பெரியாரின் பன்முக ஆளுமை கலையும்-பெரியாரும்! பேரா.மு.இராமசாமி
சில நாட்களுக்கு முன் பெரியார் திடலில் மே பதினேழு இயக்க நிறுவனர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் என்னைச் சந்தித்து, நீட் தேர்வு ஒழிப்பு, மத்திய கல்விக் கொள்கை, மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவை பற்றி தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்றியமையா பரப்புரைப் பயணம் பற்றி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்ததோடு, அவ்வியக்கத்தின் சார்பில் ‘நிமிர்’ வெளியீட்டகம் - புத்தகங்களை பரப்பும் அமைப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி, அதனைத் திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதன் வெளியீடுகளாக தந்தை பெரியாரின் 142ஆவது ஆண்டு பிறந்தநாளை ஒட்டி பல அறிஞர் பெருமக்களது உரைகள் தனித்தனி சிறு வெளியீடாக நேர்த்தியாக அச்சிப்பட்ட, மலிவுவிலை நூல்களை தந்தார். சில நாள்களில் பெரிதும் படித்தேன் - சுவைத்தேன்.
தந்தை பெரியார் பற்றி, பல்துறை அறிஞர்கள் பல தலைப்புகளில் பேசியவர்களின் நூல்கள் மிகப்பெரிய அறிவு வரைவுகளாக மிளிர்கின்றன.
‘கலகக்காரர் பெரியார்’ என்ற நாடகம் நடத்தி, பெரியாரின் சிந்தனைகளை ஒரு சிறப்பான புத்தாக்கமாக காட்டிய பேராசிரியர் மு.இராமசாமி அவர்கள் ஆற்றிய அற்புதமான 29 பக்க உரை புது வெளிச்சம் பாய்ச்சுவதாக உள்ளது.
அதனை நமது வாசகப் பெருமக்கள் ஆழ்ந்து படித்து கற்கவேண்டும் என்ற அவாவுடன் அதனை இந்தப் பகுதியில் ஒரு அறிவு விருந்துத் தொடர் என்ற புதிய பகுதியாக வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
பெரியார் தமிழுக்கு செய்த, கலைக்குச் செய்த அருந்தொண்டுகளை சிந்தனைச் செல்வர், பேராசிரியர் மு.இராமசாமி அவர்கள் அருமையாக ஆவணப்படுத்தி உள்ளார்.
- கி.வீரமணி (ஆசிரியர்)
பெரியாரைக் கடவுளை மறுக்கும் ஒரு ‘பூச்சாண்டி’ என்பதாயும், கலை இலக்கியங்கள் அவருக்கு வேப்பங்காய் என்பதாயும், தமிழ் அவருக்குப் பாகற்காய் என்பதாயும் அவரின் எதிரிகள் - அதனாலேயே நமக்கும் எதிரியானவர்கள், நம் காதில் தொடர்ந்து பூச்சுற்றி, அவரைத் தவறாகச் சித்திரப்படுத்திக் கொண்டிருக்கையில், பெரியாரைக் கலையுடன் இயைபுபடுத்தி, அவரை எளிமையாக விளக்குவதாயிருந்தால், அவர்களுக்கு எப்படிச் சொன்னால் சரியாயிருக்கும்? அல்லது நாடகக்காரனாகிய நான் எப்படிப் பெரியாரைப் புரிந்து வைத்திருக்கிறேன், மற்றவர்களிடம் என் துறை சார்ந்து அவரை விளக்குவதற்கு?- என்கிற சிந்தனை மட்டுமே இந்தப் பகிர்தலின் அடிப்படை!
