‘தி பிரைன்’ - குற்றங்களின் காரண கர்த்தா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

‘தி பிரைன்’ - குற்றங்களின் காரண கர்த்தா!

உலகம் காட்டுமிராண்டி தனங்களில் இருந்து மாறுவதையே நாகரீகம், யதார்த்தம், புரட்சி என்று ஏதேதோ பெயர்களை வைத்து வர்ணித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், அந்த மாற்றங்களை மானுடம் எப்படி கையாள்கிறது என்பதில் இன்றும் கூட நிறையவே சிக்கல்கள் இருக் கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. 

இந்த சமூகத்தில் நடக்கிற குற்றங்களை நாம் பொருளாதார சமமின்மை அல்லது சமூக கட்டமைப்பு கொண்டு மட்டுமே பார்த்து முடிவை எட்டுவது என்பது முழுமையான அணுகுமுறை அல்ல என்றே கருத முடிகிறது. அணுவின் உட்பாகங்களை பிரித்து ஆராய்கிற அறிவியல் யுகத்தில் குற்றம் இழைத்தவரை சிறைச்சாலைக்குள் முடக்குவது, அல்லது கடுமையான தண்டனைகளை கொடுத்து உடலியல் அல்லது உளவியல் சித்ரவதை களை கொடுப்பது என்பது அறிவியலின் அரைவேக்காட்டு வளர்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியே ஆகும். கடுமையான தண்டனைகளால் குற்றங்கள் குறையும் என்பது காலம்  வரும்வரை இரைக்கு காத்திருக்கும் ஓநாய்களின் காத்திருப்பாகத் தான் தெரிகிறது. 

எல்லாக் குற்ற பின்னணிகளுக்கும் கார ணங்களை ஆராய்வது அதன் தேவை களை நமக்கு காட்சிப்படுத்தும். அதன் நீட்சி எங்கு சென்று சேர்க்கும் தெரியுமா? அந்த காரணங்கள் ஜாதி, மதம், சமூகம், பொரு ளாதாரம், சமூக கட்டமைப்பு  இவைகளை கடந்து மூளையினாலும் நடக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நடக்கும்.

இயலாமையையோ அல்லது நோய் என்பதையோ நாம் உடலியல் சார்ந்து மட்டுமே அணுகுவது கைக்கு கை, காலுக்கு கால் என்கிற முறையின் தொடர்ச்சி என்றே நினைக்கிறேன்.  ஆனால், நம்மை முற்றிலு மாய் ஆளுமை செலுத்துகிற மூளையில் நடக்கிற சிறிய வேதியியல் மாற்றங்கள் நம்மை எப்படியெல்லாம் மாற்றி வைக்கும் என்பதை ஏன் எல்லாத் தடவைகளிலும் சிந்திக்க தவறுகிறோம் என்று தெரிய வில்லை. 

பதினெட்டு வயதிற்குள் குற்றம் இழைப்போர் அதிகம் ஆகிவிட்டார்கள். அவர்களை கடுமையான தண்டனை கொடுத்துத் திருத்த வேண்டும். இன்னும் பல கோணங்களில் அவர்களின் மீதெல் லாம் வசைகளை வீசி எறிகிற கட்டுரைகளை காண முடிகிறது. அதனை அறிவியல் கண்ணோட்டங்களோடு பார்க்கும்போது இதனை இன்னும் ஆழமாய் ஆய்வு செய்ய முடியும் என்று நினைக்கிறேன். மூளை அதனுடைய முழுமையான வளர்ச்சியை எட்ட இருபத்தைந்து வயதாகும். அப்போது, பதினெட்டு வயதிற்குள் இருப்பவர்களுக்கு என்னவெல்லாம் வளர்ச்சியில் குறை இருக்குமென்றால், அவர்கள் குழந்தைக் கான வெகுளித்தனமும், மகிழ்ச்சியும் கொள்கிற nucleus accumbens  குழந்தைகளுக்கான அதே அளவிலும், எதிர்காலம் குறித்த எண்ணம் மற்றும் முடிவெடுக்கும் திறன் படைத்த orbitofrontal cortex முழுமை யான வளர்ச்சியும் எட்டாததும் விடலைப் பருவத்தினரின் தவறான பாதைக்கு வழி வகுக்கிறது என்று தெரிகிறது. 

