இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்

ராமேசுவரம், ஜன.7 கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு படகின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. எனினும் மீனவர்கள் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 5.1.2022 அன்று  400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகுகள் மீது திடீரென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு மீன்பிடி படகில் வீல்ஹவுசின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.   இலங்கை கடற்படையினர் நடத்திய இந்த தாக்குதலில் ராமேசுவரம் மீனவர்கள் எந்த ஒரு காயமும் இன்றி உயிர் தப்பினார்கள்.

காணொலி

இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் தனுஷ்கோடி அருகே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு நேற்று  (6.1.2022) குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர். கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் ராமேசுவரத்தை சேர்ந்த ஏராளமான விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி விசைப்படகுகளை விரட்டுவது போன்ற காணொலி ஒன்று மீனவர்களது வாட்ஸ்-அப் குரூப்களில் வலம் வரத்தொடங்கியுள்ளது.

இந்த காணொலி பதிவை வைத்து உளவுப் பிரிவு காவல்துறையினர் இது அண்மையில் நடந்த தாக்குதல் சம்பவமா? அல்லது ஏற்கெனவே மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய பழைய தாக்குதல் சம்பவத்தின் காணொலியா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா தொற்று அதிகரிப்பு

மாணவர் விடுதிகளை மூட உத்தரவு

சென்னை, ஜன.7  கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பதால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே, பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து பொறியியல் உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் ஜன.20-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று, அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், கரோனா பரவல் தீவிரம் அதிகரித்து வருவதால், உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.

தற்போது கல்லூரிகளுக்கு ஜன.20-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தங்கும் விடுதிகளையும் கல்லூரிகள் உடனடியாக மூட வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும். வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதர வேண்டும். மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் வரை இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை `ட்ரோன் கேமராமூலம் கண்காணிக்க முடிவு

சென்னை, ஜன.7 சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கு தினத்தன்று ட்ரோன்கேமராக்கள் மூலம் கண்காணிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சென்னை பெருநகரில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய சிறப்புக் குழுக்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அமைத்துள்ளார்.

இந்தக் குழுவினர் தங்களது எல்லைக்கு உட்பட்ட மார்க்கெட், கடற்கரைப் பகுதிகள், கடைவீதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், முகக்கவசம் அணியாமல் வரும்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

 வரும் ஞாயிற்றுக்கிழமை (9.1.2022) தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்று அனைத்து சாலைகளிலும் தடுப்பு மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து, கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், தனி மனித இடைவெளியைக் கடைப் பிடித்தும் ஒத்துழைக்க வேண்டும். அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment