உடல் பருமன் நோய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

உடல் பருமன் நோய்

உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தினால் இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண், பெண் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை உடல் பருமன். பொதுவாக உடல் பருமன் மார்பு, வயிறு, தொடை, இடுப்பு ஆகிய இடங்களில் தேவையில்லாத கொழுப்பு சேரும்பொழுது ஏற்படுகிறது. இதற்கு ஆயுர்வேதம் கூறும் தீர்வைப் பார்ப்போம்.

உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள்

உடற்பருமன் உருவாவதற்கு முதன்மையான காரணங்கள் உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றமும் வாழ்க்கை முறை மாற்றமுமே என்றாலும் இன்னும் சில காரணங்களும் உண்டு என்பதை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

* உணவுப் பழக்க வழக்கம்: அதிக அளவிலான உணவை உட்கொள்ளுதல்,  துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள், மைதாவினால் செய்யப்பட்ட உணவுகள், எளிதில் ஜீரணமாகாத உணவுகள், பேக்கரிகளில் விற்கப்படும் உணவுகள், சோடா உப்பு மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டவை, நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை அடிக்கடி உண்பது. முன்னர் உண்ட உணவு ஜீரணம் ஆவதற்கு முன்னரே மீண்டும் உண்ணுதல், இரவில் தாமதமாக உண்ணுதல். கொழுப்புச் சத்து நிறைந்த மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டின் கொழுப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்வதாலும் கொழுப்பு உடலில் அதிகமாகின்றது.

* வாழ்க்கை முறை: அனைத்து செயல்களையும் அமர்ந்த இடத்திலிருந்தே செய்தல், உடல் உழைப்பின்மை, உடற் பயிற்சி செய்யாதிருத்தல், தங்களுடைய அத்தியாவசிய தேவைகளையும் வீட்டு வேலைகளையும்  பணியாளர்கள் வைத்து செய்வது, முறையற்ற தாமதமான உறக்கம்  அல்லது தூக்கமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாகும். ஆயுர்வேதத்தில் காலையில் உறங்குவது உடல் பருமனுக்கு ஒரு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது சிலர் மதிய வேளைகளில் உணவு அருந்திய உடன் தூங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர் இந்த இரண்டு பழக்கங்களும் தொப்பையை உருவாக்கி உடல் பருமனை அதிகரித்து பல உபாதைகளை நமக்கு ஏற்படுத்தும்.

*நோய்களால் வரக்கூடிய உடல்பருமன் ஹைப்போ தைராய்டிசம் , ஹைப்போகோனடிசம், குஸிங் சின்ட்ரோம் மற்றும் பிற நோய்களாலும் உடற்பருமன் வரலாம்.

*அதிகமாக மாத்திரைகள் உட்கொள்ளுதல்: சர்க்கரை நோய், வலிப்பு நோய், மன நோய் மற்றும் மனச் சோர்வுக்கான ஆங்கில மருந்துகள், ஹார்மோன் மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து எடுப்பதாலும் உடல் பருமன் வரக்கூடும்.

* உடற்பருமன் சிலருக்கு மரபணுவின் காரணமாக பரம்பரையாகக்கூட வரலாம். 

*மன அழுத்தம்: இன்று பலருக்கு மன அழுத்தத்தினால் உடற்பருமன் வருவதை நாம் தினசரி பார்க்கின்றோம்.

அறிகுறிகள்

அதிக உடல் எடை, மூச்சு வாங்குதல், அதிக அளவில் வியர்த்தல், மந்தத்தன்மை, தாகம், பலவீனம், உடல் வலி, உடல் சோர்வு, உடல் துர்நாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்படலாம். இரவில் மூச்சு விடுவதில் சிரமம், குறட்டை, Sleep apnea (உறக்கச் சுவாசத் தடை), மூட்டுத்தேய்மானம், முதுகு வலி, குதிகால் வலி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தோல் நோய்கள், பித்தப்பை கற்கள், கல்லீரல் வீக்கம்  மற்றும் செரிமானக் கோளாறுகள் ஆகியவை ஏற்படலாம்.

பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சனைகள், PCOD  (சினைப்பை நீர்க்கட்டி), மலட்டுத்தன்மை, மார்பகப் புற்றுநோய் போன்றவை வருகிறது. ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை, விரைப்பு ஏற்படுவதில் சிக்கல், விந்து உடனே வெளியேறுதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் விளைவாக தாழ்வு மனப்பான்மை, ஆயுட்காலம் குறைதல், முன்கூட்டிய முதுமை, மனக்குழப்பங்கள், புற்றுநோய் மற்றும் மாரடைப்பும் கூட வரவாய்ப்புண்டு.

உடற்பருமனை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவைஉடல்பருமன் நோயில் உணவு முறை மாற்றமே முதல் சிகிச்சையாக அமைகிறது. பொதுவாக நாம் உண்ணும் உணவுக்குத் தகுந்ததுபோல் நமது வேலையையும்  உடலுழைப்பையும் அமைத்துக்கொண்டால் நம் உணவால் கிடைத்த சத்துக்கள் அப்போதே நமது உடலின் அக்னியால் எரிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்பட்டுவிடும். ஆனால் உணவினால் கிடைக்கும் சத்து தேவைக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது உடலால் செய்யும் உழைப்பு மிகவும் குறைவாக இருந்தாலோ இந்த தேவைக்கு அதிகமான சத்து, நம் உடம்பில் கொழுப்பாக மாறி தங்க ஆரம்பிக்கும். ஆகவே நமது உணவை மிகவும் கவனமாக அமைத்துக்கொண்டு சிறிதளவு உடற்பயிற்சிகளை நாம் தினமும் செய்வோமேயானால் உடல் பருமன் பிரச்சினையிலிருந்து நாம் நம்மை முற்றிலுமாக காப்பாற்றிவிடலாம்.

பொதுவாகவே மாவுச் சத்துள்ள உணவுகளாகிய அரிசி, கோதுமை மற்றும் பெரும்பாலான சிறுதானியங்களை நாம் குறைவாக எடுத்துக் கொண்டு அதற்கு சமமான அல்லது அதைவிட கூடுதலான அளவிற்கு  காய்கறிகளை எடுத்துக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

தினமும் அரிசியால் ஆன உணவுகளான இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், புட்டு, பொங்கல் ஆகிய உணவுகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு காலையில் இட்லி, தோசை, பொங்கல் இவைகளில் ஏதேனும் ஒன்று சாப்பிட்டுவிட்டால் மதியம் கேழ்வரகு களி, இரவில் சப்பாத்தி அல்லது காலையில் சம்பா கோதுமை ரவை உப்புமா, மதியம் சாதம் கூட்டு பொரியல், இரவில் கோதுமை தோசை இவ்வாறு நம் உணவை தினம் தோறும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

செரிமானத்தை அதிகரிக்கக்கூடிய சோம்பு, சீரகம், இலவங்கப்பட்டை, மிளகு, மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  நீர் கலந்து கடைந்தெடுத்த மோரை சிறிது இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்த்து ஒவ்வொரு நாளும் 300 மி.லி. வரை குடிக்க நம் உள்உறுப்பு சூட்டுக்கு பலம் பெற்று நம் உடல் எடை படிப்படியாக குறையும்.  

No comments:

Post a Comment