மதம் படுத்தும்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

மதம் படுத்தும்பாடு

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தனது பிள்ளைகள் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால், தான் சம்பாதித்த 2 கோடி ரூபாய் வீட்டை, முருகன் கோவிலுக்கு தானமாக கொடுத்தார்.

காஞ்சிபுரம், முனுசாமி அவென்யூ பகுதியில் வசிப்பவர் வேலாயுதம் (85). அவரது மனைவி ஞானமணி.காஞ்சிபுரம் நகராட்சியில், துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், வேலாயுதம். இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன். மூன்று பேரும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண் டனர். இதனால், தன் குல தெய்வமான குமரக்கோட்டம் முருகன் கோவிலுக்கு தன் சொந்த வீட்டை தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இது குறித்து வேலாயுதம் கூறியதாவது: "நான் சம்பாதித்து வீட்டைக் கட்டினேன். ஹிந்து மதத்தை சேர்ந்த எனக்கு, கடைசி காலத்தில் பிள்ளைகள் இறுதிச் சடங்கு செய்வர் என இருந்தேன். இரு மகள்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும், அரசுப் பணியில் உள்ளனர். ஒரு மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரு கிறார். அவரும் கிறிஸ்துவ மதத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மூன்று பிள்ளைகளும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டனர். எனவே, எனக்கு ஹிந்து முறைப்படி அவர்கள் இறுதிச் சடங்குகள் செய்யப்போவது இல்லை. எனக்கு சொந்தமான 2,680 . அடி பரப்பளவு வீடு, தற்போது 2 கோடி ரூபாய் மதிப்புடையது. இந்த வீட்டை மதம் மாறிய என் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்ப வில்லை.ஆகையால், என் குலதெய்வமான காஞ்சிபுரம் குமரக் கோட்டம் முருகன்கோவிலுக்கு தானமாக எழுதி வைத்து விட்டேன்.

கிறிஸ்துவர்களாக மாறிய பின், நான் இறந்தாலும், எனக்கு அவர்கள் இறுதிச் சடங்கு செய்ய மாட்டார்கள். இதனால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு என் சொத்தை கொடுக்க விருப்பம் இல்லை.தற்போது என் மூத்த மகளும், இரண்டாவது மகனும் என் வீட்டின் ஒரு பகுதியில் வசிக்கின்றனர்.

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை, இந்த வீட்டில் அவர்கள் வசிக்கலாம். எங்கள் மறைவுக்கு பின் இந்த வீட்டை கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்ளும். அதற்கான வீட்டுப் பத்திரத்தை அறநிலையத்துறை அமைச்சர் முன்னிலையில், நேற்று முன்தினம் கோவிலுக்கு வழங்கி விட்டேன்." இவ்வாறு அவர் கூறினார்.

இந்தச் செய்திகளைப் படிக்கும் பொழுது மதம் என்ற ஒன்று மனித உணர்வுகளை, சிந்தனைகளை எப்படியெல்லாம் காயப்படுத்தி இருக்கிறது என்று வேதனைப்பட வைக்கிறது.

காலம் மாறிக் கொண்டிருக்கிறது; கருத்துகளும் புதிய வடிவம் பெறுகின்றன; மாற்றம் என்பதுதான் மாறாதது என்பது அறிவியல்.

இந்தத் திசையில் பயணிக்க மதத்தின் தாக்கம் தடையாக இருப்பதும், காலைப் பிடித்து இழுப்பதும் எத்தகைய விபரீதம்?

இலவுகீக காரணங்களுக்காக மதத்தைப் பற்றி விமர்சனம் செய்வது இருக்கட்டும்; ஆனால் அன்றாட வாழ்வில் அது எவ் வளவுப் பெரிய சீரழிவை ஏற்படுத்துகிறது என்பது தான் முக்கியம்.

ஈன்று புறந்தருதல் தாயின் கடன்; சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனாகவே இருக்கட்டும்.

வளர்ந்த பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்தை நிச்சயிக்கும் உரிமையும், அறிவும் பெற்றவர்கள் இல்லையா? பிள்ளைகளின் வாழ்க்கையில் கடைசி வரை பெற்றோர்கள் பயணிக்க முடியுமா?

தனது துணைவனையோ, துணைவியையோ தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டப்படியான வயதடைந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் உண்டே!

பெற்றோர்களாக இருக்கட்டுமே - அதில் தலையிட அவர்களுக்கு உரிமையும், அதிகாரமும் ஏது?

சொந்த மதத்திலேயே திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் அனுகூலம் என்ன?

மாற்று மதத்தவரை மணந்தால் ஏற்படும் பிரதிகூலம் என்ன? யாராவது விளக்க முன்வரட்டுமே பார்க்கலாம்.

சம்பந்தப்பட்ட காஞ்சிபுரத்துக்காரர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

நான் செத்தால் ஹிந்து முறைப்படி என் பிள்ளைகள் இறுதிச் சடங்குகள் செய்ய மாட்டார்களே என்பதுதான் அவரின் கவலையாக - புலம்பலாக இருக்கிறது.

செத்ததற்குப் பிறகு சடங்குகள் செய்தால் என்ன? செய்யா விட்டால் என்ன? கண் விழித்து அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறார்களா?

செத்துச் சுண்ணாம்பு ஆன பின் எந்தச் சடங்கு என்ன செய்யப் போகிறது? கருமாதி செய்யப்பட்ட பிறகு 'சிவலோகம்' அல்லது 'வைகுந்தம்' செல்லும் பெற்றோரைப் பார்த்த பிள்ளைக் கண்மணிகள் யார், யார்?

மனித அறிவு வளர்ச்சி அடையாத காலத்தில் எந்தக் கிறுக்கனோ கிறுக்கியதை நம்பி நிகழ்கால வாழ்வை நீட்டூரம் செய்து கொள்வது புத்திசாலித்தனமா?

இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டதால், தம் சொத்துக்களைக் கோயிலுக்கு எழுதி வைக்கப் போகிறாராம்.

இவரது கடைசிக் காலத்தில், நோய் நொடியில் சிக்கிக் கொண்டால்  அப்பொழுது அவரைப் பாதுகாக்க கை நீட்டுவது யார்? கோயில் அர்ச்சகனா வருவான்? அல்லது அந்தக் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் அடித்து வைக்கப்பட்ட அந்தச் சிலையா ஓடி வந்து உதவப் போகிறது? அந்தச் சொத்துகளை சாப்பிட ஏராளமான பெருச்சாளிகள் மதப்போர்வையில் உண்டு.

மதம் ஓர் அபின் என்று சொன்னதுதான் எட்டுணை உண்மை!

No comments:

Post a Comment