தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் மாணவர்களுக்கு என் வேண்டுகோள்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!
சென்னை, ஜன. 6 ஒழுக்கத்தின் உறைவிடங்களாக, தன்னம்பிக்கை சிகரங்களாக மாணவத் தோழர்களே ஒளிவீசுவீர் - வாழ்வில் வெல்வீர் என்று மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பகுத்தறிவுப் பகலவனின்
48 ஆம் ஆண்டு நினைவு நாள்
28.12.2021 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் சார்பில் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், கல்லூரி யின் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
எமகண்டத்தை எந்த அட்லாஸ் வரைபடத்தில் கண்டுபிடிக்க முடியும்?
கடிகாரத்தைக் கண்டுபிடித்தவருக்கு ராகுகாலம் என்றால் என்னவென்று தெரியுமா?
அதுமட்டுமல்ல, காலத்தையே நாம் மதிப்பதில் லையே!
ஒரு நாளில், ஒன்றரை மணிநேரம் ராகு காலம் - ஒன்றரை மணிநேரம் எமகண்டம்.
இது என்ன கண்டம் - ஆஸ்திரேலியா கண்டம் - ஆப்பிரிக்கா கண்டம் என்றுதான் இதுவரையில் பார்த்திருக்கிறோமே தவிர, எமகண்டத்தை எந்த அட்லாஸ் வரைபடத்தில் கண்டுபிடிக்க முடியும்?
கண்டுபிடிக்க முடியாது - ஆனால், நம்மை நம்பு, நம்பு என்று சொல்லி, நம் மூளையில் விலங்கு போட்டு வைத்திருக்கிறார்கள்.
பெரியார்தான் சொன்னார்,
தோழர்களே, அரசியல் அடிமைத்தனம் என்பது காலில் போட்ட விலங்கு - அது பளிச்சென்று தெரியும் - நடக்கும்பொழுது தடுக்கும்.
பொருளாதார அடிமைத்தனம் என்பது - ஒரு நாட்டிற்கு, ஒரு சமுதாயத்திற்கு, மக்களுக்குக் கையில் போட்ட விலங்கு - அதுவும் பளிச்சென்று தெரியும்.
மூளையில் போட்ட விலங்கு - எளிதில் கண்களுக்குத் தெரியாது
ஆனால், பண்பாட்டு அடிமைத்தனம் இருக்கிறதே - அந்த விலங்கு என்பது - கையிலோ, காலிலோ போட்ட விலங்கு அல்ல நண்பர்களே; மூளையில் போட்ட விலங்கு - அது எளிதில் கண்களுக்குத் தெரியாது.
அதுதான் நம்பிக்கை நம்பிக்கை, நம்பிக்கை என்று பயந்து சாகிறோம்.
நண்பர்களே, இவை அத்தனையும் நாம் செய்ய வேண்டியது பெரியாருக்காக அல்ல - உங்களுக்காக சொல்கிறேன் - அரசியல் படித்தவர்களுக்கு மட்டுமல்ல - எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியது - நாம் கடைப்பிடிக்கவேண்டியது - பஞ்சாயத்துத் தலைவரி லிருந்து, குடியரசுத் தலைவர் வரை பிரமாணம் எடுத்துக் கொள்வது எதன்மீது? இந்திய அரசமைப்புச் சட்டத் தின்மீது.
அப்படிப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிற வர்கள் எல்லாம் அதைப் பின்பற்றுகிறார்களா? என்பது வேறு.
அதேநேரத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நமக்கெல்லாம் பெருமை உண்டு.
அரசியலுக்குப் போகாத பெரியார் அரசமைப்புச் சட்டத்திற்குள்ளே போயிருக்கிறார்!
பெரியார், அரசியலுக்குள்ளே போனதில்லை; பெரியார் ஆட்சிக்குப் போனதில்லை. ஆனால், பெரியார் அரசமைப்புச் சட்டத்திற்குள்ளே - பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய அந்த சமத்துவத்தில் இருக்கிறார்.
அதில் இன்னும் சில இடங்களில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது.
மனுதர்மத்திற்கும் - அம்பேத்கருக்கும் - மனித தர்மத்திற்கும் போராட்டம்.
அந்த சூழ்நிலைகளையெல்லாம் தாண்டி, உங்களுக்குத் தெரியும் - இது அறிவார்ந்த அரங்கம் - கல்வி அரங்கம் - பேராசிரியப் பெருமக்கள் - அறிஞர்கள் இருக்கின்ற அரங்கம்.
உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் வரும்பொழுது என்ன சொல்கிறோம், எங்களுடைய அடிப்படை உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பு, படிப்புரிமை, கல்வி உரிமை, வாழு கின்ற உரிமை எல்லா உரிமைகளும் வேண்டும் என்று சொல்லுகிறோம்.
வழக்குரைஞர்கள் பல பேர் பார்த்திருக்கமாட்டார்கள்!
இது அடிப்படை உரிமை. ஆனால், நண்பர்களே, இன்னொரு மிக முக்கியமான பகுதி இருக்கிறது - அதை வழக்குரைஞர்கள் பல பேர் பார்த்திருக்கமாட்டார்கள்; அவர்களே அதைப்பற்றி சிந்தித்திருக்கமாட்டார்கள்.
அந்தப் பகுதி மிக முக்கியமானது.
அறிவார்ந்த அரங்கம் இது - அருமை மாணவச் செல்வங்கள் நிரம்பிய அரங்கம் - எல்லோரும் படிக்க வேண்டிய, மிக முக்கியமாகக் கடைப்பிடிக்கவேண்டிய பகுதி என்னவென்றால்,
இது தொடக்கத்திலே இருந்து வராவிட்டாலும், நெருக்கடிகாலம் என்ற ஒன்றிலே, எத்தனையோ இடையூறுகளும், சமூகக் கேடுகளும், சமுதாயத்திற்குத் தடைகளும், உரிமைப் பறிப்புகள் இருந்தாலும் - அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை -
எப்போதும் பல தீமைகளில் சில நன்மைகளும் வருவதுண்டு.
அப்படிப்பட்ட ஒன்று - Fundamental Duties என்று - Part 4(A) என்ற உட்பிரிவு இருக்கிறது. அதில் இருக்கின்ற ஒரு பகுதியை உங்களுக்குச் சொல்கிறேன்.
உரிமைகளைப்பற்றி பேசுவதற்கு யாருக்கு முழுத் தகுதி உண்டு என்று கேட்டால், யார் கடமைகளை சரியாகப் பின்பற்றுகிறார்களோ, அவர்கள்தான் உரிமை களைப்பற்றிப் பேசுவதற்கு, முழு உரிமை படைத்தவர்கள், தகுதி படைத்தவர்கள்.
அடிப்படைக் கடமைகள்!
அப்படி வருகின்ற நேரத்தில், மிக முக்கியமாகக் கவ னிக்கவேண்டிய செய்தி என்னவென்றால் நண்பர்களே,
அடிப்படைக் கடமைகள் - Fundamental Duties
அதில் பல பிரிவுகள் இருக்கின்றன. நேரத்தின் நெருக் கடியினால், நான் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
பெரியாருடைய பிரச்சாரம், திராவிடர் கழகத்தினு டைய பிரச்சாரம், பகுத்தறிவு இயக்கத்தினுடைய கொள் கைப் பிரச்சாரம் என்பது இருக்கிறதே, இது சட்ட விரோதமானதா? சமூக விரோதமானதா? அல்லது யாரையாவது புண்படுத்தி, சங்கடப்படுத்தக் கூடியதா என்றால், இல்லை.
மாறாக, பிரதமரிலிருந்து, குடியரசுத் தலைவரிலிருந்து, ஆளுநரிலிருந்து, பஞ்சாயத்துத் தலைவர் வரையில், எல்லோரும் பிரமாணம் எடுத்துக்கொள்ளக்கூடிய அரசமைப்புச் சட்டத்தை - அதன்படி நடக்கவேண்டும்; அதனைக் காக்கவேண்டும் - அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அந்த அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதில் ஒன்றை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.
