நாவசைத்து நற்றமிழ்க்கே அழகு சேர்த்தோய்
நறுந்தமிழ்த்தேன் பிலிற்றுகின்ற உரைகள் வார்த்தோய்
தூவலையே கெஞ்ச வைக்கும் எழுத்தில் தோய்ந்தோய்
தூக்கமதைத் துஞ்சவைக்கும் விழிப்பு வாய்ந்தோய்
பூவுலகே வியக்குஞ்சொல் நயத்தில் தேர்ந்தோய்
பூசுரர்தம் அடிவயிற்றைக் கலக்க ஆர்ந்தோய்
மாவரையாய் ஆகிஇன மானம் காத்தோய்
மாமேதை பெரியார்தம் காவில் பூத்தோய்!
சீர்திருத்தத் தந்தைநெறி கடைப்பி டித்தோய்
சீர்திருத்தத் திருமணங்கள் செல்ல வைத்தோய்
ஆர்தமிழும் ஆங்கிலமும் போதும் என்றோய்
அழிக்க வந்த இந்திதனை எதிர்த்து நின்றோய்
பேர்விளங்கத் தமிழ்நாடு என்று கண்டோய்
பேருலகில் இம்மூன்றாய் நிலைப்புக் கொண்டோய்
போர்முரசம் ஆகிஇனம் விழிக்கச் செய்தோய்
போர்ப்பெரியார் கொள்கைவழிப் புரட்சி பெய்தோய்!
அனைத்துவகைத் திறமைகளும் அடங்கப் பெற்றோய்
ஆளுமைக்கோர் இலக்கணமாய் அமைய லுற்றோய்
தினைத்துணையும் தன்னலத்தை நோக்கா நின்றோய்
‘திராவிடன்நான்’ எனமன்றில் ஒலித்து வென்றோய்
வினைத்தூய்மை என்பதற்கே விளக்கம் ஆனோய்
விண்மீனாம் ஞாயிறையே விஞ்சிப் போனோய்
அனைத்தெந்தம் பெரியாரால் ஆன தென்றோய்
ஆட்சியையே அவர்க்களித்து மகிழச் சென்றோய்!
இறப்புதனை நெருங்கிட்ட நாளில் கூட
இன இழிவைப் போக்குதற்காய்த் தவித வித்த
அறத்தொண்டர் பெரியார்க்காய் அமைந்து நாட்டில்
அல்பகலே நோக்காமல் உழைத்த நின்றன்
திறத்திற்கோர் உவமைதனைத் தேடிச் சென்றும்
தென்றிசையில் நீயேதான் கிடைத்தாய் அண்ணா
சிறப்புற்ற திராவிடம்தான் வென்று நின்னை
சிந்தைதனில் குடியேற்றிச் சிறக்கும் அண்ணா!
- பெரு.இளங்கோ
No comments:
Post a Comment