தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு
சென்னை, ஜன.6 நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பாதிப்புகள் பரவத்தொடங்கின. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இணையதள மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இதனிடையே கடந்த ஆண்டு கரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது. இதனையடுத்து, நேரடி வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நடப்புக் கல்வியாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு எழுத உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகைகள் தேவைப்பட்டால், தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். நோயின் தன்மை, எந்த மாதிரியான சலுகைகள் தேவைப்படும் என்று உரிய மருத்துவ சான்றுடன் மாற்றுத்திறன் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று அதனை வரும் 13ஆம் தேதிக்குள் முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.
குரூப்-3, 4 பதவிகளுக்கு
தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்ச்சிக்கான
பாடத்திட்டம்- டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது
சென்னை, ஜன.6 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தான் நடத்த இருக்கும் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 உள்பட அனைத்து விதமான தேர்வு களிலும் புதிய நடைமுறையை கொண்டு வந்து இருக்கிறது.
தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் என்ற அந்த நடைமுறைக்கான புதிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, சமீபத்தில் குரூப்-1, 2 மற்றும் 2ஏ உள்பட சில பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது குரூப்-3, 4, 7-பி, 8 போன்ற பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த தமிழ் மொழி தகுதித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அதற்கடுத்த ‘பி’ பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
எனவே தேர்வை எதிர்கொள்ள இருக்கும் தேர்வர்கள் அந்த பாடத்திட்டத்தை பார்த்து வருகிற மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள குரூப்-4 பதவிகளுக்கான தேர்வை எதிர்கொள்ள தயாராகுவதற்கு ஏதுவாக இருக்கும்..
No comments:
Post a Comment