ஸ்டாக்ஹோம், ஜன. 6- உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், பல பிரிவுகளாக பிரிந்து மனிதனை மிரட்டி வருகிறது.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவாகி, பல நாடுகளில் உலவிக்கொண்டிருக்கும் கரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ், முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால், அது பரவும் வேகம் அதிகமானாலும், டெல்டாவை விட குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் புதிய வைரசை உருவாக்கக்கூடும் என்று அய்ரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி கேத்தரின் ஸ்மால் வுட் கூறுகையில், "தற்போது பரவி வரும் ஒமைக்ரான், அதிகம் பரவும் தன்மையை கொண்டதாக உள்ளது. ஆனால் அதன் பாதிப்பு தன்மை டெல்டாவை விட குறைவாகவே உள்ளது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது. அந்த புதிய மாறுபாட்டை கொண்ட வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம்". இவ்வாறு அவர் கூறினார்.
பிரான்சில் புதிய வகை கரோனா- 12 பேர் பாதிப்பு
பாரிஸ், ஜன. 6- சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா இன்னும் உலக நாடுகளை விழி பிதுங்க வைத்து வருகிறது. எனினும், உருமாற்றம் அடைந்து வரும் கரோனா ஆட்டம் காட்டி வருகிறது.
டெல்டா, ஆல்பா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் ஆகிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பரவல் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பிரான்சில் புதிய உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப் பட்டுள்ளது. இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாக வும், 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படு கிறது. மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணிக்கு முதன்முறையாக இந்த உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இந்த வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது ஒமைக்ரானை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அய்எச்யு பி.1.640.2 என புதிய திரிபு கரோனாவுக்கு பெயரிட்டுள்ளனர். எனினும், இதுவரை உலக சுகாதார அமைப்பு இது குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment