - வருணம் என்னும் ஆணிவேரைச் சுட்டுப் பொசுக்கும் ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற மானுட உயர் தத்துவத்தைத் தந்த வள்ளுவரை, இம்மை, மறுமை என்னும் குடுவைக்குள் அடைப்பது ஏற்புடையதா?

மனுதர்மத்தின் தழுவல் என்றும், கீதையின் சாரம் என்றும், பரிமேலழகர்களும், சங்கராச்சாரிகளும், நாக சாமிகளும் கூறும் கருத்தினை வேறு வார்த்தைகளில் வண்ணம் தீட்டுகிறார் ஆளுநர் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஸ்ரீராமனின் வாழ்க்கையைக் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக் கொடுத்துள்ளார் என்று புகழ்பாடுகிறார் ஆளுநர்.

உண்மையைச் சொல்லப்போனால், கம்பனே குற்ற வுணர்வுடன்தான் அந்த இராமாயணத்தை எழுதி யுள்ளார்.

வையகம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்' என்றுதான் தொடங்குகிறார்.

மூல நூலான வால்மீகி இராமாயணத்தில் இடம் பெற்ற உத்தரகாண்டத்தை கம்பன் தவிர்த்தது ஏன்?

சூத்திரனாகிய சம்பூகன் தவம் செய்தான் - வருண முறையில் தவம் சூத்திரனுக்கே உரியதன்று - அப்படி ஒரு சூத்திரன் தவம் இருந்ததால், பிராமணக் குழந்தை செத்துப் போய்விட்டது என்றும், வருண தர்மத்தைப் பிழைத்த அந்தச் சூத்திரனை இராமன் வாளால் வெட்டிக் கொன்றதால், செத்துப்போன பிராமணக் குழந்தை உயிர் பிழைத்தது என்றும் கூறும் அந்த இராமாயணத் தத்துவத்தைத் தான் பாரதம் போற்றும் ஆன்மிகம்என்று ஆளுநர் கூற வருகிறாரா?

ஸ்ரீ ராம பிரான் பிறந்த புண்ணிய பூமி என்பது இந்த அடிப்படையில்தானா?

இராம அவதாரம் என்பதே முனிவர்களின் சாபத் தால் ஏற்பட்டதும், அந்த சாபத்தின் காரணங்கள் மகா விஷ்ணுவின் காம ரீதியான பல்வேறு நடவடிக்கை களும், கற்பழிப்புகளும் நிறைந்ததே என்பதை ஆளுநர் அவர்கள் படித்துத் தெரிந்திருந்தால், ராமனைப் பக வான் என்று அர்ச்சித்திருக்க மாட்டார் என்று நம்பலாம்.

வட இந்தியாவில் எடுபடும் ராமன், தமிழ்நாட்டில் எடுபடாது - எடுத்துக்காட்டு 1971 சட்டப்பேரவைத் தேர்தல் - சேலம் நிகழ்வுகள்!

நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆண்டாள் நாச்சி யாரின் பெருமைக்குரிய குழந்தைகள் நாமாம்!

யார் இந்த நாயன்மார்கள்? பக்தனின் மனைவியைக் கேட்டவன்; பக்தனின் பிள்ளையை அரிந்து பிள்ளைக் கறி சாப்பிட்டவன் எல்லாம் கடவுள் - அதுவும் முழுமுதற் கடவுள்; பக்திப் போதையால் மனைவியைக் கொடுத்தவனும், குழந்தையை அரிந்து கறி சமைத்துக் கொடுத்தவனும் நாயன்மார்கள் - அவர்களை நாம் பின்பற்ற வேண்டுமா?

நாகையில் இருந்த புத்தரின் அய்ம்பொன்னாலான சிலையைத் திருடிக் கொண்டுவந்து, சீரங்கத்துக் கோவில் மதிற்சுவர் எழுப்பிய திருமங்கை ஆழ்வார் (ஆதாரம்: தஞ்சைவாணன், கோவை) போல நாட்டு மக்கள் வாழ வேண்டும் என்று ஒரு நாட்டின் கவர்னர் வழிகாட்டலாமா?

ஆண்டாள் யார்?

