எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு தேர்வை புறக்கணித்த 21 ஆயிரம் பேர்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு தேர்வை புறக்கணித்த 21 ஆயிரம் பேர்..!

பெங்களூரு, மார்ச் 29- கருநாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. ஹிஜாப் விவகாரத்தாலும், அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் வகையிலும் தேர்வுகள் நடந்த கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் வீடுகளில் இருந்து ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆனால் தேர்வு மய்யங்களுக்குள் ஹிஜாப்பை அணிந்து செல்லவில்லை. மேலும் ஒரு சில பகுதிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

நேற்று (28.3.2022) நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு ஆஜராகினர். ஆனால் 20 ஆயிரத்து 994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. ஹிஜாப் தடை காரணமாக முஸ்லிம் மாணவிகள் பலர் தேர்வுக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. முஸ்லிம் மாணவிகள் எத்தனை பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவில்லை. சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வை புறக்கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள கே.எஸ்.டி.வி. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை நூர் பாத்திமா எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு பார்வையாளராக நியமிக்கப் பட்டிருந்தார். அவர் தேர்வுஅறையில் ஹிஜாப் அணிந்திருந்ததை அறிந்த கல்வித் துறை அதிகாரி ஹிஜாபை அகற்றிவிட்டு பணியில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார்.

அதனை ஏற்க மறுத்த நூர் பாத்திமா, ‘‘கருநாடக கல்வித் துறை மாணவிகளுக்கு மட்டுமே ஹிஜாப் அணிய கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனது ஹிஜாபை அகற்ற முடியாது'' என வாதிட்டார். இதனால் நூர் பாத்திமா தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  அடுத்த ஒரு மணி நேரத்தில், அவர் ஹிஜாப் அணிந்ததற்காக பணி இடை நீக்கம் செய்வதாக கல்வித்துறை ஆணை பிறப்பித்தது. இந்த நிகழ்வுக்கு முஸ்லிம் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment