அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் ஒன்றிணைந்து - தமிழ்நாடு அரசு - குறிப்பாக முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சட்டப் போராட்டத்தில் கிடைத்த ஒரு வெற்றி குறித்துப் பேசப்பட்ட கருத்துகள் - சமூகநீதி வரலாற்றுத் திசையில் முக்கியமான பதிவாகும்.
மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடங்கள் கிடைக்கச் செய்த வெற்றியாகும் இது.
எப்பொழுதுமே இது போன்ற பிரச்சினைகளில் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணே முதலிடத்தில் இருந்து, களத்தில் நின்று போராடி இறுதி வெற்றியை ஈட்டும் வரலாற்றைக் கொண்டதாகும்.
இடஒதுக்கீடு என்று எடுத்துக் கொண்டாலும் திராவிட இயக்க ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் 1921 ஆம் ஆண்டிலேயே ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1928ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கும் வந்தது.
1928 முதல் 1950 வரை பல்வேறு பரிமாணங்களைப் பெற்று செயல்பாட்டில் இருந்த இடஒதுக்கீடுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது - அந்நியன் வெள்ளைக்காரன் ஆட்சியில் அல்ல - சுதந்திர இந்தியாவில் தான் - சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த காலத்தில்தான் அந்த முட்டுக்கட்டை. - போட்டதோ தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பார்ப்பனர்கள்தாம்.
செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பன மாணவி - சென்னை மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு ஆணை - இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது - இந்தக் காரணத்தால் எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
அதே போல சீனிவாசன் என்னும் பார்ப்பன மாணவன் தனக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, 22 ஆண்டுகள் சென்னை மாநிலத்தில் செயல்பாட்டில் இருந்த - ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால்வார்த்த இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மாநில அரசு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் பயன் ஏற்படவில்லை; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என்று ஆணி அடித்து விட்டது.
சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் என்பது வெகு மக்களின் சமூகநீதிக்கு எதிரானது என்பது எடுத்த எடுப்பிலேயே அம்பலமாகி விட்டது.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட கால கட்டத்திலேயே அரசமைப்புச் சட்ட ஆக்கக் குழு உறுப்பினர்கள் வெகு மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் - இது மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று - இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்த தலைவர் தந்தை பெரியாரே!
அரசமைப்புச் சட்டத்தின் உருவாக்கக் குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் இருந்தும், பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர் களாக இருந்ததால், அவர் நினைத்த அளவுக்குச் சாதிக்க முடிய வில்லை. அரசமைப்புச் சட்டத்தினை நான் உருவாக்கினேன்; அதனைக் கொளுத்துவதில் முதல் ஆளாகவும் நான்தான் இருப்பேன் என்று சொன்னவரும் அண்ணல் அம்பேத்கரே!
சென்னையில் செயல்பாட்டில் இருந்த இடஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று இரு நீதிமன்றங்களிலும் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே திரண்டு நின்றது. மாணவர்களும் வீதிக்கு வந்தனர். அதன் விளைவாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, இடஒதுக்கீடுக்கு வழி செய்யப் பட்டது. இதன் பலன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியா முழு மையும் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான்.
அகில இந்திய நிலையில் கல்வி, வேலை வாய்ப்பில் இந்திய அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடை யாது.
1940ஆம் ஆண்டில் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட் டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், செயல்பாட்டுக்கு வரவில்லை.
பிற்படுத்தப்பட்டோருக்காக முதல் ஆணையம் காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்டும், அதன் அறிக்கை அலமாரியில் தாலாட்டித் தூங்க வைக்கப்பட்டது.
இரண்டாவது ஆணையம் பி.பி. மண்டல் தலைமையில் பிற் படுத்தப்பட்டோருக்கு அமைக்கப்பட்டாலும் வழக்கம்போல் அதுவும் - அவ்வறிக்கையும் முடக்கப்பட்டது. 1980இல் ஒன்றிய அரசிடம், பிரதமரிடம் அளிக்கப்பட்டது. அதனை எழுந்து நடமாடச் செய்யவில்லை.
இந்த நிலையில் திராவிடர் கழகம் - அதன் ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில், ஓர் அகில இந்திய எழுச்சி இயக்கம் உருவாக்கப்பட்டது. 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் இந்திய அளவில் நடை பெறுவதற்கு உந்து சக்தியாக இருந்து செயல்பட்டார்.
இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள சமூகநீதி யாளர்களை ஒருங்கிணைத்தார். வாராது வந்த மாமணியாக வந்துதித்த அரசக் குடும்பத்தைச் சேர்ந்த விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) பிரதமரான நிலையில் மண்டல் குழுப் பரிந்துரையில் ஒன்றான வேலை வாய்ப்பில் 27 விழுக்காடுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாகவே இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன சக்திகளின் அரசியல் வடிவமான பா.ஜ.க., வி.பி. சிங் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தது. சமூகநீதி வரலாற்றில் சமூகநீதிக்காக பிரதமர் நாற்காலியைத் தூக்கி எறிந்த பெருமகனாக வரலாற்றில்ஒளி வீசிக் கொண்டு உள்ளார்.
அகில இந்திய அளவிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்ததிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. இப்பொழுது கொண்டு வரப்பட்ட மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கும் தமிழ்நாடே முன்னிலையில் உள்ளது. ஆம் திராவிட இயக்கக் கொள்கையே இந்தியாவுக்குத் தேவை என்பதில் அய்யமும் உண்டோ!
No comments:
Post a Comment