தந்தையாகிய கடவுளையே கணவனாக வரித்துக் கொள்ள வேண்டும் என்று  பாடிய கற்பனைப் பெண் மணிதானே! ஆனால், ‘‘ஆண்டாள் என்ற ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல - பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் வெளிப்படுத்தினார்'' என்கிறாரே வைணவத்தில் ஆழ்ந்து குளித்தெழுந்த ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச் சாரியார் அவர்கள். (ராஜாஜி) (ஆதாரம்: ‘திரிவேணி' ஆண்டு, 1946).

பாரதத் தத்துவமே ஆன்மிகப் பண்பாடு என்று சொல்லிக் கொள்வது எல்லாம்ஒரு நாகரிக'மாகப் போய்விட்டது. வேதங்களும், இதிகாசங்களும், புரா ணங்களும் மனிதப் பண்பை உயர்த்தும் தரம் வாய்ந்த வையல்லவே! பேதப்படுத்தும் நச்சு விதைகள்தானே!

தந்தையைக் கொன்று, தாயைப் புணர்ந்தவனுக்கு சிவன் மோட்சம் கொடுத்தான் என்பதை எந்தப் பட்டி யலில் கொண்டுபோய்ச் சேர்ப்பதோ! (திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம்).

இராமாயணம், பாகவதம்பற்றி தந்தை பெரியார் சொன்னால், ஏதோ ஒரு வெறுப்புணர்ச்சியால் புறந் தள்ளுவர் - அதையே ராஜாஜி சொன்னால்...

இதோ ராஜாஜி:

‘‘நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தேன். ஸ்ரீராமன் உலகத்திற்கு வழிகாட்ட அவதரித்த கடவுள். சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து கொண்டு வந்த பின், ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டு, சீதையைக் காட்டுக்கு அனுப்பிவிட்டார் என்ற கொடுஞ்செயலை என் மனதிற்குச் சமாதானம் செய்ய முடியவில்லை.''

- ராஜாஜி

(.திருநாவுக்கரசு எழுதிய ‘‘திராவிட இயக்க இதழ்கள்'' பக்கம் 60).

இதற்கு ஆளுநர் மட்டுமல்ல - ஆன்மிகக் கொழுந்துகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

‘‘பாகவதம்''பற்றி இதோ ராஜாஜி:

‘‘வியாசர் விருந்து'' என்ற தலைப்பிலும், சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் 'கல்கி'யில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளி யிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.

‘‘சதாசிவம் எனக்குப் பாகவதத்திலும் நாட்ட மில்லை. அதில் பகவானின் லீலைகளும், அற்புதங் களும் மிகுதியாக உள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார்.''

('கல்கி', 4.10.2009, பக்கம் 72).

சொல்லியிருப்பவர் வைணவக் கொழுந்து ராஜாஜி தான்.

சிந்திக்கவேண்டாமா?

ராஜாஜி கொஞ்சம் நாகரிகமாக சொல்லிவிட்டார். பகவான் என்றால் ஒழுக்கச் சீலனாக இருக்கவேண்டும் என்பதுகூட இல்லையே! இதுதான் ஆளுநர் கூறும் பாரதப் பண்பாடா?

இந்தியாவில் கோவில்கள் நிரம்பி வழிவது குறித்தும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கோவில்கள் அதிகம் என்பது குறித்தும் பெருமிதப்படுகிறார் தமிழ் நாடு ஆளுநர்.

தமிழ்நாட்டில் 77,450 கோவில்கள் அனுமதியின்றி சட்ட விரோதமாகக் கட்டப்பட்டவை - இடிக்கப்பட வேண்டியவை - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு (14.9.2010). இது என்ன ஒழுக்கம்?

உண்மையைச் சொல்லப்போனால், கோவில்களும், உருவ வழிபாடுகளும் பெருமிதத்துக்கு உரியவையல்ல - உயர்ந்த நிலைப்பாட்டுக்கும் உரியதல்ல.

இதுகுறித்தும் நாம் சொன்னதல்ல - மகாபாரதத்தில் ஒரு பகுதியானஉத்திர கீதை' என்ன சொல்லுகிறது என்பதையும் பார்க்கலாமா?

‘‘துவிஜதர்களுக்கு அதாவது இரு பிறப் பாளர்களான பிராமணர்களுக்குத் தெய்வம் அக்னி யில்; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில்; சமபார்வை உள்ளவர்களுக்குத் தெய்வம் எங்கும்.''

(உத்திர கீதை, பாரதத்தில் ஒரு பாகமான வேதாந்தம்)

ஆகக் கோவில், சிலை வழிபாடு என்பது -  புத்தி குறைந்தவர்களுக்குத்தானே - இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

பக்தி, கோவில்கள்பற்றி ஆளுநர் பெருமான் விதந்து விதந்து எழுதியிருக்கிறார் - உண்மை நிலை என்ன?

மிகப்பெரிய கோவில் என்று பக்தர்கள் கூடும் திருப்பதியின் நிலை என்ன?

‘‘திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மய்யங்கள் இயங்கி வருகின்றன - 400 விபச்சார அழகிகள் உள்ள னர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்படுகின்றன.

கடந்த மே மாதம் திருப்பதியில் 7,600 ஆண்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களில் 268 பேருக்கு எச்.அய்.வி. கிருமி தொற்றி யிருப்பது தெரிய வந்துள்ளது. (‘தினத்தந்தி, 21.6.2008, பக்கம் 17).

கோவில் நகரங்களில் பால்வினை நோய் அதிகம்! UP Temple Towns under AIDS Threat (‘தி பயோனிர்', 21.7.1997).

சென்னையில் 12, 13.6.1976 ஆகிய இரு நாள்களிலும் பாலியல் நோய்பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை பொது மருத்துவமனையின் பாலியல் நோய்த் துறை இயக்குநர் டாக்டர் சி.என்.சவுமணி அக்கருத்தரங் கில் கூறிய தகவல், 'புண்ணியத்' தலங்களின் புண்பட்ட யோக்கியதையை வெளிப்படுத்தக் கூடியதாகும்.

‘‘பக்தர்கள் அடிக்கடி கூடும் புண்ணிய ஸ்தலங் களில்தான் விபசாரம் பெரிய அளவில் நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள விபசாரிகள்மூலம் சராசரி மூன்று பேருக்கு இந்த நோய் பரவுகிறது.

நமது கோவில்களும், புண்ணியதலங்களும் நாட்டு மக்களுக்குக் குறிப்பாக பக்தர்களுக்கு வழங்கும் கேடுகளும், ஆபத்துகளும் பாரத நாட் டின் மாபெரும் பண்பாடு என்று மேதகு ஆளுநர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று நம்புவோம்!''

என்று கூறினாரே, டாக்டர் சவுமணி கருப்புச் சட்டைக்காரரா?

மதம் குறைந்தபட்சம் மக்களிடையே சகோதர மனப்பான்மையையாவது ஏற்படுத்தியதுண்டா? மதக் கலவரங்கள் நாட்டை இரணகளம் ஆக்கவில்லையா? ஒரே மதத்துக்குள்ளேயே எத்தனை எத்தனைச் சண் டைகள் - கொலைகள் - குத்துவெட்டுகள் - இதுகுறித்தும் ஆஸ்திக - ஆன்மிகச் சிகாமணி சாட்சாத் ராஜாஜி என்ன கூறுகிறார்?

இதோ:

‘‘நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும், பக்தர்கள் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைதான் அதிகம்.''

- முதலமைச்சர் ராஜாஜி

(சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில், 15.4.1953).

பக்தி தனிச் சொத்து - ஒழுக்கம் பொதுச் சொத்து என்று சொன்ன பெரியார் எங்கே? ஆளுநர் கூறும் ஆன்மிகம் எங்கே?

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற சண்டை லண்டன்பிரிவு கவுன்சில்வரை செல்லவில்லையா?

மதம் மனிதத்தை உருக்குலைத்ததே தவிர, உன்னதத் தத்துவத்தை ஒருபோதும் வழங்கிடவில்லை -  கைதூக் கியதும் இல்லை என்பது நினைவில் இருக்கட்டும்!

எத்தனை எத்தனை புத்தக் கோவில்கள் இடிக்கப் பட்டுள்ளன - இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன - நீண்ட பட்டியல் உண்டே!

பிராமணிசம்'பற்றி அமெரிக்கா - சிகாகோவரை சென்று பறைசாற்றிய 'இளந்துறவி' விவேகானந்தர் என்ன சொல்லுகிறார்?

இதோ:

பூரி ஜெகந்நாதர் ஆலயம் பழங்காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது.

- விவேகானந்தர்

(நூல்: ‘‘இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக!'')

