அய்ந்து மாநிலத் தேர்தல்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதில் பஞ்சாப் தவிர உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி.
பஞ்சாப் மட்டுமல்ல, உத்தரப் பிரதேசம் உத்தராகண்ட் இந்த மாநிலங்களிலும் விவசாயிகளை வஞ்சித்த மோடி அரசுக்கு எதிராகவும், சாமியார் ஆட்சியில் நடந்த அராஜகத்திற்கு எதிராகவும் கடுமையான வெறுப்பு மக்களிடையே உள்ளது, இதை ஈடுகட்ட பணம் தண்ணீராக செலவழிக்கப் படுகிறது,
அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் வாக்குச்சாவடியில் அமர்ந்து கொண்டு பெண்வாக்காளர்களிடம் பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள் என்கிறார்கள்.
அதிகாரிகளுக்கான அஞ்சல் வாக்குகளை பாஜக பிரமுகர் ஒட்டு மொத்தமாக வாங்கி தாமரைச் சின்னத்திற்குக் குத்துகிறார். இதை தட்டிக்கேட்ட ஒரு அதிகாரியை உனக்கு நாட்டின் வளர்ச்சி கண்டு பொறாமை, நீ காங்கிரஸ் காரனா? என்கிறார்.
இப்படித்தான் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் வாக்குப்பதிவு நடந்துகொண்டு இருக்கிறது.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரப்பிர தேசத்தில் 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
அய்ந்து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக முயற்சி செய்யும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், மது, இலவசப் பொருட்களை வாரி வழங்கி வருகின்றன.
இதைக் கட்டுப்படுத்த தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனையில் 5 மாநிலங்களிலும் இதுவரை மொத்தம் ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான மது, இலவச பொருட்கள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் அதிகபட்சமாக ரூ.510.91 கோடி, அதையடுத்து உத்தரபிரதேசத்தில் ரூ.307.92 கோடி, மணிப்பூரில் ரூ.161.83 கோடி, உத்தராகண்டில் ரூ.18.81 கோடி, கோவாவில் 12.73 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தையும் கைப்பற்றி உள்ளனர்.
மொத்தம் 140.29 கோடி ரூபாயும், 99.84 கோடி ரூபாய் மதிப்பிலான 82 லட்சம் லிட்டர் மது வகைகளும், 569.52 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும், ரூ.93.5 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த மாநிலங்களில் கைப்பற்றப்பட்டதை விட இது சுமார் 4 மடங்கு அதிகம் ஆகும். கடந்த தேர்தலின் போது 299.84 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பொது இடத்தில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து கொண்டு பண்ணையார்கள் கூலியாட்களுக்கு கூலி கொடுப்பது போல் வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பெயராக அழைத்துப் பணத்தைத் தருகிறார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பாஜக சின்னம் பொறித்த ஹீட்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை தேர்தல் பிரச்சார மேடைகளில் வைத்தே தருகிறார்கள்.
இப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சாதாரணமாக பொது மேடைகளில் பா.ஜ.க.வினர் தருவது குறித்து எந்த ஒரு ஊடகமும் செய்திகளை வெளியிடவில்லை.
எதிர்க்கட்சிகள் இதைக் கேட்டால் அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இந்துத்துவ துணை அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்புகள் கையில் கற்றை கற்றையாக பணத்தை வைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று - வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்தால் - பணம் தருகிறார்கள். கூடவே சத்தியமும் வாங்குகிறார்கள்
ஒரு தேர்தல் வாக்குப்பதிவு மய்யத்தில் பாஜகவிற்கு வாக்களிக்க கூறிய தேர்தல் அதிகாரி ஒருவரை பொதுமக்களே பிடித்து விசாரித்தனர்.
அந்த இந்தி உரையாடலின் தமிழாக்கம்
பொது மக்கள்: உங்கள் பெயர் என்ன?
அதிகாரி: ஆஷிஸ்
பொது மக்கள்: எங்கே வசிக்கிறீர்கள்?
அதிகாரி: லக்னோ
பொது மக்கள்: இங்கே எதற்கு வந்தீர்கள்?
அதிகாரி : எங்களது போலிங் டூட்யூட்டி இங்கே தான்
பொது மக்கள்: பெண் வாக்காளர்களிடம் பாஜகவுக்கு வாக்குப் போடுங்கள் என்று ஏன் கூறினீர்கள்?
அதிகாரி: மன்னியுங்கள்.. (காலில் விழுகிறார்!)
பொது மக்கள்: எங்களுடைய காலைப் பிடிக்காதீர்கள், நீங்கள் பெண் வாக்காளர்களிடம் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஏன் கூறினீர்கள்?
அதிகாரி: தப்பு நடந்துவிட்டது மன்னித்துவிடுங்கள்
பொது மக்கள்: உங்களது அடையாள அட்டையைத் தாருங்கள் - கொடுங்கள்
அதிகாரி : தப்பு நடந்துவிட்டது
அதிகாரி : பிளீஸ் தப்பு செய்துவிட்டேன்
மற்றொரு அதிகாரி: அதுதான் மன்னிப்பு கேட்டு விட்டாரே - விட்டு விடவேண்டியதுதானே!
பொதுமக்கள் : நீங்கள் மூத்தவர்கள் - இப்படிச் செய்யலாமா?
அதிகாரி : ராம் ராம் ஓம் நமச்சிவாய -
பொது மக்கள்: யோவ், ராம் ராம் என்று ஏன் சொல்கிறீர்கள், திருட் டுத்தனம் செய்துவிட்டு ராம்ராம் சொல்கிறாயே? 'வெட்கமா இல்லை' என்று ஒரு காட்சிப் பதிவில் அதிகாரி மற்றும் பொது மக்களிடையேயான உரையாடல் இணையதளத்தில் பரவலாகி வருகிறது!
இதுதான் பாஜக தேர்தல் நடத்தும் அவலம்.
இப்படியொரு கேவலம், அருவருப்பு, ஆபாசம், அநாகரிகத்தை பா.ஜ.க., சங்பரிவார்களிடம் மட்டும் தான் காண முடியும்! இதை அனுமதிக்கலாமா? வாக்காளர்களே சிந்திப்பீர்!
No comments:
Post a Comment