பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான்

ஜாதி ஒழிப்பு என்பதும் ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பு என்பதும்  வேறு அல்ல. ஆச்சாரியார் கல்வித்திட்டம் ஒழியவேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? அவர் கல்வித்திட்டமே தன் சுயஜாதி பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வருணாசிரம பாதுகாப்புத் திட்டம். ஆகையால் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஜாதி என்பது வருணாசிரமத்தின்படி ஏற்பட்டதாகும். ஜாதிகளை எடுத்துக் கொண்டால் அவை அத்தனையும் 3 ஜாதிக்குள் அடங்கிவிடும். இன்று செட்டியார், நாயுடு, முதலியார், கவுண்டர், ரெட்டியார், படையாச்சி, பறையன், சக்கிலி என்று சொல்லப்படும் அத்தனை ஜாதிகளும் அந்த 3 ஜாதிக்குள்ளேயேதான் அடங்கிவிடுகின்றன. என்ன அந்த 3 ஜாதி? 1. பார்ப்பான் அதாவது பிராமண ஜாதி என்று ஒருவன் சொல்லிக்கொள்வது; 2. சூத்திரஜாதி நம்மவர்களை - திராவிடர்களைக் காட்டுவது 3. அடுத்தாற்போல் ஆதாரம் இல்லாமல் தந்திரமான முறையில் புகுத்திய பஞ்சம ஜாதி அல்லது சண்டாள ஜாதியாகும். இன்றைய தினம் நாட்டிலே வருணாசிரம  முறைப்படிதான். இந்தப் பார்ப்பனனும், நம்மவர்களான சூத்திரர்களும், பஞ்சமர்களும் இருக்கின்றனர்.

நம்மவர்களில் சிலபேர் அவனை பிராமணன்  என்றே கூப்பிடுகிறார்கள்.

சில பார்ப்பன அடிமைகள் திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரிந்தோ தெரியாமலோ கேட்கிறார்கள். பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்களெல்லாரும் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள்  பின்பற்றுகிற கலாசாரப்படி கூறுகிறோம். உதாரணமாக, முஸ்லிம் ஒருவரை இரத்தப் பரீட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால் கலாசாரப்படி முஸ்லிம் என்கிறான். பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு; அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள், மற்றும் ஆரியர் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால் இவற்றையெல்லாம் நம் தலைமையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

ஆச்சாரியார் புதுக் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கமென்ன? அந்தக் கல்வித்திட்டத்தின் அடிப்படை என்ன? நீங்கள் கவனிக்க வேண்டும். சூத்திரர்கள் படிக்கக்கூடாது. இதுதான் ரகசியம். வேறு ஒன்றுமில்லை. பாதிநேரம் படிக்கச்சொல்லுகிறார். அந்தந்த ஜாதித் தொழில் சரிவர செய்யும் அளவுக்குப் படிக்கவேண்டும். ஆரியரின் ஜாதிமுறை, வருணாசிரம முறை. வருணாசிரம முறைப்படி, நாம் படிக்கவே கூடாது. ஏதோ வெள்ளைக்காரன் காலத்தில் நாம் 100க்கு 10 பேர் படித்துவிட்டோம். அந்தப்படிப்பைப் படித்ததால் இன்று நாம் பார்ப்பனர்களை மதிப்பது கிடையாது. அவர்கள் என்ன உசத்தி, நாம் என்ன தாழ்வு என்கிறோம். இன்று நகரங்களில் யாரும் பார்ப்பானை சாமி என்று கூப்பிடுவது கிடையாது.

(24.2.1954 அன்று சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியை அடுத்த அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் சொற்பொழிவு)

- விடுதலை, 27.2.1954

No comments:

Post a Comment