தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்; கைப்பற்றப்பட்ட படகுகள் ஏலம் என இலங்கைக் கடற்படை அறிவிப்பு என்ன செய்கிறது ஒன்றிய அரசு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்; கைப்பற்றப்பட்ட படகுகள் ஏலம் என இலங்கைக் கடற்படை அறிவிப்பு என்ன செய்கிறது ஒன்றிய அரசு?

தமிழ்நாட்டு மீனவர்கள்மீது கடற்கொள்ளையர் தாக்குதல்; கைப்பற்றப்பட்ட படகுகள் ஏலம் என இலங்கைக் கடற்படை அறிவித்திருக்கிறது.  என்ன செய்கிறது ஒன்றிய அரசு  என்று   வினா எழுப்பி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டு மீனவர்கள் படும் பாடு சொல்லத் தகுந்ததாக இல்லை. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் நடுக்கடலில் நேற்று (24.1.2022) மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடற்கொள்ளையர்களால்  தாக்கப்பட்டுள்ளனர்.  அவர்களிடமிருந்த வலை, மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, டீசல், பணம் போன்றவை கொள்ளை யடிக்கப்பட்டுள்ளன. நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட அவர்கள், பின்னர் பிற மீனவர்களின் உதவியைப் பெற்று, அவர்களிடமிருந்து டீசல் வாங்கி, ஆறுகாட்டுத்துறைக்கு வந்துசேர்ந்து இப்போது  வேதாரண்யம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நம் மீனவர்களின் உயிராபத்து ஏற்படும் அச்சம்!

நேற்று முன் தினமும் (23.1.2022) இதேபோல இலங்கை கடற்கொள்ளையர்கள், இதே புஷ்ப வனம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்களைத் தாக்கிக் கொள்ளையடித்துள்ளனர். வாள், இரும்புக் கம்பிகள் சகிதமாக வரும் இந்தக் கொள்ளையர்கள்மூலம் நம் மீனவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் என்ற அச்சம் வேறு எழுந்துள்ளது.

இத்தனை காலமும் இலங்கை கடற்படையினரால் கொடூரத் தாக்குதல்களுக்கு நம் மீன வர்கள் இலக்காகி வந்த நிலையில், கடற்கொள் ளையர்கள் என்ற புதிய அச்சுறுத்தல் நிலைமை மீனவர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக் கியுள்ளது.

ஒன்றிய அரசு செய்யப் போவதென்ன?

மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரம் என் றைக்குமே இப்படி தாங்கமுடியாத தொல்லைக்கு ஆளாக்கப்படுவதென்றால் அவர்கள் நாதியற்ற வர்களா? இந்திய எல்லைக்குள் நடந்திருக்கும் இத்தகைய தாக்குதலையும், கொள்ளைச் சம் பவத்தையும் மோடி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? மனித நேயத்தோடு இந்தக் கேள்வி அனைவராலும் முன்வைக்கப்படும் நிலையில், ஒன்றிய அரசு செய்யப் போவதென்ன?

கடந்த மாதம் தமிழ்நாட்டு மீனவர்கள் 68 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப் பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்கக் கோரி தமிழ்நாடு முதல மைச்சரும், நாமும், அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியும், அவர்களில் 12 பேர் மட்டுமே  விடுவிக்கப்பட்டுள் ளனர். கடந்த ஆண்டு மட்டும் 19 முறை இலங்கைக் கடற்படை நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப் பட்டுள்ளனர். குஜராத் மீனவர் ஒருவர் கொல்லப் பட்டதற்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு தாக்கீது அனுப்பி உடன் நடவடிக்கை எடுத்தது ஒன்றிய அரசு.

மீனவர் அமைப்புகள் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம்

ஆனால் தாக்குதல், கைது, இழிவாக நடத்தப்படுதல், கொலை, படகுகள் பறிமுதல் என மனிதநேயமற்ற முறையில் இலங்கைக் கடற்படை நடந்துகொண்டு வருவதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அந்நாட்டுக்கு மீண்டும் மீண்டும் பல்லாயிரம் கோடிக் கடனை அள்ளி வழங்கிக் கொண் டிருக்கிறது. கடன் வாங்கிய ஈரமே கைகளிலிருந்து காயும் முன்னர், கைப்பற்றப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 105 படகுகளை பிப்ரவரி 7 ஆம் தேதி ஏலம் விடப்போவதாக இலங்கை அரசின் கடற்படை அறிவித்துள்ளது. அதனைக் கண்டித்து மீனவர் அமைப்புகள் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

நாளும் இயற்கையோடு போராடி வாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் நம் மீனவர்கள் இலங்கை கடற்படை, கடற்கொள்ளையர்கள் என்று இன்னும் எத்தனை பேருடன் தான் போரா டுவது? எத்தனை காலம் தான் போராடுவது? உரிய விரைவான நடவடிக்கை எடுத்து மீனவர் களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் காக்க தமிழ்நாடு முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு..ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்கு மேலும் போதிய அழுத்தத்தை வலியுறுத்த வேண்டும். இதுவரை மீன்வளத் துறை என்று இருந்த தமிழ்நாடு அரசின் துறையை, மீனவர் நலத் துறை என்று ஆக்கியவர் நம்முடைய முதலமைச்சர்.

இந்தியாவின் கடற்படைக்கு அவமானம் இல்லையா?

ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறைக்கு தமிழ்நாட்டு மீனவர்களின் வேதனை துச்ச மானதா? கொள்ளைச் சம்பவம் இந்தியாவின் கடற்படைக்கு அவமானம் இல்லையா? இந்திய எல்லைக்குள் நடந்திருக்கும் அந்நிய நாட்டுத் தாக்குதலும், கொள்ளைச் சம்பவமும் ஒன்றிய  சவுக்கிதார்அரசுக்கு உறைக்காதா?

கடலோடு போட்டியிட்டு கண்ணீர்க் கடலில் வாழ்வது தான் எங்கள் மீனவ சகோதரர்களுடையதலையெழுத்தா’?


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

25.1.2022

No comments:

Post a Comment