It shall be the duty of every citizen of India—
(e) to promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India transcending religious, linguistic and regional or sectional diversities; to renounce practices derogatory to the dignity of women;
(f) to value and preserve the rich heritage of our composite culture;
(g) to protect and improve the natural environment including forests, lakes, rivers and wild life, and to have compassion for living creatures;
(h) to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;
(i) to safeguard public property and to abjure violence;
(j) to strive towards excellence in all spheres of individual and collective activity so that the nation constantly rises to higher levels of endeavour and achievement;
(k) who is a parent or guardian to provide opportunities for education to his child or, as the case may be, ward between the age of six and fourteen years.
அறிவியல் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவேண்டும்!
ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்னவென்றால், அறிவியல் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
மனிதத் தன்மை, ஒருவருக்கொருவர் பேதமில்லாத தன்மை. ஒரு மனிதனுக்கு ஒரு துன்பம் என்றால், இன் னொரு மனிதன் வேறுபாடில்லாமல் உதவி செய்ய வேண்டும்.
அதுதான் மானுடப் பற்று - அதைத்தான் பெரியார் சொன்னார்.
ஏன்? எதற்கு? என்று கேட்கவேண்டும்.
பெரியாருக்கு அய்ந்து துணையாக இருந்தது என்று சொன்னேன் அல்லவா - அதை இப்பொழுது விளக்கிச் சொல்கிறேன்.
ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எப்போது?
எதற்கெடுத்தாலும் இந்தக் கேள்விகளைக் கேட்டு, அதற்கு விடை காணவேண்டும்.
சீர்திருத்தம் - மாற்றங்கள் வரவேண்டும் என்று சொல்லி, வளர்ச்சியடைக் கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால், நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
எனவே, இதைத்தானே பகுத்தறிவு இயக்கம் செய்கிறது.
நம்முடைய கல்வித் திட்டம் சரியாக இருக்குமே யானால், சயிண்டிபிக் டெம்பர் என்பது வளர்ந்து உறுதியாகும்.
படிப்பிற்கும், நடைமுறைக்கும் தொடர்பு இருக்கவேண்டும்
பெரியார் கேட்டார், படிப்பிற்கும், நடைமுறைக்கும் தொடர்பு இருக்கவேண்டும் அல்லவா!
உங்களுடைய காலத்தில், உங்களுடைய எதிர்காலத் தில், இப்பொழுது ஏற்பட்டிருக்கிற மாறுதல் யுகத்தில் அவையெல்லாம் வரவேண்டும்.
கேள்வி கேட்பார்கள், ஏன்? எதற்கு? எப்படி? என்று.
கேள்வி கேட்காதே என்று சொல்வது இருக்கிறதே-
இதுபோன்ற அரங்கங்களுடைய வேலை என்ன வென்றால், வகுப்பறையில் நீங்கள் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால், ஆசிரியரால் பாடம் நடத்த முடி யாது. வகுப்பறைக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
கேள்வி அரங்கங்களாக - ஆய்வரங்கங்களாக, களங்களாக அமையவேண்டும்
ஆனால், இதுபோன்ற பொது அமைப்புகள் - மன்றங் கள் போன்ற இடங்களில்தான், கேள்வி அரங்கங்களாக - ஆய்வரங்கங்களாக, களங்களாக அமையவேண்டும்.
அதுதான் அறிவியல் மனப்பான்மை -
அறிவியல் படிப்பது என்பது வேறு; அறிவியல் மனப்பான்மை என்பது வேறு.
சந்திரன் - சூரியன் -பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட் டில் வரும்பொழுது கிரகணம் ஏற்படுகிறது. அதனால் சூரியனோ, சந்திரனோ மறைகிறது.
கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது; சாப்பிட்டால் செரிக்காது; சாப்பிடுபவர்களுக்கு ஆபத்து ஏற்படும்; கருவுற்ற பெண்கள் பார்க்கக்கூடாது என்று சொல்கிறார் களே, அவை அத்தனையும் மூடநம்பிக்கைகள்தான்.
ஆகவே, இவ்வளவு பெரிய வாய்ப்புகள் மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கின்ற நேரத்தில்,
பெரியார் கேட்டார்,
‘‘இங்கே அறிவியல் சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரி யர், கிரகணம் வருவதற்கு முன்பு, நான் வீட்டிற்குச் சென்று தலைமுழுகி குளியல் போட்டுவிட்டு வருகி றேன்’’ என்று கூறினால் அது எவ்வளவு கடமை என்று கேட்டார்.
ராகு - கேது என்கிற பாம்புகள், பெரிய அளவில் கவ்வப்போகுது, அதனால்தான் கிரகணம் என்று முன்பு நம்பினோம்.
பிறகு அது எப்படி என்று கேள்வி கேட்டோம்.
தட் இஸ் சயின்டிபிக் டெம்பர்.
எனவே நண்பர்களே, பகுத்தறிவு என்பது மிக முக்கியமானதாகும்.
உங்களைப் பார்க்கும்பொழுது எனக்கு உற்சாகமாக இருக்கிறது
இங்கே என்னுடைய அருகில் இருக்கும் நண்பர், 50 நிமிடம் ஆயிற்று நீங்கள் உரையாற்றத் தொடங்கி என்கிறார்.
எனக்கே தெரியவில்லை. அவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் நீங்கள். வகுப்பறையில்கூட ஒரு பாடத்தை 40 நிமிடத்தில் முடித்துவிடுவார்கள் ஆசிரி யர்கள்.
நீங்களும் உற்சாகமாக இருக்கிறீர்கள்; உங்களைப் பார்க்கும்பொழுது எனக்கும் உற்சாகமாக இருக்கிறது.
கல்லூரிகள் நிகழ்ச்சி என்றால், நான் உடனே ஒப்புக் கொள்வேன். ஏனென்றால், நம்முடைய இளமை திரும்பி வருவதே, உங்களைப் பார்ப்பதினால்தான்.
இந்தக் காலங்களை நாங்கள் பெறுவதில்லை. அங்கே உட்கார்ந்து கை தட்டிய காலத்தை நாங்கள் நினைத்துப் பார்க்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
மூடநம்பிக்கைகளிலிருந்து நீங்கள் வெளியே வர வேண்டும். நாங்கள் பெரியார் நாட்காட்டியை அச்சடித் திருக்கின்றோம்.
நல்ல நேரம் - 24 மணிநேரமும்!
அதில், ஒவ்வொரு நாளும் கிழிக்கின்ற நாள்காட்டி-
அதில் நல்ல நேரம் என்று போட்டிருப்போம்.
ஒருவர் கேட்டார், ‘‘ஏன் சார், எல்லோரும் கெட்டுப் போய்விட்டார்கள்; நீங்கள் ஒருவர்தான் கொள்கையை சொன்னீர்கள்; நீங்கள் இப்படி நல்ல நேரம் என்று போடலாமா?’’ என்று கேட்டார்.
சரியாகப் படியுங்கள் என்றேன்.
நல்ல நேரம் - 24 மணிநேரமும் என்று போட்டிருப் போம்.
காலம் பொன் போன்றது நண்பர்களே, நீங்கள் எதை வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
இழந்த செல்வத்தை மீண்டும் சம்பாதிக்கலாம் - பெறலாம்!
இழந்த உடல்நிலையைக் கூட ஓரளவிற்கு மீண்டும் பெற்றுவிடலாம்
இழந்த காதலைகூட மீண்டும் பெற்றுவிடலாம்
ஆனால், இழந்த காலத்தை நீங்கள் ஒருபோதும் பெற்றுவிட முடியாது.
இப்பொழுது மணி 12.33 என்று சொன்னால், இன் றைக்கு 28 ஆம் தேதி டிசம்பர் மாதம் பகல் 12.33 மணி என்பது தீர்ந்துவிட்டது. காலண்டரில் கிழிப்பதுபோன்று, போய்விட்டது.
ராகுகாலம், எமகண்டம், தலையெழுத்தை நம்பாதீர்கள்!
ஆகவேதான், காலத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். ராகுகாலம், எமகண்டம், தலையெழுத்து என்பதையெல் லாம் நீங்கள் நம்பாதீர்கள்!
பெரியார்தான் கேட்டார்,
என்னடா தலையெழுத்து?
