லண்டன், ஜன.10 இங்கிலாந்து மருத்துவமனைகளில் கரோனா பரவலால் எழுந்துள்ள ஆள் பற்றாக்குறையை சமாளிக்க ராணுவ மருத்துவர்களும், பணியாளர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
அங்கு கரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரத்து 65 ஆக உயர்ந்தது. பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 515 ஆக அதிகரித்து இருக்கிறது. 17 ஆயிரத்து 988 பேர் சிகிச்சையில் இருந்தனர். மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
லண்டனில் என்.எச்.எஸ். மருத்துவமனைகளில் (அரசு மருத்துவமனைகளில்) மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதும் பல மருத்துவமனைகளும் பணியாளர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்பட்டு, அறுவை சிகிச்சைகள் ஒத்தி போடப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப் பதும், தனிமைபடுத்தப்பட்டிருப்பதும் அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
லண்டன் மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் கடந்த மாதம் தலா 1,100 பேர்தான் சிகிச்சை பெற்றனர். தற்போது இது 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக என்.எச்.எஸ். மருத்துவமனைகளில் 200 ராணுவ வீரர்கள் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் ராணுவ மருத்துவர்கள் ஆவார்கள். 160 பேர் பணியாளர்கள் ஆவார்கள். இவர்கள் 3 வார காலம் பணியாற்றுவார்கள். இதுபற்றி ராயல் நர்சிங் கல்லூரி இயக்குனர் பேட்ரிசியா மார்குயிஸ் கூறும்போது, பணியாளர் நெருக்கடி இருப்பதை அரசாங்கத்தால் மறுக்க முடியாது என்பதைத்தான் ராணுவத்தினரை பணிக்கு அனுப்பி இருப்பது காட்டுகிறது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment