மாணவச் செல்வங்களே, சங்கடங்களை எதிர்நோக்கும்பொழுது தோல்வி மனப்பான்மை வரக்கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

மாணவச் செல்வங்களே, சங்கடங்களை எதிர்நோக்கும்பொழுது தோல்வி மனப்பான்மை வரக்கூடாது!

கற்றுக்கொடுப்பதைவிட, கற்றுக்கொண்டு போக வந்திருக்கிறேன்!

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஊக்கவுரை!

சென்னை, ஜன. 3  கற்றுக்கொடுப்பதைவிட, கற்றுக் கொண்டு போக வந்திருக்கிறேன்; மாணவச் செல்வங் களே, சங்கடங்களை எதிர்நோக்கும்பொழுது தோல்வி மனப்பான்மை வரக்கூடாது என்றவர் பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பகுத்தறிவுப் பகலவனின்  48 ஆம் ஆண்டு நினைவு நாள்

28.12.2021 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் சார்பில் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், கல்லூரி யின் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

‘‘பெரியார் பிறந்திருக்காவிட்டால்’’....

மிகுந்த மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் மாணவச் செல்வங்களையும், பேராசிரியப் பெருமக் களையும் மற்றும் பேரன்பு கொண்ட தோழர்களையும் சந்திக்கக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பாக ஏற்பாடு செய்து, இங்கே மூடநம்பிக்கைகளையெல்லாம் அகற்றி, பிறவி பேதத்தையெல்லாம் எதிர்த்துப் போர்க் குரல் கொடுத்து, சமுதாயத்தில், சமத்துவமும், சம வாய்ப்பும் இருக்கவேண்டும் என்பதற்காக, தன்னுடைய 95 ஆண்டுகள் வாழ்க்கையில், பெரும்பகுதியை பதவி நாடாமல், புகழைத் தேடாமல், எதிர்ப்பை இன்முகத்தோடு ஏற்று, சிறப்பான வரலாறு படைத்துக்கொண்டு, மிகப் பெரிய அளவிற்குத் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் என்று அழைக்கப்பட்ட அருமைத் தலைவர் பேராசான் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு நாள் - மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பாக நடத் தப்படக்கூடிய இந்த அருமையான  கருத்தரங்கம்- இது ஒரு நன்றித் திருவிழா!

‘‘பெரியார் பிறந்திருக்காவிட்டால்’’ என்ற தலைப் பிலே கலைஞர் ஒரு கேள்வி கேட்டார். பெரியார் பிறந் திருக்காவிட்டால், நாமெல்லாம் இந்தக் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருப்போமோ என்ற கேள்வியை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால், மிகப்பெரிய அளவிற்கு இந்த வாய்ப்புகள் வந்தமைக்கு நன்றித் திருவிழாவாக நடைபெறக்கூடிய இந்த அருமையான ஏற்பாட்டினால் - மாநிலக் கல்லூரி - எந்தத் தன்னாட்சிக் காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோமோ, அந்தத் தன்னாட்சியை மாநில அரசு கல்லூரி பெற் றிருக்கிறது என்கிற பெருமையோடு, இங்கே நாங்கள் உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு  எனக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த ஆய்வாளர்களிலே ஒருவர் என்று சொன்னால், அவர் நம்முடைய பேரன்பிற்குரிய, உங்கள் முதல்வர் அவர்கள்தான். அந்தப் பெருமையை, வாய்ப்பை நான் அவரிடமிருந்து பெறுகிறேன்.

சம்பூகன் தவம் செய்தததற்காக தலையை வெட்டிய ராமனாக ஒருபோதும் நமது கல்லூரி முதல்வர் இருக்கமாட்டார்

இவர் பெயர் ராமன். உங்களுக்கெல்லாம் தெரியும். அறிமுகம் தேவையில்லை. ஆனால், இந்த ராமன், சம்பூகன் தவம் செய்தததற்காக தலையை வெட்டிய ராமனாக ஒருபோதும் இருக்க மாட்டார்.

மாறாக, சம்பூகனின் தவத்திற்கு இவர் துணை யாக நிற்கக்கூடிய காரணத்தினால்தான், மாநிலக் கல்லூரியிலே இவ்வளவு சிறப்புமிக்க முதல்வராக, உங்களுடைய அன்பைப் பெற்றவராக இருக்கிறார்!

காலங்கள் மாறுகின்றன; ''இராமன்களும்'' மாறுகின்றார்கள்

ஆகவே, காலங்கள் மாறுகின்றன; ‘இராமன்களும்மாறுகின்றார்கள். இதுதான் இயற்கையானது.

அந்த வகையில் நண்பர்களே, இப்பொழுதெல்லாம் துரோணாச்சாரியார்களைக் கண்டுபிடிக்க முடியாது; அப்படியே துரோணாச்சாரியார்களே இருந்தாலும்கூட, அவர்கள் ஏகலைவனின் கட்டை விரல்களைக் கேட்க மாட்டார்கள்; வேண்டுமானாலும், இப்படிப்பட்ட ஆசிரி யர்கள் இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று சொன் னால், உங்களுடைய அன்பை மாணவர்களுக்குத் தருவீர்கள்.

அப்படிப்பட்ட அருமையான முதல்வர் முனைவர் அய்யா ராமன் அவர்களே,

இந்த நிகழ்ச்சியில், வரவேற்புரையாற்றிய தமிழ்த் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் அய்யா ஷேக் மீரான் அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கக் கூடிய தமிழ்த் துறையின் துணைத் தலைவர் முனைவர் நண்பர் ஆதிநாராயணன் அவர்களே,

இந்நிகழ்ச்சிக்கு என்னோடு வருகை புரிந்து இருக் கக்கூடிய திராவிடர் கழகத் துணைத் தலைவரும், ‘விடுதலைநாளிதழின் நிர்வாக ஆசிரியர் என்பதெல் லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், கல்வி ரீதியாக இப்பொழுது அவர் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அது பல பேருக்குத் தெரியாது.

வழிகாட்டு அறிஞர் குழு உறுப்பினர்

சென்னை பல்கலைக் கழகத்தில் திராவிட ஆய்வு மய்யத்தில், ஆய்வுக்கு வழிகாட்டு அறிஞர் குழு உறுப் பினராக அவர் இருக்கிறார் என்பது மிகப் பெருமைக்குரிய ஒன்று.

ஆகவே, கல்வி அறிஞர் என்ற முறையில்தான் அவர் மேடையில் அமர்ந்திருக்கிறார். வெறும் கழகத்துக்காரர் என்பதற்காக அல்ல. அதையும் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டியவர்கள், பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.

அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பில், எண் ணற்ற பேராசிரியப் பெருமக்கள் எதிரில் அமர்ந்திருக் கின்றீர்கள்.  என்னருந் தோழர்காள் என்று நாங்கள் மகிழக்கூடிய மாணவச் செல்வங்களாகிய  இருபால் தோழர்கள் இருக்கிறீர்கள்.

நான் இந்தப் பக்கத்தைப் பார்த்தவுடன், அந்தப் பக் கத்தைப் பார்த்தேன், எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. காரணம், உங்களைக் குறைத்து மதிப்பிடவில்லை நண்பர்களே, ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்று கேட்டார்கள். நல்ல வாய்ப்பாக கலைஞர் அவர்களுடைய ஆட்சி வந்த காலத்திலே, ஊதுகின்ற அடுப்பே இல்லை - திருகியவுடன் எரிகின்ற அடுப்பைத்தான் உருவாக்கினார்கள்.

5 ஆயிரம் மாணவர்களில்,

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மகளிர்...

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலையில், நம்முடைய பெருமைக்குரிய முதல்வர் அய்யா ராமன் அவர்களிடத்திலே நான் கேட்டேன்; வர லாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கல்லூரியில் மாண வர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று.

அதற்கு அவர், 5 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகளிர்.

இதைவிட மிகப்பெரிய கல்விப் புரட்சி, சமூகப் புரட்சி வேறு கிடையாது.

பெரியார் அவர்களுக்கு எது மகிழ்ச்சி அளிக் குமோ, அந்த செய்தி அது.

நினைவு நாள் என்பது வரலாற்றுக் குறிப்பு

பெரியாருடைய நினைவு நாள் என்பது நமக்கு ஒரு சம்பிரதாயம் அல்ல; சடங்கு அல்ல; சனாதன சின்னமல்ல; சிரார்த்தம் அல்ல.

நினைவு நாள் என்பது வரலாற்றுக் குறிப்பு. அவர்கள் செய்த பணி என்ன? அவர்கள் செய்ய விரும்பிய பணி என்ன?

அந்தப் பாதையை நாம் மிகப்பெரிய அளவிற்குப் பற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் என்ன?

இன்னமும் பெரியார் விமர்சிக்கப்படுகிறார்; அதுதான் அவருடைய தனிச் சிறப்பு.

வாழ்ந்த காலத்தில் அவருக்கு எத்தகைய எதிர்ப்பு இருந்ததோ - அந்த எதிர்ப்பை - அவர் கொஞ்சம்கூட குறைத்துக் கொள்ளாத அளவிற்கு, அவருடைய வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டினுடைய முதல் பேராசிரியர்

அன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டும் தெரிந்த அய்யா தமிழ்நாட்டினுடைய பேராசிரியராக, அண்ணா அவர் களால் முதல் பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார்.

கல்லூரிக்கே போகாதவர், எப்படி பேராசிரியராக இருக்க முடியும்? என்று உங்களில் சிலருக்குச் சந்தேகம் வரும்.

தந்தை பெரியாரின், தலைமாணாக்கர் அண்ணா அவர்கள் சொன்னார், அந்தப் பேராசிரியருடைய வகுப்பு - கல்லூரி வகுப்பறைக்குள்ளே இருக்காது; அது மாலை நேரக் கல்லூரியாக அமைந்து- ஒவ்வொரு ஊரி லும், இரண்டு, மூன்று மணிநேரம் உரையாற்றுவார்கள்; மக்களைத் திருத்துவார்கள் என்று சொன்னார்.

அய்யா அவர்கள், மாணவச் செல்வங்களைப் பார்க்கின்றபொழுது மகிழ்ச்சியடைவார்.

கற்றுக்கொடுப்பதைவிட,

கற்றுக்கொண்டு போக வந்திருக்கிறேன்!

இந்தக் கல்லூரிக்கு நாங்கள் வருவது, இது முதல் முறையல்ல; பல முறை வந்திருக்கிறோம். அதை விட இந்தக் கல்லூரியைப்பற்றி குறிப்பெழுதச் சொன்னார்கள்; அதில் நான், ‘‘இங்கே நான் கற்றுக்கொடுப்பதைவிட, கற்றுக்கொண்டு போக வந்திருக்கிறேன்’’ என்றுதான் எழுதியிருக்கிறேன்.

நீங்கள் நினைக்கலாம், ஒருவேளை அடக்கத் திற்காகச் சொல்கிறாரோ அல்லது மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காகச் சொல்கிறாரோ என்று.

பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகப் பேசி பழக்கமில்லாதவர்கள் நாங்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மிகத் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் நண்பர்களே, இங்கே நான் உரிய நேரத்திற்கு வந்தபொழுது, என்னை என்.சி.சி. மாணவத் தோழர்களுடைய கட்டுப்பாடு மிகுந்த அன் பான வரவேற்பு உள்பட தந்து அழைத்து வந்தார்கள்.

ஏராளமான படிக்கட்டுகள் - படிக்கட்டைப் பார்த்த வுடன் எனக்கு ஒன்று நினைவிற்கு வந்தது. இங்கே சொல்வதற்குப் பொருத்தமானது என்பதால், அதை உங்களுக்குச் சொல்கிறேன்.

பக்கத்தில் இருக்கின்ற சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்; பெரும்பாலும் நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருப்பீர்கள்.

நெறிக்காவலர் நெ.து.சுந்தரவடிவேலு

அந்தப் பல்கலைக் கழகத்தில், நம்முடைய ஒப்பற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது, பல்கலைக் கழக துணைவேந்தராக, கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் இருந்தார்கள்.

இந்த மாநிலக் கல்லூரி பெருமையோடு நினைக்கின்ற பழைய மாணவர் அவர். அவர்தான் இந்த நாட்டிற்கே கல்வியைக் கொடுத்தார்.

கல்வி வள்ளல் காமராசர்

கல்வி வள்ளல், தமிழர்களுடைய இரட்சகர் என்று தந்தை பெரியார் அவர்களாலே வர்ணிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்று, ‘நாடெலாம் பாய்ந்தது கல்வி நீரோடைஎன்று சொல் லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு, அவர் அரசாங்கத்தினுடைய கல்வித் தலைவராக - இயக்குநராக இருந்து, அதன் பிறகு, டில்லியில் பெரிய பொறுப்பில் இருந்து - சென்னை பல்கலைக் கழகத்தினுடைய துணைவேந்தராகவும் இரண்டுமுறை இருந்து வரலாறு படைத்தவர் அவர்.

இந்தக் கல்லூரியினுடைய மாணவர் - இன்னுங் கேட்டால், இந்தக் கல்லூரியில் அப்பொழுது படித்தவர் களிலேயே குட்டையானவர் மட்டுமல்ல - எல்லாவற் றிலும் எளிமையான - காஞ்சிபுரத்தில் பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்திலிருந்து வந்து படித்தவர்.

அவர், முதலமைச்சர் கலைஞரை அழைத்துக் கொண்டு மேடைக்குப் போகிறார்.

அங்கும் ஏராளமான படிக்கெட்டுகள் -

இப்பொழுது மாநிலக் கல்லூரி முதல்வரின் அறைக்கு எங்களை அழைத்து வந்தபொழுது, நிறைய படிக் கட்டுகள் இருந்தன; அதன்மீது ஏறித்தான் இங்கே வந்திருக்கிறோம். அத்தனைப் படிக்கெட்டுகளை ஏறித்தான் நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நகைச்சுவை!

அப்படி கலைஞர் அவர்கள் அன்றைக்குப் படிக்கட்டு களை ஏறி வருகின்றபொழுது, மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டே வருகிறார்.

உங்களுக்கெல்லாம் தெரியும் கலைஞர் அவர்கள் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர்.

துணைவேந்தராக இருந்த சுந்தரவடிவேலு அவர்கள், கலைஞரை அழைத்துக்கொண்டு முன்னே வரும் பொழுது, ‘‘பார்த்துங்க, படிங்க, படிங்க!’’ (படிக்கட்டுகள் இருக்கின்றன) என்று சொல்கிறார்.

ஒவ்வொரு படிக்கட்டுக்கும் இதேபோன்று சொல்லிக் கொண்டே வருகிறார்.

மூன்று முறை, நான்கு முறை அவர் சொன்னவுடன்,

கலைஞர் அவர்கள் சிரித்துக்கொண்டே, ‘‘என்னங்க, எங்க அப்பா அந்தக் காலத்தில் சொல்லியே கேட்கவில்லை; இப்பொழுது இந்த வயதில்தானா நான் என்னப் படிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை’’ என்று சொன்னார்.

அதுபோன்று, ‘‘படி, படி, படி’’ என்று சொல்லக் கூடியதைத்தான் தந்தை பெரியார் சொன்னார்.

அதைச் சொல்லுவதற்குக்கூட எங்களை அழைத்து வரும்பொழுது, ‘‘படி, படி, படியென்று’’ பல படிகளை ஏறித்தான் இங்கே வந்திருக்கின்றோம்.

சங்கடங்களை எதிர்நோக்கும்பொழுது தோல்வி மனப்பான்மை வரக்கூடாது!

எனவே, நீங்கள் சலிக்காதீர்கள்; சங்கடங்களை எதிர்நோக்கும்பொழுது உங்களுக்கு சலிப்பே வரக்கூடாது; விரக்தியே வரக்கூடாது; தோல்வி மனப்பான்மை வரக்கூடாது.

அத்தனைப் படிக்கட்டுகளை ஏறித்தான், இந்தக் காலரியில் நீங்கள் இப்பொழுது அமர்ந்திருக்கிறீர்கள்.

இங்கேகூட பாருங்கள்; முன் வரிசையில் அமர்ந் திருப்பவருக்கும் வாய்ப்பு இருக்கிறது; கடைசி வரிசை யில் அமர்ந்திருப்பவருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தான் சமூகநீதி நண்பர்களே!

சமூகநீதி என்று சொன்னால், ஒரு பெரிய பாடத்தைப் படிக்கவேண்டிய அவசியமே இல்லை.

தந்தை பெரியாரின் நினைவு நாள் என்று சொல் லக்கூடிய இந்த நிகழ்வைப்பற்றி சொல்லும்பொழுது, கல்லூரிக்குப் போகாத பெரியார். அதைத்தான் நம்மு டைய பேராசிரியர் அவர்களும், மற்ற நண்பர்களும் எடுத்துச் சொன்னார்கள்.

என்னுடைய உரையில் நான் சுட்டிக்காட்டியதை, முன்னுரையில் எடுத்துக்காட்டினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள், கல்லூரிக்கே போகாதவர்; இன்றைக்கு அவர் பல கல்லூரிகளில் வருவதற்குக் காரணம் என்ன? பல்கலைக் கழகங்களில் அவரைப்பற்றி ஆய்வு செய்யக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள் என்றால், ஏன்?

அவர் உருவத்தால், உடலால் மறைந்து 48 ஆண்டு கள் ஆனாலும், கொள்கையால், தத்துவத்தால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அதுவும் இன்னமும் விமர்சிக்கப்படக் கூடிய ஒரு பெரியார் அவர்.

பேராசிரியர்கள் நன்னன்வெள்ளையன்

மிக முக்கியமாக இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் திலேகூட, அவருடைய சிந்தனைகள் வளர்ந்திருக் கின்றன. இந்தக் கல்லூரியில் அய்யா அவர்கள் உரையாற்றி இருக்கிறார். நாங்களும் அவருடன் வந்திருக்கிறோம். இந்தக் கல்லூரியினுடைய ஆசிரியப் பெருமக்களே, பேராசிரியர் அய்யா நன்னனைப் போன்றவர்கள், எனதருமைத் தோழர் பேராசிரியர் வெள்ளையனைப் போன்றவர்கள் - ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்தவர்கள். வரலாற்றுத் துறை என்று, ஒவ்வொரு துறையிலும் இருந்த ஆய்வாளர்கள் மட்டுமல்ல, வரலாறு படைத்தவர்கள்.

அப்படிப்பட்ட அருமையான கல்லூரி மாணவர் களாகிய உங்களை நான் பார்க்கின்றபொழுது, மகிழ்ச் சியைப் பெறுகிறேன். உங்களுடைய உற்சாகத்திற்கு முன், நான் கற்றுக்கொள்ளத்தான் வந்திருக்கிறேன்.

(தொடரும்)

No comments:

Post a Comment