பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் தரப்பில் உரிய நியாயமான விளக்கம் இல்லை
உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பிய வினாக்களுக்கு நியாயமான விளக்கம் இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு என்ன என் பதை நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்ஜாதி ஏழைகளுக்கு - 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்வதற்காகவே - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் (Basic Structure of the Constitution) என்பதையே தகர்க்கும் வகையில், 2019 இல், அவசர அவசரமாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் (Amendment) எனக் கொண்டு வந்து 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக நிறைவேற்றியது.
உயர்ஜாதியினருக்கானது என்பதால் அய்ந்தே நாள்களில் நிறைவேற்றம் - ஒப்புதல்
'உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களுக்காக' (EWS) பத்து சதவிகித இட ஒதுக்கீடு என்று வழி செய்யும் இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம் (103 ஆவது) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசர அவசரமாக இரண்டே நாளில் (8.1.2019 மற்றும் 9.1.2019 ஆகிய நாள்களில்) அதிக விவாதமின்றி நிறை வேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் 12.1.2019 இல் பெற்று, அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது!
5 நாள்களில் ஓர் அரசமைப்புச் சட்டத் திருத்தம் 'ராக் கெட்' வேகத்தில் நடந்து முடிந்த வரலாறு இதற்கு முன் எப்போதும் நடந்ததேயில்லை!
இதற்குமுன்பு நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல் தோல்விதான் அவர்களை இந்த முடிவை எடுக்க வைத் தது. அடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர் மற்றும் இராஜபுத்திரர் முதலிய முன்னேறிய ஜாதியினர் வாக்குகளைப் பெற திட்டமிட்டே மோடி அரசு இப்படி ஒன்றை நடத்தியது.
இந்தச் சட்டத் திருத்தமே செல்லாது என்று போடப் பட்ட பல வழக்குகள் உச்சநீதிமன்ற நிலுவையில் முழு அமர்வின் விசாரணைக்காகக் காத்திருக்கின்றன!
உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்
இதற்கிடையில், மாநிலங்களில், மத்திய தொகுப்புக்குத் தரப்பட்ட இடங்கள் போக, எஞ்சியவற்றிற்கு இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு - பிற்படுத்தப்பட்டவர்கள் உரிமை - இடங்கள் பறிபோகும் நிலை - பொதுப் போட்டியில் குறையும் நிலை ஏற்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, தி.மு.க. போட்ட வழக்கினை விசாரித்த ஜஸ்டீஸ் சந்திரசூட் தலைமையில் அமைந்த அமர்வு, சில நியாயமான கேள்விகளை ஒன்றிய அரசுக்கு முன்வைத்தது - அதன் விசாரணையின்போது -
1. ரூ.8 லட்சம் வருமான வரம்பினை உயர்ஜாதி ஏழைகளுக்கு வகுத்துள்ளீர்கள் - எந்தப் புள்ளி விவர அடிப்படையில்?
2. மாநிலத்திற்கு மாநிலம் ஏழ்மை மாறாதா?
3. கல்வி, சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டில்கூட கிரீமிலேயர் அடிப்படையில் ரூ.8 லட்சம்தானே வைத்துள்ளீர்கள்?
4. அதுமட்டுமல்லாமல், நகர்ப்புற ஏழ்மை, கிராமப்புற ஏழ்மை (Rural Poverty, Urban Poverty) நிலைமையில் வேறுபாடுகள் எந்த அடிப்படையில்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டனர்.
அதற்குப் பதில் அளித்த மூவர் குழுவின் விளக்கம் - நம் கிராமங்களில் கூறும் பழமொழியான “பட்டுக் கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை?'' என்பது போன்ற பதிலாகவே இருக்கிறது.
இதை ஒரு குழு போட்டு வரைமுறை செய்யவேண் டும் என்று ஆணையிட்டு, வழக்கினை 2022 ஜனவரி 5 ஆம் தேதிக்குத் தள்ளிப் போட்டனர்!
ஒன்றிய அரசு மூவர் குழு (மூவரும் முன்னேறிய ஜாதியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது) ஒரு அறிக்கை தந்துள்ளது 31.12.2021 அன்று.
ரூ.8 லட்சம் நியாயமானதுதானாம்!
அதில், இதே ரூ.8 லட்சத்தையே உறுதிப்படுத்தி, அதில் மாற்றம் செய்யாததோடு, ஒரு விசித்திரமான புது விளக்கமும் கொடுத்துள்ளது அந்த மூவர் கமிட்டி!
8 லட்சம் ரூபாய் என்பது நியாயமானதுதானாம்!
“considering that the currently effective income tax exemption limit is around Rs.8 lakh for individuals, the committee is of the view that the gross annual income limit of Rs.8 lakh for the entire family would be reasonable for inclusion into EWS,”
இதன் தமிழாக்கம் வருமாறு:
தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி விலக்கு வரம்பு தனிநபர்களுக்கு சுமார் ரூ.8 லட்சமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மொத்த குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சம் EWS-இல் சேர்ப்பதற்கு நியாயமானதாக இருக்கும் என்று குழு கருதுகிறது.
இவ்வாறு ஒன்றிய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை என்ன சொல்லுகிறது?
வருமான வரித்துறையின் விதிகள்படி அடிப்படை வருமான வரித் துறை விலக்கு என்பது இரண்டரை லட்சம் ரூபாய் வரைதான்.
அதற்குமேல் U/S 81-A என்ற வருமான வரி செலுத் துபவர்கள் (Net Taxable Income) ரூ.5 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால், ரூ.இரண்டரை லட்சம் முதல் ரூ.5 லட்சம் இடையே உள்ள அதிகபட்ச தள்ளுபடி (rebate) ரூ.12,500. இதன்படி ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர் களுக்கு வரியே கிடையாது என சொல்ல முடியுமா? காரணம், அவர்கள் LIC, PPF, MEDI CLAIM etc., என முதலீடு செய்தால்தான், ரூ.12,500 ரிபேட் கிடைக்கும். இவர்கள் எப்படி வருமானம் குறைந்தோர் பட்டியலில் வர முடியும்? இது முழுக்க முழுக்க ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பை நியாயப்படுத்தும் திசை திருப்பலே! 'Effective Income Tax Exemption' என்ற ஒரு சொற்றொடரே ஒரு திசை திருப்பல் வேலையாகும்!
இப்படி இருப்பதை, புள்ளி விவர ஆதாரப்படி தெளிவுபடுத்தாமல், எப்படியோ எல்லாம் சரிதான், 8 லட்சம் ரூபாய்தான் வரம்பு என்று கூறுவது மிகப்பெரிய திசை திருப்பலாகாதா?
உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவு என்ன?
உச்சநீதிமன்றம் கேட்டதற்குரிய பல கேள்விகளுக்குப் பதில் இதில் கிடையாது - “பழைய கள் புது மொந்தை'' (Old wine in a New Bottle) - தற்போதைய நிலையேதான் இதன் மூலமும் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறதோ? பொறுத்திருந்துதான் பார்ப்போம்!
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
5.1.2022
No comments:
Post a Comment