‘தானாக எவரும் பிறக்கவில்லை;
எனவே தனக்காகவும் பிறக்கவில்லை’
பெரியார் என்கிற அடர்த்தியின் நேர்த்தி, எதைக் குறிக்கிறதென்றால், மனிதத்தை மட்டுமே மிகவும் தூய்மையாக நேசித்து, எதுவொன்றையும் அதன் சமூகப் பயன் கருதியே உச்சி முகர்ந்து, சொல்லுக்கும் செயலுக்கும் இழைகூட இடைவெளியின்றி, உண்மைக்கும் உலக வாழ்விற்கும் திரையெதுவும் போடாது, பகுத்தறிவுக்கு மட்டுமே பக்கத்தில் இடமளித்து, ‘தானாக எவரும் பிறக்கவில்லை; எனவே தனக்காகவும் பிறக்கவில்லை’ என்று, குடலிறக்க நோயால் அவதிப்பட்டபோதும், மூத்திரச் சட்டியைத் தூக்கிச் சுமந்தபடியே, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குத் தன் மூப்பிலும் தன்னை முழுவ துமாய் ஒப்புக் கொடுத்திருந்து, சமூக வாழ்க்கைக்கு, சுயமரியாதை என்று புதிய உரை சொன்ன, ஒரு சமூக ஞானி - மனித மாண்பு என்பதன் குணவடிவாய், அவரின் சித்திரத்தை வார்த்தைகளுக்குள் அடக்கிப் பார்த்தால், போதாமையில் நான்தான் குறுகிப் போகிறேன்! காரல் மார்க்ஸ், நமக்குள் வசப்பட்டிருந்தால், உலகத்தையே எதிர்கொண்டு நிற்க முடியும் என்பதுபோல், பெரியார் நமக்குள் வசப்பட்டிருந்தால், சனாதனத் தீண்டாமையால் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிற இந்திய ஒன்றியத்தையே வீரியமுடன் தானாக எதிர் கொள்ள முடியும்! சம்பூக அலறலின் போர்ப்பறை அது! இரணியத் துடிப்பின் கொட்டுமுரசம் அது! ஒடுக்கப்பட்டிருக்கிற மனிதருக்கான ஊன்றுகோலாயிருக்கிற, காரல் மார்க்ஸின் தத்துவத்தோடு, அம்பேத்கரின் அனுசரணையோடு, சூத்திர இழிவு நீக்கும் போர்ப்படைத் தளபதியாய், தமிழ் மண்ணில் தன் இயக்கத்திற்கு விதை போட்டவர் பெரியார்!
நெருங்கவே முடியாத நெருப்பாயிருக்கிறார் பெரியார்! - நெருப்பாயிருக்கிறது அவரின் பெரியாரியல்!
‘பெரியார்’ என்கிற ஒற்றைச் சொல், ‘இந்தியா, இந்தி, இந்து என்கிற ஒற்றை அதிகார மூர்க்கங்களுக்கு எதிராய், இந்த மண்ணில் இன்றுவரையும் களமாடிக் கொண்டிருக்கிற, சமூகநீதிச் சிந்தனையின் ஒரு நூற்றாண்டுக் காலப் போர்ப்பறை உறுமலின், ஓர் எளிய, சமூக வரலாற்று வரிவடிவம் அது’ என்று சொன்னால் சரியாயிருக்குமா? எதுவொன்றுக்கும் அவர் கைக்கொண்டிருந்த அவரின் ஒற்றை அளவுகோல் என்பது, சமூக மேம்பாட்டை நோக்கிய, பாகுபாடுகளுக்கு எதிரான - ஆதிக்கங்களுக்கு எதிரான - சனநாயக சமூக நீதி என்பதாய்ச் சொன்னால் அவருக்கு நியாயம் செய்ததாகுமா? இதில் ஏற்படுகிற ‘ஓய்வும் சலிப்பும் தற்கொலைக்குச் சமம்’ என்று பொதுவாழ்க்கையில் ஈடுபட வருகிற இளைஞர்களுக்கு அவர் போதிக்கிற சமூக அறம், எளிதில் பேசிக் கடந்துபோய்விடவும் கூடிய ஒன்றா? சனநாயக சமூக நீதிக்கு எதிராக நிற்கிற, பன்மைத்துவத்தின் பாதுகாப்பைத் தடுக்கிற, எல்லாவகைச் சனாதனங்களையும் பெரியாரின் கைத்தடி நிர்த்தாட்சண்யமின்றிக் கைவாளாய்ச் சுழன்றடித்தது! எடுத்துச் சுழட்ட நினைக்கிற மற்றவர்களுக்கும் துருப்பிடிக்காத போர்வாளாய் இன்னமும் பயன்பட்டு வருவது அது! அதனால்தான், இன்னமும் சனாதனம் நெருங்கவே முடியாத நெருப்பாயிருக்கிறார் அவர்! - நெருப்பாயிருக்கிறது அவரின் பெரியாரியல்! நூறாண்டுகளாய்க் களத்தில் அயராமல் குத்துவரிசை போட்டு, நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது பெரியாரியம்!