நம் கண் எதிரிலேயே நடந்ததே! 450 ஆண்டு வரலாறு படைத்த இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டு, அங்கு ராமன் கோவில் கட்டப் படுகிறதே - அரசே முன்னின்று நடத்துகிறதே - இதுதான் இந்(து) மதத்தின் வழிகாட்டுதலா? பண்பு நெறியா?

விரிக்கின் பெருகும் - அதனால் இத்தோடு இந்தக் குற்றச்சாட்டை நிறுத்திக் கொள்வோம்.

ஒன்றை உறுதி செய்து கொள்ளலாம். இந்த நிலை தொடர்ந்தால், என்ன நடக்கும்? நாடு என்ன நிலைக்கு ஆளாகும்?

உலக அறிஞர்களுள் முன்னணியில் இருக்கத்தகுந்த அண்ணல் அம்பேத்கர் என்ன கூறுகிறார்?

‘‘சமத்துவம் இன்மை மற்றும் பாரபட்ச தொல்லை களால் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்கள் ஒரு கட்டத்தில் நாட்டின் அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள்.''

 - டாக்டர் அம்பேத்கர்

(‘‘மனித உரிமைக் கங்காணி'', ஆண்டு 2010, பக்கம் 6)

இதற்கு விளக்கமும் வேண்டுமா?

மொழிபற்றிய ஆளுநர் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். குருநாதரின் சிந்தனை வாடை சிலிர்க்கிறதே!

இதோ:

‘‘ஹிந்துராஷ்டிரத்தைப்பற்றி நாம் கொண்டி ருக்கும் கற்பனையின்படி, அது வெறும் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு வெறும் மூட்டையல்ல; பண்பாடுதான் அதன் சாரமான தத்துவம். நமது தொன்மையான, மாண்புயர்ந்த பண்பாட்டு, மூலங்கள் அதன் மூச்சுக்காற்றாகும்.

- கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்

('ஞானகங்கை', நூல் பக்கம் 33-34).

நமது தேசிய மொழிப் பிரச்சினைக்கு வழிகாணும் முறையில், சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பெறும் வரையில் சவுகரியத்தை ஒட்டி, ஹிந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தர வேண்டியிருக்கும், ஹிந்தி மொழியில் எந்தவிதமான அமைப்பு உடைய ஹிந்தியைக் கைக்கொள்ள வேண்டும்? எந்த ஹிந்தி அமைப்பு மற்ற பாரதீய மொழிகளைப் போல சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியுள்ளதோ, வளர்ச்சி பெற்றுள்ளதோ அதைத் தான் இயற்கையாக நாம் விரும்புகிறோம்.

- கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்

(‘ஞானகங்கை', நூல் பக்கம் 171).

ஆளுநர் உரை  என்பது ஆர்.எஸ்.எஸ். குருநாதரின் மொழி பெயர்ப்பா?

தமிழ்நாட்டுக்கு வந்த ஆளுநர் அவர்கள் அந்தத் தமிழ்நாட்டின் வரலாறு, ஒரு நூற்றாண்டு இந்நாட்டு மண்ணின் மணமாகக் கொழிக்கும் சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கம் - இவற்றின் தாக்கத்தை குறைந்தபட்சமாவது உணர்ந்திருக்க வேண்டாமா? தெரிந்திருக்கவேண்டாமா?

நாடாளுமன்றத்தின் பதவியேற்பு விழாவிலேயே தமிழ்நாட்டு உறுப்பினர்கள் ‘‘தந்தை பெரியார் வாழ்க!'', ‘‘திராவிடம் வெல்க!'' என்று முழக்கமிட்டதன் பின்னணி என்ன? நேர்த்தி என்ன என்பதை அறிந்திருக்க வேண்டாமா?

குறைந்தபட்சம் பெயருக்குப் பின்னால் ஜாதி ஒட்டை இம்மண்ணின் மக்கள் நிராகரிப்பதன் சீலத்தை உணர வேண்டாமா?

தமிழ்நாட்டின் தந்தை என்ன சொல்லுகிறார்?

இதோ:

‘‘மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கிறது.''

- தந்தை பெரியார், (‘விடுதலை', 14.10.1971)

‘‘மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு வேண்டு மானாலும் மன்னிக்கலாம். ஆனால், அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும், அது மன்னிக்க முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வதென்னவென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாக ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள்ளுகிறேன்.''