 ஆகஸ்ட் 1, 1966, சார்லஸ் வைட்மென் டெக்சாஸ் பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து எல்லோரையும் சுடத் துவங்குகிறார். பதின்மூன்று பேர் இறக்கிறார்கள், முப்பத்து மூன்று பேர் காயமடைகிறார்கள். காவல் துறை அவரை சுட்டுக் கொல்கிறது. யாரென்ற தேடலில் அவர் அதற்கு முதல் நாள் அவருடைய மனைவி மற்றும் தாயை கொன்று இருப்பதும் தெரிகிறது. ஆனால், அவர் ஒரு கடிதம் எழுதுகிறார். “எனக்கு என்னைக் குறித்தே சில நாட்களாகப் புரியவில்லை. நான் சாதாரணமாக இருக்க வேண்டியவன். ஆனால் (எப்போது துவங்கியது என்று தெரியவில்லை). நான் அசாதாரணமான, பகுத்தறிவற்ற, இயல் புக்கு மாறாக  நடந்து கொள்ளத் துவங்கி விட்டேன்.   நான் இறந்து விட்டால், அது எதனால் என்று கூராய்வு செய்து கண்டு பிடியுங்கள்:”  அவருடைய கூராய்வு முடி வுகள் அவருடைய கொலைகளுக்கு கார ணம் சொன்னது. அவருடைய மூளையில் இருக்கிற  amyglada (கோபத்தையும், பயத்தையும் செயல்படுத்துகிற இடம்) வில் ஒரு சின்னக் கட்டி இருந்ததும், அதனால் தான் அவர் அப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்பதும் தெரிகிறது. 

மூளை, பிறந்தது முதலே நம்மைச் சுற்றி நடப்பதை பதியத் துவங்கும். நம்முடைய சுயநினைவை கடந்து நாம் பார்க்கிற, கேட்கிற, பேசுகின்ற எல்லாவற்றையும் மூளை பதிவு செய்யும். அந்தப் பதிவுகளின் பரிணாமங்களே நம்முடைய வாழ்வின் அத்துணை அங்கமாய் மாறுகிறது. நம்முடைய அச்சம், சோகம், மகிழ்ச்சி, வெட்கம்  எல்லா உணர்வுகளையும் அந்தப் பதிவுகள் தான் தீர்மானிக்கிறது. பெற்றோர் மற்றும் சமூகத்தின் பங்கு தனி மனிதரின் வாழ்வில் எத்துணை ஆளுமை செலுத்து கிறது என்று இதை வைத்து நம்மால் கணக்கிட முடிகிறது. குழந்தைகளிடம் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளும், செயல்களும் அவர்கள் வாழ்வை தீர்மானிக் கிறது என்கிற கவனத்தோடு பேசுவோம். 

இது குற்றவாளிகளின் மீதான கரிசனம் கிடையாது. குற்றங்களின் வேர் தெரிந்து களையெடுப்பதற்கு வழி. குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும்போதெல்லாம் உணர்ச்சிவசத்தில் பொங்கி எழுகிறோம், தண்டனைகளை நாமே முடிவு செய்கிறோம். ஆனால், ஒவ்வொரு நிகழ்விலும் உணர்சிகளில் மூழ்கிக் காரணங்களை தொலைத்து விடுகிறோம். அந்தக் குற்றவாளிகளுக்கு எதனால் இந்த அளவிற்கு வக்கிரம் வந்தது, எப்படி அவர்களால் செய்ய முடிந்தது. அவர்கள் மூளையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதின் மூலம் அந்த உணர்வுகளின் துவக்கத்தில் இருக்கிற வர்களை கண்டுணர்வதோடு, குற்றங்களை களையெடுப்பதற்கு வழி தெரிந்து பல ஆயி ரம் குழந்தைகளை காப்பாற்றும் வாய்ப்பும் கிடைக்கும். 

எனவே, மருத்துவம் சார்ந்த அணுகு முறைகளைக் கையில் எடுப்போம். கார ணங்களை கண்டறிவோம், குற்றங்களை களையெடுப்போம். 

- இளவேனில்


No comments:

Post a Comment