பெரியாரியலின் ஆய்வு முறைமை
மிகவும் எளிமையானது
சமூகம், சாத்திரம், கலை இலக்கியம், அரசியல், நீதி, நிர்வாகம், பண்பாடென்று அனைத்திலும் ‘நீறு’பூத்தத் தகிப்பாய் அப்பிக் கிடக்கிற ‘மனு’விற்கு எதிராய், அதை ‘நீரு’ ஊற்றித் தணிக்கக் கிளம்பிய ‘தனு’தான் பெரியாரியம்! இதுவே இந்திய தேசியத்திற்கெதிரான திராவிட இனத் தேசியமாகவும், மொழி சார்ந்து, தமிழ்த் தேசியமாகவும், அது, தன்னளவில் விரிந்து பொருள் தருகிறது. அந்த வகையில், ஆழ்ந்து பார்த்தால், பெரியாரியலின் ஆய்வு முறைமை மிகவும் எளிமையானது; எதையும் நிறுத்துப் பார்க்க அவர் வைத்திருக்கும் ‘சமநீதி’ என்கிற எடைக்கற்கள்தான் அவரின் அளவு கோல்கள்! ஆனால், அதைக் கொண்டுசெலுத்துவதற்கான பயணம், மிக மிகக் கடுமையானது! ஒரு சமூக ஊழியக்காரனாகவே, இந்தத் தமிழ்ச் சமூகத்திற்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தான் ஊழியம் செய்வதற்கான ’பிரதி’யை, இந்தத் தமிழ்ச் சமூகத்திற்குள்ளிருந்தே தேடி எடுத்து, சுயமரியாதை அறிவுப் பார்வையில், அதைச் சுயமாகப் பொருள் புரிந்து வாசித்திருக்கிறார்.
பெரியாரின் முதன்மைப் பணி!
ஆய்வில் துறைபோய ஒருவரின் அறிவியல்பூர்வ, முறையான, தேவையான அடிவைப்பாயிருக்கிறது அவரின் ஊழியப் பிரகடனம்! யார் இவர் என்று இவரின் முகவரி கேட்பவர்களுக்கு, ஆய்வு நெறிமுறைமையின் அடிப்படையில், ‘என்ன செய்கிறேன், எதற்குச் செய்கிறேன், எப்படிச் செய்கிறேன்’ என்பதாய்த் தன்னை அறிவியல்பூர்வமாய் வெளிப்படுத்தி, தன் தத்துவச் செயல்பாட்டிற்கு, ஒரு வடிவம் கொடுக்கிறார் அவர்! அவர் இப்படிச் சொல்கிறார்:-
“ஈ.வெ. ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகிலுள்ள பிற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அந்தப் பணியாய் இருந்து வருபவன்.”
இதுதான் அவரின் முதன்மைப் பணி! இதைச் செய்வதற்குத் தடையாய் நிற்கிற எதுவொன்றையும், மடமையென குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறிகிறார் அவர்; புனிதம் - அபுனிதம் எதுவும் அவருக்கில்லை. அதை இல்லாதொழிக்கிற ஒரு பணியையே அவர் தன்னின் அணியாய்ப் பூண்டு மகிழ்கிறார்.
“இதைச் செய்ய, வேறு யாரும் முன்வராத காரணத்தால், இதைத் தவிர வேறு ஒரு பற்றும் எனக்கில்லையாதலால், அந்தப் பணியை என்மேற் போட்டுக்கொண்டு, அந்தப் பணியாகவே இருந்து வருபவன்” என்கிறார். இறைப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்றுபோல் அவருக்கிருந்தது அள்ள அள்ளக் குறையாத சமூகப்பற்று! “இதைத் தவிர வேறொரு பற்றும் எனக்கில்லை.”
