நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் உள்ள வேளாக்குறிச்சி ஆதீனம் அவரது மணி விழாவை முன்னிட்டு இந்த 21ஆம் நூற்றாண்டிலும் அடிமைச் சிந்தனை கொண்டு ‘பட்டினப் பிரவேசம்‘ எனும் பெயரில் நகர்வலம் வரும் பொருட்டு மனிதனை மனிதன் தூக்கும் பல்லக்கில் வைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டதை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிற்பிற்கிணங்க வெகு மக்களுடன் கழகத் தோழர்கள் தடுத்திடவும் போராட்டம் மறியலாய் நடத்திட, முறைப்படி திட்டமிட்டு பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் குன்றக்குடி, திருப்பனந்தாள், மதுரை, திருவாவடுதுறை போன்ற மடங்கள் பார்ப்பனரல்லாத சூத்திர மடங்கள் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. அவற்றில் பல மடங்களின் அதிபர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை.
வேளாக்குறிச்சி மட அதிபர் சைவ வெள்ளாளர் வகுப்பைச் சேர்ந்த திருமணம் செய்து இயங்கும் மடாதிபதி. இவர்களின் குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு மடத்தின் நிர்வாகத்தினை ஒப்படைப்பதை மரபாக கொண்டு இயங்குகின்றன.
வேளாக்குறிச்சி மடஆதீனத்தின் மணி விழாவை முன்னிட்டு நகர்வலம் - பல்லக்கில் மனிதனை மனிதன் சுமப்பதை - நாகை, தஞ்சை, குடந்தை, திருவாரூர், மன்னார்குடி, காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் தோழமை இயக்கங்களுடன் தடுத்து நிறுத்தி ஆதீனங்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை உண்டாக்கி திராவிடர் கழகம் எழுச்சியூட்டி உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வாழ்ந்த கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் கிள்ளை பகுதியில் கடல் நீராடுதல் எனும் பெயரால் தை மாத அமாவாசை அன்று நான்கு சக்கரங்களை பொருத்திய பல்லக்கில் பெருமாள் பொம்மையை வைத்து அதன் அருகில் 6 பார்ப்பன புரோகிதர்கள் அமர்ந்துகொண்டு 10 கூலி ஆட்கள் தள்ளிக்கொண்டு செல்வதை மரபாக வைத்திருந்தனர். பெருமாள் பொம்மையுடன் செல்வதை நான் தனியாக நின்று தடுத்து நிறுத்தி எல்லோரும் தள்ளி செல்ல வேண்டும். ஒரு பார்ப்பனரைக்கூட பல்லக்கில் வைத்து சுமக்க வேண்டாம் என்று கூறினேன்.
அதன் விளைவாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் தடுத்த செயல்பாட்டால் இன்றுவரை பெருமாள் பொம்மை கடல் நீராடல் நிகழ்வு நடப்பதே இல்லை. அப்போது இத்தகவலை ‘விடுதலை’ இதழில் வெளியிட்டுள்ளேன்.
அந்த நிகழ்வோடு, வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பட்டணப் பிரவேசத்தை நினைத்துப் பார்க்கையில் மானமும் அறிவும் ஊட்டிய அறிவாசான் தந்தை பெரியாரின் மாந்த நேய உணர்வு இன்றும் தேவைப்படுவதாக உள்ளது. திராவிடர் கழகம் ஒன்றுதான் தன்மான பெரும் இயக்கமாய் செயல்படுகிற மாட்சியைப் பாராட்ட வேண்டும். பெரியாரியம் என்றும் வெல்லும்.
- இரா.முல்லைக்கோ
பெங்களூரு
No comments:
Post a Comment