சென்னை, மார்ச் 6 மோஷன் டெக்னாலஜி நிறுவனமான போர்டெஸ்கேப்புடன் இணைந்து, சென்னை அய்.அய்.டி. ரோபோடிக்ஸ் மூலம் மறுவாழ்வுக்கான மருத்துவ கண்டுபிடிப்புகளை உருவாக்க இருக்கிறது. இந்த சமூக பொறுப்புணர்வு நிதி திட்டம் வேலூரில் உள்ள முதன்மை மருத்துவக் கல்வி நிறுவனமான கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியையும் உள்ளடக்கியது ஆகும்.
இதன் மூலம் கை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு புதுமையான அரிபோ’ என்ற மறுவாழ்வு ரோபோவை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த ரோபோ பக்கவாதம், மூட்டுவலி, பெரு மூளைவாதம் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் மற்றும் தசைக்கூட்டு நிலையில் உள்ளவர்களுக்கு தோள்பட்டை, முழங்கையில் மூட்டு இயக்கத்தை ரோபோ பயிற்றுவிக்கும்.
சென்னை அய்.அய்.டி.யின் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டி.டி.கே. மய்யத்தின் தலைமை பேராசிரியை சுஜாதா சீனிவாசன், வேலூர் சி.எம்.சி.யின் பேராசிரியர் சிவகுமார் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்படும் இந்த கண்டுபிடிப்புகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்.
இதேபோல், போர்டெஸ்கேப் நிறுவனத்தின் நிதியுதவியுடன், சென்னை அய்.அய்.டி.யும், கொல்கத்தாவில் உள்ள நியூரோசயின்ஸ் நிறுவனமும் இணைந்து மற்றொரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அது பக்கவாதம் மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் காயமடைந்த நோயாளிகளின் நடைபயிற்சிக்கான கீழ்மூட்டின் வெளிப்புற எலும்புக்கூடு உருவாக்கும் திட்டம் ஆகும்.
மேற்கண்ட தகவல் சென்னை அய்.அய்.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகாசியில் சூரிய மின்சக்தியில் இயங்கும்
சிறுதானிய சுத்திகரிப்பு நிலையம்
சிவகாசி, மார்ச் 6 நாட்டிலேயே முதல்முறையாக முற்றிலும் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் சிறுதானிய சுத்திகரிப்பு நிலையம் சிவகாசி அருகே அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சிறுகுறு நிறுவனங் களை ஒருங்கிணைத்தல் திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபெருள் (ஓடிஓபி) என்ற அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்துக்கு சிறுதானியங்கள் (குதிரைவாலி, தினை, சாமை, வரகு, கம்பு, வெள்ளை சோளம்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக முதல் நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டு நிலையத்தை அமைக்க 35 சதவீத மானியத்தை (அதிகபட்சமாக ரூ.10 லட்சம்) ஒன்றிய அரசு வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் சிறுதா னியங்களை விளைவிக்கும் அதே இடத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய முடியும். இதற்காக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையால் பயிற்சி பெற்ற அல்லது தமிழ் நாடு ஊரக மேம்பாட்டுத் திட் டத்தில் பயிற்சிபெற்ற விவசாய தொழில் முனைவோருக்கு சிறுதானிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகே உள்ள கள்ளிப்பட்டி கிராமத்தில் இந்திரா என்ற விவசாயி சிறுதானிய சுத்தி கரிப்பு நிலையத்தை ரூ.5.5 லட்சம் செலவில் அமைத் துள்ளார். இங்கு உள்ள இயந்திரங்கள் அனைத்தும் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
6 மணி 40 நிமிடங்களில்
வைகை எக்ஸ்பிரஸ் சென்னை வருகை
சென்னை, மார்ச் 6 நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டு, 6 மணி 40 நிமிடங்களில் மதுரையிலிருந்து சென்னை வந்தடைந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சாதனை படைத்து உள்ளது.
மதுரையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் வைகை எக்ஸ்பிரஸ் (சூப்பர்பாஸ்ட்) ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், மதுரையிலிருந்து 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக 27 நிமிடங்கள் முன்பாகவே சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்து உள்ளது. வழக்கமாக மதுரை-சென்னை இடையேயான 493 கிலோ மீட்டர் தொலைவை, 7 மணி 25 நிமிடங்களில் கடந்து வந்த நிலையில், 6 மணி 40 நிமிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டும், குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டும், சிக்னல்களில் நின்று அனுமதி கிடைத்த பின்பே இயக்கப்படும் சூழலில் குறைந்த மணிநேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தடைந்து சாதனை படைத்து உள்ளது.
No comments:
Post a Comment