அமெரிக்கக்காரன் தலையைக் காட்டமாட்டேன் என்று போய்விட்டானா? அவனுக்குத் தலையெழுத்து இல்லையா?
சைனாக்காரன் தலையைக் காட்டமாட்டேன் என்று போய்விட்டானா? என்று கேட்டார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் மிக வித்தியாசமாக சொன்னார்.
‘‘முடி திருத்துவதற்காகப் போகிறோம்; அங்கே முடி திருத்துகின்ற தோழரிடம் நம்முடைய தலையைக் காட்டுகிறோம். ஒரு 10, 15 நிமிடத்தில் முடி திருத்திவிடுவார். இருந்தாலும், இப்படி திருப்புவார், கொஞ்ச நேரம் முடி திருத்துவர்; பிறகு அப்படி திருப்புவார், நம் தலையை பக்குவமாகத் திருப்பி, முடியை திருத்துவார்.
20 நிமிடம் ஒழுங்காக முடி திருத்தும் தோழரிடம்கூட தன்னுடைய தலையைக் காட்டாதவன்; இவ்வளவு எழுதுகின்ற வரையிலா பொறுமையாகத் தலையைக் காட்டிக் கொண்டிருப்பான்?’’ என்று கேட்டார்.
ஆகவே, தலையெழுத்து என்பதை நம்பாதீர்கள்.
நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதைப்பற்றி கவலைப் படாதீர்கள்.
உலகத்திலேயே நம்மாள்தான் சொல்வான்,
‘‘என்னங்க, எப்படி இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டால்,
‘‘ஏதோ இருக்கேங்க’’ என்று பதில் சொல்வார்.
இன்னும் சிலர்,
‘‘ஏதோ காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறேன்’’ என்பார்.
ஏன், ஓடாத பஸ்ஸா அது.
ஏங்க இப்படி உங்களுக்கு ஆயிற்று? என்று கேட்டால்,
‘‘என்னுடைய போதாத காலம்ங்க’’ என்பார்.
அவனுக்குக் காலம் போதவில்லை; இவனுக்கு போதாத காலம் - இது மூடநம்பிக்கை அல்லவா!
பகுத்தறிவு சிந்தனையை உருவாக்குங்கள்!
எனவேதான்,
பகுத்தறிவு சிந்தனையை உருவாக்குங்கள்.
இறுதியாக ஒன்றைச் சொல்லுகிறேன்,
அருமை இருபால் மாணவச் செல்வங்களே, பாலின வேற்றுமைகள் இல்லாமல் இங்கே வருகின்றபொழுது, அவர்களோடு உற்ற நண்பர்களாக, உற்ற சகோதரர்களாக, உற்ற தோழர்களாகப் பழகுங்கள்.
எந்த இடத்திலும், நம்மிடத்திலே பாலின தொல்லை களோ மற்றவையோ வரக்கூடாது. ஆசிரியப் பெரு மக்கள் குற்றவாளிகளாக ஆகிறார்கள் என்று சொல் வதைவிட நமக்கு மிகப்பெரிய அவமானம் வேறு இருக்க முடியாது.
எனவே நண்பர்களே,
பெரியார் நினைவு நாளில் என்னுடைய வேண்டுகோள் - செய்தி!
இதுபோன்ற நிறுவனங்கள், ஒன்றாகக் கூடி, படிக்கக் கூடிய நிறுவனங்களில், எப்படி ஒரு குடும்பத்தில், ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பழகுவோமோ - அதுபோல, ஒரு கல்விக் குடும்பமாக நீங்கள் இருந்து-
ஒழுக்கத்தின் உறைவிடங்களாக -
தன்னம்பிக்கையினுடைய சிகரங்களாக -
தன்மானத்தின் பெரும்பகுதிகளாக இருங்கள்!
அதுதான் பெரியார் நினைவு நாளில் என்னுடைய வேண்டுகோள் - செய்தி என்று சொல்லி,
வாய்ப்பளித்த பெருமக்களுக்கும், இவ்வளவு நேரம் இருந்து கேட்ட உங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறன்.
வாழ்க பெரியார்!
வருக புதிய சமுதாயம்!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றி னார்.
No comments:
Post a Comment