வளிமண்டல மாற்றங்களை ட்ரோன் மூலம் முன்கூட்டியே அறிய திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

வளிமண்டல மாற்றங்களை ட்ரோன் மூலம் முன்கூட்டியே அறிய திட்டம்

ஒன்றிய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் தகவல்

சென்னை, ஜன.3 கடலோரப் பகுதிகளில் எதிர்பாராதவிதமாக அதிகனமழை பெய்வது அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முன்கூட்டியே அறிய, வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களை ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் அறிய திட்டமிட்டிருப்பதாக ஒன்றிய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல அடுக்குகளில் காற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணிப்பது மற்றும்வானிலை மாடல்களை உருவாக் குவது போன்றவற்றை மேம்படுத்தும் திட்டம் உள்ளதா? என ஒன்றிய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, அவர்  தெரிவித்ததாவது:

கடல் பரப்பில் ஏற்படும் வெப்பம் காரணமாக இந்திய கடலோர மாவட்டங்களில் இதுபோன்று அதிகனமழை பெய்வது அதிகரித் துள்ளது. இதைக் கணிப்பதும் சிரமம். தரவுகள் பெறுவதை அதிகரிக்கும்போது மாடல்களின் தரம் மேம்படும். அதைக் கொண்டு கணிக்கும்போது வானிலை முன்னறிவிப்பும் மேம்படும்.

தமிழ்நாட்டில் சென்னை, காரைக் கால் ஆகிய இடங்களில் வளிமண்டல அடுக்கில் காற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காலை மற்றும் மாலை வேளைகளில் கண்காணிப்பு கருவிகளை பலூன்களில் பறக்க விட்டு தரவுகள் சேகரிக்கப்படுகிறது. காலை மற்றும் மாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் வளிமண்டல மாற்றத்தை கண்காணிப்ப தில்லை. அதனால் இடைப்பட்ட நேரத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

பலூன்களைப் போன்று ட்ரோன்கள் உயரமாக செல்லாவிட்டாலும், அது செல்லும் வரை கிடைக்கும் தரவுகளைப் பெற்று வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த முடியும். மேலும் சென்னை - அந்தமான் இடையே ஏராளமான சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள், ஆராய்ச்சி கப்பல்கள் இயக்கப்படுகின்றன. அவற்றிலிருந்தும் ட்ரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வளிமண்டல அடுக்குகளை கண் காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமல் லாது பிற மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பையும் மிகச் சரியாக வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment