'கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும்' என்ற கருத்தில் பெரும்பாலான இந்தியர்கள் உடன்பாடு கருத்து கணிப்பில் தகவல்
"புதுடில்லி, மார்ச் 4 - 'பியு ரிசர்ச் சென்டர்' என்ற அமைப்பு, சமூகத்திலும், வீட்டிலும் ஆண் - பெண் பங்கு குறித்து இந்தியர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியது. 29 ஆயிரத்து 999 பேரிடம் நேருக்கு நேர் கருத்து கேட்கப்பட்டது. கரோனாவுக்கு முன்பு, 2019-ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2020-ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
17 மொழிகளில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கருத்துகள் கேட்கப்பட்டன.
இதில், பெரும்பாலான இந்தியர்கள் ஆண்களை போன்றே பெண்களுக்கும் அதே உரிமைகள் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். அதே சமயத்தில், 80 சதவீதம் பேர், ஒரு சில வேலைவாய்ப்புகள் இருக்கும்போது, பெண்களைவிட ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கருத்து கூறினர்.
'கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும்' என்ற கருத்துக்கு பெரும்பாலான இந்தியர்கள் உடன்பாடு தெரிவித்தனர். ஆண்களில் 67 சதவீதம் பேரும், பெண்களில் 61 சதவீதம் பேரும் இதற்கு உடன்பட்டனர்.
இருப்பினும், பெரும்பாலான இந்தியர்கள், பெண்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொண்டிருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. குடும்பப் பொறுப்புகளை கணவனும், மனை வியும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். குடும்பத்தில் ஒரு மகனாவது இருக்க வேண்டும் என்று 94 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
பெற்றோருக்கு இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதில் மகனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று 63 சதவீதம் பேர் கூறினர்."
'கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும்' என்ற கருத்தில் பெரும்பான்மையான இந்தியர்கள் உடன்பாடு - கருத்துக் கணிப்பில் தகவல் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ('தினத்தந்தி' 4.3.2022) 'பியு ரிசர்ச் சென்டர்' என்ற அமைப்பு சமூகத்திலும், வீட்டிலும் ஆண் - பெண் பங்கு குறித்து இந்தியர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான இந்தியர்கள் ஆண்கள் போன்றே பெண்களுக்கும் அதே உரிமைகள் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.
கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்ற கருத்துக்கு பெரும்பாலான இந்தியர்கள் உடன்பாடு தெரிவித்தனர். ஆண்கள் 67 சதமும், பெண்கள் 61 சதமும் இவ்வாறு இதற்கு உடன்பட்டனர் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இந்தக் கருத்துக் கணிப்பில் முரண்பாடு இருப்பது தெளிவாகவே தெரிகிறது.
பெரும்பாலான இந்தியர்கள் ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் அதே உரிமைகள் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர் என்று ஓரிடத்தில் கூறிவிட்டு, இன்னொரு பகுதியில் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்று பெரும்பாலான இந்தியர்கள் உடன்பாடு தெரிவித்தனர் என்பது அசல் முரண்பாடு அல்லவா! அதிலும் 61 சதவீதப் பெண்கள் இவ்வாறு தெரிவித்தனர் என்பதுதான் வேடிக்கை.
கருத்துக் கணிப்பில் முரண்பாடுகள் தோன்றினாலும், பெரும்பா லானவர்களின் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்ற கருத்து - எப்படி நேர்மையானதாக மனித உரிமைக்கு ஒத்ததாக இருக்க முடியும்?
இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை இந்து மதச் சிந்தனைகளும், போக்குகளும், நடவடிக்கைகளும் பெண்கள் என்பவர்களை ஒரு பொருட்டாகவே கருதப்படுவது இல்லை.
பாலியத்தில் தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும், பருவத்தில் புருஷனின் கட்டுப்பாட்டிலும், வயோதிகத்தில் மகனின் கட்டுப் பாட்டிலும் பெண் இருக்க வேண்டுமே தவிர பெண் ஒரு போதும் தன்னிச்சையாக சிந்திக்கக் கூடாது, நடக்கக் கூடாது என்பது இந்து மத சிந்தாந்தம். எந்தக் காலத்திலோ மனுதர்மம் கூறியது என்று பலர் குறுக்குச்சால் ஓட்டக் கூடும்.
ஆனால் இன்றைக்கும் பெண்கள் பற்றிய யதார்த்த நிலைப்பாடு என்ன? இன்றைக்கு ஒன்றிய அரசாக இருக்கக் கூடிய பிஜேபியின் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸின் தலைவரான மோகன் பாகவத் பச்சையாகவே சொல்லுகிறார்.
"ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்து அதிகம் ஊதியம் ஈட்டுகிறார்கள். ஆண்களுக்குக் கட்டுப்பட மறுக்கிறார்கள் - அந்த நிலையில் திருமணத்தை ரத்து செய்துவிட வேண்டும்" என்று கூறவில்லையா?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா என்ன சொன்னார். 'பெண்கள் வீட்டு வேலைக்குப் போக வேண்டும்' என்று வெளிப்படையாகவே கூறவில்லையா?
இப்படியொரு இந்து சமூக அமைப்பில் பெண்களுக்குக் கல்வி என்பதை நினைத்துப் பார்க்கவே கடினமானதே!
தென்னாட்டைப் பொறுத்தவரை, திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியார் எழுச்சி காரணமாக பெண் கல்வி பெரு வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தியா முழுவதும் 'பியு ரிசர்ச் சென்டர்' கணக்கெடுத்திருந்ததால் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கு ஆதரவு அதிகமாகத் தோன்றலாம்.
தென்னாட்டில் அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அப்படியொரு கணக்கை எடுத்திருந்தால் புள்ளி விவரம் தலை கீழாகவே இருக்கும். காரணம் இது திராவிடர் மண் - பெரியார் மண்ணே!
No comments:
Post a Comment