ஈரோடு தமிழன்பன் அமெரிக்காவில் விருது பெறவிருக்கிறார்! ஈரோட்டுக்காரர் - உரிமை, உறவுள்ளவரான அவருக்கு பாராட்டு விழாவினை திராவிடர் கழகம் நடத்தும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

ஈரோடு தமிழன்பன் அமெரிக்காவில் விருது பெறவிருக்கிறார்! ஈரோட்டுக்காரர் - உரிமை, உறவுள்ளவரான அவருக்கு பாராட்டு விழாவினை திராவிடர் கழகம் நடத்தும்!

வடசென்னை தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிவிப்பு

சென்னை, மார்ச் 6 அமெரிக்காவில் ஈரோடு தமிழன்பன் விருது வாங்கவிருக்கிறார். அதற்காகப் பாராட்டு விழாவினை பெருந்திரள் கூட்டத்தினைக் கூட்டி, திராவிடர் கழகம் அவருக்கு உரிய பாராட்டை நடத்தும். ஏனென்றால், அவர் ஈரோட்டுக்காரர்  - உரிமை உள்ளவர் -  உறவு உள்ளவர். எனவேதான், உறவும், உரிமையும் போட்டி போடுகின்ற இடத்தில் அவரைப் பாராட்டி பெருமை செய்யவேண்டியது எங்களுடைய கடமை என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வடசென்னை தமிழ்ச்சங்கம் நடத்திய

சென்னை இலக்கிய சந்திப்பு - பாராட்டு விழா!

கடந்த 26.2.2022 அன்று மாலை 6.30 மணிக்கு வடசென்னை தமிழ்ச் சங்கம் நடத்திய சென்னை இலக்கிய சந்திப்புக் கூட்டத்தில்  கலைஞர் செம்மொழி விருது, உலகத் தமிழ்ப்பீட விருது மற்றும் மகாகவி விருதாளர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்குப் நடைபெற்ற பாராட்டு விழாவில் காணொலிமூலம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

விருதுகளைப்பற்றி இந்த விழுதுகள் கவலைப்பட்டதில்லை

இவற்றுக்கெல்லாம் உரியவர்களை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய அளவிற்கு, உரியவர்களிடம் ஆட்சி இருக்கவேண்டும். அந்த மாட்சி இப்பொழுது இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு இருக்கிறார்கள், இவ்வளவு காலந்தாழ்ந்தாவது கிடைத்துள்ளது நமக்கு மகிழ்ச் சியே! இந்த விருதுகள் எப்பொழுதுதோ அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும். ஆனால், விருதுகளைப் பற்றி இந்த விழுதுகள் கவலைப்பட்டதில்லை.

விருதுகளைப்பற்றி கவலைப்படாத விழுதுகள் தான், தனித்தனி ஆலமரங்களாக இன்றைக்கு உயர்ந்து நிற்கின்றன. ஏராளமான விருதுகளைப் பெற்று விழுதுகள் இருக்கின்ற நிலை. அதுவும் பழுதில்லாத விழுதுகள்.

இதில் நான் எத்தனையோ செய்திகளைப் படித்துப் படித்து சுவைத்திருக்கிறேன்

இது  நான்காவது முறை -   இந்த முறை அவர் பேசு வதைப்பற்றி  சொல்லும்பொழுது என்னை இன்னொரு முறை புதுப்பித்துக் கொள்வேன்.

அந்த படிப்பதை தொடர்வதினால் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.

திரும்பத் திரும்ப படிப்பதன் காரணம்என்ன? நவில்தொறும் நூல்நயம் போலும்

அவர் பயில்தொறும் பண்புடையாளர்.

"சிற்றுண்டி முடிந்தது ஒருவாறு. அவரைத் தேடி தமிழார்வலர்கள் வருவதற்குமுன், அவரைப்பற்றி ஒரு கவிதை எழுதி, அவர் பார்வைக்குப் படைத்தேன்." என்கிறார்.

தாட்சண்யத்திற்குக் கட்டுப்பட்டவர் அல்ல;

ஆனால், அவர் அன்பிற்கு உடன்பட்டவர்

அந்த ஒரு கவிதையை எடுத்துப் படிக்கவேண்டும். ஏனென்றால்,  இந்தக் கவிதைகளையெல்லாம் நாம் விளம்பரப்படுத்தவேண்டும்; நம்மவர்களை நாம் பாராட்டவேண்டும். பாராட்டுவதில் மட்டும் பஞ்சம் இருக்கக்கூடாது; தமிழர்களுக்கு இதில் பஞ்ச புத்தி உண்டு.

எளிதில் இன்னொருவரை பாராட்ட மாட்டார்கள்; மற்றவர்கள் பாராட்டுவதையும் சகிக்க மாட்டார்கள்.

இந்த இனம் ஏன் வீழ்ந்தது? இந்த இனம் ஏன் தாழ்ந்தது? என்பதற்கு அது ஓர் அடையாளம்.

இதற்குத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை நான் எடுத்துக் காட்டினேன்.

இந்த விருதுகளுக்கு என்ன காரணம்? என்ன அடிப்படை? எதை வைத்துக்கொண்டு தேர்ந்தெடுத் தார்கள் என்று சொன்னால், புரட்சிக்கவிஞரைப்பற்றி, நன்கு புரிந்து அவர் வழி வந்தவர்.

புரட்சிக் கவிஞர் தாட்சண்யத்திற்குக் கட்டுப்பட்ட வர் அல்ல; ஆனால், அவர் அன்பிற்கு உடன்பட்டவர். அதற்கு எத்தனையோ சம்பவங்கள் உண்டு.

அண்ணா அவர்கள் எழுதிய தலையங்கமும் - அய்யா அவர்களின் பாராட்டும்!

அறிஞர் அண்ணா அவர்கள்விடுதலை' ஆசிரிய ராக  ஈரோட்டில் பணியாற்றினார்.‘ விடுதலை'யில் ஒரு தலையங்கம் எழுதுகிறார்.

எதைப்பற்றி என்றால், ரிப்பன் மாளிகையின் பிரபுக்களைப்பற்றியது.

அண்ணா அவர்கள் மாடியில் படுத்து இருக்கிறார். ‘விடுதலை' மாலையில் வெளிவந்தவுடன், தந்தை பெரியார் அவர்கள் அந்தத் தலையங்கத்தை வரி வரியாகப் படித்தார்.

அண்ணா அவர்கள் இரவு  நேரத்தில் நீண்ட நேரம் பணியாற்றுவார். விடிய விடிய பணியாற்றுவார். உதய சூரியனை அவர் எளிதாகப் பார்க்காதவர். ஆகவே தான், சின்னத்திலேயே உதயசூரியனை வைத்து விட்டார்.

விடிய விடிய எழுதிக்கொண்டே இருப்பார்; அப்படி பணியாற்றிவிட்டு, அண்ணா அவர்கள் அசந்து போய் விடியற்காலை 4 அல்லது 5 மணிக்குத் தான் தூங்குவார்; அன்றைக்கும் அதுபோன்று அண்ணா அவர்கள் மாடியில் தூங்கிக் கொண்டி ருந்தார்.

அந்தத் தலையங்கத்தைப் படித்த அய்யா, அண்ணாவைத் தேடி, மாடியில் தடுமாறி ஏறிச் சென்று அண்ணாவைப் பார்க்கிறார்.

அய்யாவைப் பார்த்த அண்ணா அவர்கள், பதறிப் போய், ஏதோ முக்கியமான செய்தி போல இருக்கு என்று, ''என்னங்க அய்யா?'' என்று கேட்கிறார்.

''விடுதலையில் தலையங்கத்தை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அண்ணாதுரை. அதற்காகப் பாராட்டவேண்டும் என்று வந்தேன்'' என்று அய்யா சொல்கிறார்.

"அய்யா, நான் கீழே வந்தவுடன் நீங்கள் என்னைப் பாராட்டியிருக்கலாமே? அதற்காக நீங்கள் இவ்வளவு சங்கடப்பட்டு மாடி ஏறி வரவேண்டுமா?''  என்று அண்ணா அவர்கள் அன்போடு கேட்கிறார்.

ஈரோட்டுப் பாடங்கள் என்றைக்கும், எப்பொழுதும், எல்லோருக்கும் சரியான பாடம்!

அப்பொழுது ஒன்றை சொல்கிறார் அய்யா அவர்கள்.

இது எல்லோருக்கும் ஒரு பாடமாகும். எப்பொழு தும் ஈரோட்டுப் பாடங்கள் என்றைக்கும், எப்பொழு தும், எல்லோருக்கும் சரியானபாடமாக இருக்கும்.

அய்யா சொல்கிறார்,

''அப்படி இல்லீங்க, பாராட்டவேண்டும் என்று நினைத்தால், உடனே பாராட்டிவிடவேண்டும்; தாமதிக்கவே கூடாது; காரணம், பாராட்டுபவர்களுக்கு புத்தி மாறிவிடும்'' என்கிறார்.

எனவே, அப்படிப்பட்டவர்களுடைய பாராட்டை இவர் பெற்றிருக்கிறார் என்பதுதான் பெருமை.

ஒரு ஆசானுக்கு என்ன பெருமை என்றால், தன்னுடைய மாணவன் உலகப் புகழ் பெறுகிறான் என்பதுதான்.

ஒரே ஒருவர்தான் மகாகவி என்று கிடையாது; உயர்ந்த தகுதியைப் பெறக்கூடியவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்

நம்முடைய கவிஞர் அவர்கள், மகாகவி அவர்கள் - ஒரே ஒருவர்தான் மகாகவி என்று கிடையாது. உயர்ந்த தகுதியைப் பெறக்கூடியவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்; இந்த இனத்திலே இருக்கிறார்கள்; பக்குவப்பட்டவர்கள் இருக்கிறார்கள்; பண்பட்ட வர்கள் இருக்கிறார்கள்; பாராட்டப்படவேண்டிய வர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய நிலை யில் நாம் வளரவேண்டும். அதற்கு அடையாளம்தான் இந்த விழா!

இந்த விழா எடுத்தவர்களை மிகப்பெரிய அள விற்குப் பாராட்டவேண்டும்.

"கோடை அகற்றும் குளிர் மழை முகிலே

வாடை விரட்டும் வசந்தத் தென்றலே

இருட்டை வெளுக்கும் எழுச்சிக் கதிரே

குருட்டு மனம் திறக்கும் கவிதைக் குறடே

மடமை மார்பு துளைக்கும் கூர் ஈட்டியே

கடமை வழிகாட்டும் கலங்கரை விளக்கே

ஜாதித் தலைக்கொரு சம்மட்டியே!

நல்ல நீதி வழிக்கு நேரில் துணையே!

மக்கள் நெஞ்சில் மாத்தமிழ் வெறியை

மிக்கெழச் செய்யும் கவிக்கள் விருந்தே

நெஞ்சிற் பட்டதை நிமிர்ந்து  நின்றே

அஞ்சாது முழங்கும் ஆண்மை முரசே!

தண்டமிழ் ஆளாது தனக்குயிர் வேறிலா

கண்ணிகர் புலவா,  கவிதைக் காதலா

பார் புகழ் பாக்கோ பாரதி தாச...

நின் சீரடி தொடரும் சிறியேன்

நெஞ்சில் நிறைந்த மகிழ்வை யெல்லாம்

எஞ்சாதிக் கவி மடலில் சேர்க்க முயன்றேன்

முடியா துளமும் உடைந்தேன்

வயல்தமிழ் தன்னில் வான்கவிப்

பயிரை வளர்க்கும் உழவ

மாண்தமிழ் கவிஞ

இளையவன் நின் கீழ்க்கன்றே

என் மனம் முளைத்து ஆவலில்

முகையவிழ் மலர்களாம்

மணக்கும் வாழ்த்தெலாம்

வாரிப் பொழிந்தேன்.

கணக்கிலா ஆண்டுகள் கவிப்பணி ஆற்றி

பல்வளம் பெற்றே

இன்புறுவாய்

இன்பத் தமிழ்போல!"

இது அவர் தன்னுடைய ஆசானுக்கு - புரட்சிக் கவிஞருக்கு எழுதியது.

புரட்சிக்கவிஞருக்கு, அவர் சூட்டிய

மாலையை - அவருக்கே சூட்டுகிறோம்!

இதே வரிகளை அவருக்கு இன்றைக்கு சூட்டி நாம் வாழ்த்துகிறோம்.

நம்மால் கவிதை எழுத முடியாது. ஆனால், அவர் எழுதிய கவிதையை அவருக்கே மாலையாகச் சூட்டி - இந்தக் கவிதை, அவருடைய ஆசானுக்குச் சூட்டப்பட்ட மாலை - அதை இவருடைய கழுத்திலே, அதை மாலையாக எடுத்து சூட்டினால், இது ஒரு புதுமை - இது ஒரு புத்தாக்கம்.

இந்தப் புத்தாக்கத்திற்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி!

பல விருதுகள் அவரை நோக்கி வரட்டும்!

ஈரோட்டுக்காரர்  - உரிமை உள்ளவர் - 

உறவு உள்ளவர்

அமெரிக்காவில் அவர் விருது வாங்கவிருக்கிறார். அதற்காகப் பாராட்டு விழாவினை பெருந்திரள் கூட்டத்தினைக் கூட்டி, திராவிடர் கழகம் அவருக்கு உரிய பாராட்டைச் செய்யும் ஏனென்றால், அவர் ஈரோட்டுக்காரர்  - உரிமை உள்ளவர் -  உறவு உள்ளவர்.

எனவேதான், உறவும், உரிமையும் போட்டி போடுகின்ற இடத்தில் அவரைப் பாராட்டி பெருமை செய்யவேண்டியது எங்களுடைய கடமை.

அந்த வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, மற்றவர்களுக்கும் வழி விடுவதற்காக என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

வாழ்க அவர் உடல்நலத்தோடு பல்லாண்டு, பல்லாண்டு!

நன்றி,

வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்  வாழ்த்துரை யாற்றினார்.

No comments:

Post a Comment