- தந்தை பெரியார், விடுதலை', 4.4.1968

ஒரு நாடு என்றால், எப்படி இருக்கவேண்டும். ஆட்சியின் ஓர் அங்கமாக இருக்கும் நமது ஆளுநர் அவர்களின் கவனத்துக்கு இதோ:

‘‘ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கிறார்கள். நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும் வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், நாட்டில் எல்லாத் துறைகளிலும்,

சமதர்மம்,

சம ஈவு,

சம உடைமை,

சம ஆட்சித் தன்மை,

சம நோக்கு,

சம நுகர்ச்சி,

சம அனுபவம்

இருக்கவேண்டும்! ஏற்படவேண்டும்!! ஏற்படுத் தப்பட வேண்டும்!!! ஏற்பட்டாக வேண்டும்!!!!''

- தந்தை பெரியார், ('விடுதலை', 13.1.1965)

‘‘உள்ளதைப் பங்கிட்டு உண்பது. உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது! என்ற நிலை ஏற்பட்டால், கடவுளுக்கு வேலையோ, அவசியமோ இருக்காது.''

- தந்தை பெரியார் (‘விடுதலை', 3.11.1970)

இந்த அரும்பெரும் தத்துவத்துக்கு முன்பு - ஆளுநர் கூறும் ஆன்மிகம், கோவில், பக்தி, கீதை, இராமாயணம், இத்தியாதி, இத்தியாதி உபதேசங்கள் ஒரு நொடி நிற்க முடியுமா?

காந்தியடிகளைப்பற்றியும் மேதகு ஆளுநர் பல இடங்களில் சிலாகித்துக் கூறியுள்ளார்.

அந்தக் காந்தி மகானைச் சுட்டுக் கொன்றது யார்? அந்தத் துப்பாக்கியை இயக்கியது - இந்து மதவாதம்தானே - இந்த மதவெறியின் ஆபத்து குறித்த ஒரே ஒரு சொல்லை தம் அறிக்கையில் ஆளுநர் பெருமான் குறிப்பிடாதது ஏன்?

‘‘நாம் சுதந்திர நாடானவுடனேயே காலனி ஆட்சி யினர்களால் நம்முடைய தனி மற்றும் கூட்டு மனங்களில் விதைக்கப்பட்ட நச்சு விதைகள் குறித்தும், அவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்தும் அண்ணல் காந்தி யடிகள் எச்சரித்தார்'' என்று கூறுகிறார் ஆளுநர்.

காந்தியடிகள் கூறும் அந்த நச்சு விதையில் மிக முக்கியமானது தீண்டாமை தானே!

அதற்காகக் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியை அவர் சந்தித்ததுண்டே!

16.10.1927 அன்று பாலக்காட்டில் மாட்டுக் கொட்ட கையில் சங்கராச்சாரியாரைச் சந்தித்த காந்தியாரிடம் சங்கராச்சாரியார் கூறுகிறார் - ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கின்றது என்றும் ஸ்வாமிகள் (காஞ்சி சீனியர் சங்கராச்சாரியார்) காந்தியடிகளிடம் தெரிவித்தார். (ஆதாரம்: ‘தமிழ்நாட்டில் காந்தி', பக்கம் 575, 576).

தாழ்த்தப்பட்டவர்கள் கோவில்களுக்குள் நுழைய வேண்டும் என்று காந்தியார் சொல்லுகின்றார். அப்படிச் செய்தால் சாஸ்திரங்களை நம்பும் மக்களின் மனம் புண்படுமாம் - அது ஒரு வகையான இம்சையாம் - ‘மஹா பெரியவா' சங்கராச்சாரியார் சொல்லுகின்றார்.

கோடானுகோடி தாழ்த்தப்பட்ட மக்கள் பிறவியின் பெயராலே தீண்டத்தகாதவர்கள் என்று ஆக்கப்பட் டுள்ளார்களே - இந்தக் கொடுமையால் அவர்களின் மனம் புண்பட்டுக் கிடக்கிறதே - அதைப்பற்றி எல்லாம் இந்தமகான்'களுக்குக் கவலை கிடையாது.

அதேநேரத்தில், சனாதனிகளின் மனம் புண்பட்டுப் போய்விடுமென்று இவர்கள் புண்பட்டுப் போய்விடு கின்றனர்.

இந்த ஆன்மிகத் தத்தவம்தான் நாட்டில் பூத்துக் கமழ வேண்டும் என்று நமது ஆளுநர் விழைகிறாரா?

‘‘நம் படையெடுப்பாளர்களும், காலனியாளர்களும் நம்முடைய நாட்டையும், மக்களையும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக மட்டும் சுரண்டவில்லை. நம்முடைய தன்னிலைப்பாட்டை அழிப்பதற்கும் ஆவன செய்தனர். நம்முடைய ஒற்றுமை மற்றும் வலிமையின் ஆதாரமான பண்பாட்டுப் பெருமிதத்தைக் குலைப்பதற்கும் முயன்றனர். நாம் அனைவரும் பகிர்ந்துகொண்ட பண்பாட்டுப் பெருமிதத்தை எந்தெந்த நிறுவனங்கள் கட்டிக் காத்தனவோ, அவற்றையெல்லாம் சிதைப்பதற்கும் முனைந்தனர். வட்டார, இன, மொழி போன்ற செயற்கைப் பாகுபாடுகளின் நச்சு விதைகளைத் தூவினர்'' என்றும் கூறுகிறார் ஆளுநர்.

எவ்வளவுப் பெரிய திசை திருப்புதல் - திரிபுவாதம்!?

காலனியார்கள் - கல்வியையும், மருத்துவத்தையும் கொடுத்தனர். ஆனால், இந்தக் காவியாளர்கள், இவர் களின் முன் சந்ததியினர் நாட்டின் பெரும்பான்மையான மக்களை பஞ்சமர்களாகவும், சூத்திரர்களாகவும் இழிவுபடுத்தி, கல்வி உரிமையையும், மனித சமத்துவ உரிமையையும் மதக் கோடாரி கொண்டு வெட்டினர் என்பதை மறுக்க முடியுமா? ‘நீட்'வரை அது இன்றும் தொடர்கிறதே! வட்டார இன மொழி போன்ற நச்சு விதைகளைத் தூவினராம்.

இனம், மொழி' என்பது எல்லாம் நச்சு விதைகளாம்!

ஒரே நாடு, ஒரே மொழி என்னும் காவிகளின் ஒற்றைக் கலாச்சார நெடி இதில் மூக்கைத் துளைக்க வில்லையா? உலகில் நாடே இல்லாத இனம் இருக்கிறது என்றால், அது ஆரிய இனம்தானே! அவர்களுக்கென்று ஒரு நாடு இருக்கிறதா? நமக்கு இல்லாதது மற்றவர் களுக்கும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவுதானே இது!

ஒன்றிய அரசின் பெருமைகளைச் சிலாகிப்பது ஓர் ஆளுநரின் கடமைதான். அதேநேரத்தில், எந்த மாநிலத்தில் ஆளுநராக அமர்த்தப்பட்டாரோ, அம்மாநில அரசின் பாராட்டத்தக்க அம்சம் ஒன்றுகூடக் கிடைக்கவில்லையா?

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், தமிழ்நாடு சட்டப்பேரவையைத் தொடங்கி வைத்து ஆளுநர் படித்த அறிக்கையில், சொல்லப்பட்டவை (அரசின் கொள்கைதான்) மீதான தனது ஆத்திரத்தை வெளிப் படுத்துவதுதான் - அந்த அறிக்கையில் காணப்பட்ட வைகளுக்கும், தமது கருத்துகளுக்கும் சம்பந்தமில்லை என்று காட்டும் கோபம்தான் ஆளுநர்  குடியரசு நாள் அறிக்கையில் தெறிக்கிறது என்று கருதிடக் கூட இடம் உண்டு.

ஒன்றிய அரசு ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாகவும், உலகிலேயே முன்னிலையில்  தலைநீட்டி நிற்பதாகவும் கூறி சில விவரங்களைத் தெரிவித்துள்ளார் ஆளுநர் பெருமான் - இதுகுறித்த உண்மை நிலையைத் தனிப் பெட்டிச் செய்தியில் தனியே காணலாம்.

அனேகமாக ஆளுநர்தம் அறிக்கை தமிழ் மண் ணுக்கு உகந்ததாக இல்லை என்பது மட்டும் கல்லின்மீது பொறிக்கப்பட்ட ஒன்றே!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.1.2022 

No comments:

Post a Comment