என்பதன் பின்னிருக்கிற எளிமையும் அழுத்தமும் தீர்க்கமும் வேலைத் திட்டமும், அவைகொண்டு ஒளிர்கிற அவரின் மொழிப் பிரயோகமும், ‘ஒரு சோறு’ பதக் கணக்காய், ‘நாகம்மையார் மறைவு அறிக்கை’ போலவே, ‘பற்று’ என்கிற தேர்ந்த மொழிப்பெய்வும், அவரை மிகச் சிறந்த எழுத்துப் படைப்பாளியாக அடையாளப்படுத்திச் செல்கிறது. ‘பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்ட கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்துள்ளதால், நான் அத்தொண்டுக்குத் தகுதியுடையவன் என்றும், சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு அதுபோதும் என்றுமே கருதுகிறேன்’ என்று தன்னை அதற்குத் தகுதிப்படுத்தியவராகவே, சமூகக் களத்தில் தன் நிலையை-தன் தகுதியை அறிவித்துக் கொள்கிறார்.
ஒரு சமூகத் தேனீயாயிருக்கிறார், சுயமரியாதை-சமதர்மப் பெரியார்!
புராண, இதிகாச, வேதக் கருத்தியல் தளங்களுக்கு எதிரான பொருள்முதற் தளமான அறிவியலின் பக்கம், அசையாமல் நிற்கிறார். எவ்வளவு எளிமையாக, தெளிவாக இருக்கிறது அவரின் பிரகடனம்! தன்னின் பணி பற்றி, மிகத் தெளிவாக எடை போட்டு, அதற்கேற்ப உறுதியான அடி வைத்திருக்கிறார்; அதற்கேற்பவே தடி எடுத்திருக்கிறார்; இதுதான் எனது பணி - இது மட்டுமேதான் என் பணி என்பதில் பிசகில்லாமல், இறுதிவரையும் எதிர்ப்பலையில் புடம்போட்டே, தன்னைப் பொலிவுபடுத்தியிருக்கிறார். இதற்குத் தடையாய் நிற்கிற அத்தனை இழிவுகளையும் தகர்த்தெறிய, ஏதென்ஸ் தெருக்களிலே முழங்கித் திரிந்த ஒரு சாக்ரடீஸ் போல, தமிழகத் தெருக்களிலே பகுத்தறிவிற்கும் சுயமரியாதைக்குமாய், சமநீதிக்கும் சமூகநீதிக்குமாய்ப் பம்பரமாய்ச் சுழன்று திரிந்த, ஒரு சமூகத் தேனீயாயிருக்கிறார், சுயமரியாதை-சமதர்மப் பெரியார்!
அவரின் இந்த அணுகுமுறைதான் கலை இலக்கியங்களின் பக்கமும் நீளுகிறது. கலை இலக்கியங்கள் படைப்பாளியின் உள்ளொளித் தூண்டலால் கிளர்ந்தெழுந்தபோதும், அவை மனிதகுல வளர்ச்சிக்கானதாய், பாகுபாட்டைத் தகர்த்தெறிய வழிசமைக்கும் வாகடமாய், சுயமரியாதையை, இன மானத்தைக் காக்கக் கூடியதாய், அதன் படையணியாய் விளங்க வேண்டும் என்பதே, அவரின் மிகு விருப்பாய் இருக்கிறது. மனிதத்திற்கு - சமநீதிக்கு முரண்பட்டு மொழி நின்றாலும், கலை இலக்கியம் நின்றாலும், மதம் நின்றாலும், மகேசனே நின்றாலும் அனைத்தையும் விமரிசன பூர்வமாய்த் தூக்கி எறிந்து, மனிதத்துவத்தின் பக்கமே நிற்கிறார் பெரியார்! மனிதன் பகுத்தறிவுடன் முரண்படும்போது, பகுத்தறிவின் பக்கமே ‘கருத்தாளி’யாய் நிற்று சுயமாகச் சிந்திக்கச் சொல்கிறார் - அவர் தான் பெரியார்! கலையின் வரலாறு, மனித குலத்தின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து வருவது! இலக்கியத்தின் வரலாறும், அதையொட்டித் தடம்பிடித்தே, அதன்போக்கில் வருவது! இந்த வரலாற்றுக் கணக்கின் நெடும்போக்கில், இருபதாம் நூற்றாண்டின் ஒரு இடைப்பட்ட புள்ளியிலிருந்து, விளிம்பின் தகிப்பிலிருந்து புறப்பட்ட, ஒரு கலகக் குரலாய் நிமிர்ந்து நிற்கிறார் பெரியார் - அவரின் திராவிட இயக்கம்! இங்கு, மொழி-இலக்கியம்- கலை அனைத்தும், பக்குவமாய்ப் பார்ப்பன மனுதர்மப் பாகுபாட்டுக் கருத்தியலின்கீழ், அவர்கள் வகுத்த அழகியலின்கீழ் கொண்டு செலுத்தப்பட்டிருக்கின்றன என்பதைத் தமிழ்ச் சமூகத்துக்குத் தமுக்கடித்துப் பிரகடனப் படுத்தக் கூடியவராயிருக்கிறார் அவர்!
பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பன்னிரு பாட்டியல்’ - இலக்கண நூல்!
தமிழ் மொழியின் வரிவடிவ எழுத்துகள், என்ன பாவம் செய்தன மனுதர்மத்துக்கு? நால்வகை வருணப் பாகுபாட்டிற்குள் அதையும் கொண்டு நிறுத்தியிருந்தது, பார்ப்பனிய மேலாண்மைக் கருத்தியல்-அதன் அரசியல்! உயிரெழுத்துகள் அனைத்தையும், ‘அவாள்’களுக்கே ஒதுக்கிக் கொண்டது - மனுதர்மச் சூழ்ச்சியின் - குலக்கல்வியின் - இன்றைய மறுவடிவான, ‘பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு’ போல! இதை நான் சொல்லவில்லை, பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பன்னிரு பாட்டியல்’ - இலக்கண நூல் சொல்கிறது!
‘நறுமலர்த் திசைமுக னீச னாரண னறுமுகன் படைத்தன வந்தணர் சாதி - அவை, அகர முதற் பன்னீருயிரும், க, ங, ச, ஞ, ட, ண’ உம் (நூற்பா.6);
‘இந்திரன் வெங்கதிர் சந்திரன் படைத்தன துன்னருஞ் சிறப்பின் மன்னவர் சாதி - அவை த, ந, ப, ம, ய, ர’ உம் (நூற்பா.8);
‘திருமிகு நிதிக்கோன் வருணன் படைத்தன வணிமிகு சிறப்பின் வணிகர் சாதி - அவை வ, ல, ற, ன’ உம் (நூற்பா.10);
‘கூற்றுவன் படைத்தன கூற்றென விரண்டு மேத்திய மரபிற் சூத்திரர் சாதி- அவை ழ, ள’ உம் (நூற்பா.12);
‘எம’னிடமிருந்து நமக்கு வந்து சேர்ந்தவை ‘ழ’வும் ‘ள’ உம்! உயிர்மெய் போல வொற்றுமிம் முறைபெறும்’(நூற்பா.15)
இப்படிப் போகிறது எழுத்திலக்கணம், தொல்காப்பியர் இப்படிப் பிரித்துப் பார்க்காத போதும்! இதுதான் இடைக் காலத்தின் சிந்தனையாய் இருக்கிறது. மெய்யெழுத்துகள், உயிருடன் - அவாளுடன் - சேருகையிலேயே உயிர் மெய் எழுத்துகளாகி, அவையும் தனித்தியங்கும் உயிர் பெறுகின்றன! எந்த மெய்யும் தனித்துப் பொருள் தராது! சூத்திரர்களுக்கென்று - நமக்காக ஒதுக்கப்பட்ட நம் தமிழ் எழுத்துகள் எவை தெரியுமா? ‘ழ்’ உம் ‘ள்’ உம்! இவையும், அவாள்களுடன் சேருகையிலேயே ‘ழ’, ‘ள’ எனும் உயிர்மெய் ஆகின்றன. நாய்போல் வாலாட்டிக் குரைக்க மட்டும்தான் அவற்றால் முடியும், வேண்டுமானால் ‘நன்றி’யுடன் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்! ஏதோவொரு கரிசனத்தில், சிறப்பு ‘ழ்’ அய் நம்மிடம் தள்ளியிருக்கிறார்கள்! ‘ழ’ கரப் பெருமை பீத்த வேண்டுமென்றால் ‘அவாள்’களின் அனுசரணை இருந்தால் தான் அதுவும் சாத்தியம்! சுயமரியாதை உள்ள எவரால் இதைப் பொறுக்க முடியும்? பெரியாருக்குச் சுயமரியாதை இருந்தது! பேசினார்... கோபத்தில், அறிவியலுக்கும், திராவிட இனத்திற்கும் எதிரான காட்டுமிராண்டித்தனம் என்பதாய் - எழுத்துகளைப் பாகுபடுத்தி, வருண ஒதுக்கீடு செய்து, புராண இதிகாசங்களுக்குள் புதையுண்டு கிடக்கிற - மொழியையே சாட வேண்டியதாகியது அவருக்கு! எதிலேதான் ஒரு சுயமரியாதையாளன் போய் முட்டிக் கொள்ள முடியும்?
பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்ட திருக்குறள்!
‘பிறப்பொக்கும்’ என்று பேசிய திருக்குறளுமே, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி - இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், சமூகத்தில் மீண்டும் பேசும் பொருளானது. அதுவரையுமே அதன் இருப்புப் பெரிதாக வெளிச்சப்படுத்தப்படவில்லை; பேசாப் பொருளாகவேதான் இருந்தது அது! அதை மீட்டெடுக்க வேண்டிய கடமை, தமிழியக்கத்திற்கு - திராவிட இயக்கத்திற்கு இயல்பாகவே வந்து சேர்ந்தது. அதன் கருத்துகளில், பல இடங்களில் பெரியாருக்கு மாறுபாடுகள் இருந்த போதும், அவர் பெரிதும் மதிக்கிற நூலாகவே திருக்குறள் இருந்தது.
சிலப்பதிகாரமும், அதே காலத்தில்தான் தமிழுணர் வாளர்களால் மீண்டும் மேலெழுந்து வெளிச்சத்திற்கு வந்திருந்தது. உரையாசிரியர்களின் காலம், சனாதனம் வேர்கொண்ட காலமாகவே இருந்திருந்தது. அதையொட்டிய இடைக்காலத்திலேதான் தமிழ் எழுத்துகளுக்கும் ஜாதியச் சாயம் பூசப்பட்டது. வருணாசிரமம், உணவு, உடை, உருவம் என்று அனைத்திலும் தன்னை மற்றவர்களிலிருந்து, அது வேறுபடுத்திக் கொண்டது! தமிழின், இலக்கிய இலக்கணங்கள், மதங்களின் பின்னால் போய்த் தம்மை மறைத்துக் கொள்ளப் பார்த்தன. அந்த இலக்கியங்கள், மனங்களைச் சலவைப்படுத்துவதாய், பாகுபாட்டைப் பளிச்சென எடுத்துக்காட்டும் கட்டமைப்பை அகவயமாய்ச் செய்து மகிழ்ந்திருந்தன. பக்தியிலக்கியங்கள் என்பதாய்ப் பெயர் சூட்டிக் கொண்டன. புனிதமாய் அவை புகழப்பட்டன. அபுனிதமானவர்கள் அரக்கர்களாகக் கட்டமைக்கப்பட்டனர். இப்படியாகவே, நாமறியாமலே, நம் மனம் அந்த அரசியலின் கட்டமைப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. மதம், மொழி, இலக்கியம், பண்பாடு எதுவாயிருந்தாலும், மனிதனைப் பாகுபடுத்தும்-பிளவுபடுத்தும் எதையும் அனுமதிக்க மறுக்கும் பாதுகாப்பாளியாய்த் தன் இறுதிவரையும் உறுதியுடன் இருந்தவர் பெரியார்!
திருஞான சம்பந்தர் தேவாரம் 3 ஆம் பதிகம் திருவாலவாயில் 3 ஆம் பாட்டில், ‘முட்டாள்களான, பேய்த்தன்மை வாய்ந்த சமண, பவுத்தர் ஆகிய கடவுள் மறுப்பாளர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்தா’ன்னு, விண்ணகத்தும் மண்ணகத்தும், நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனிடம் வேண்டுவதாக இருக்கிற பாடலை, சுயமரியாதைக்காரன் ஒருவன், எப்படி நினைத்துக் கொதிக்காமலிருக்க முடியும்? “இதற்கெல்லாமா கடவுளானவர் அருள் தருவார்?” என்று பெரியார் அன்று கேட்ட கேள்வி இன்னமும் பதிலளிக்கப்படாமலேதானே இருக்கிறது. இந்தக் கடவுளர்களுக்கு என்னதான் வேலை கொடுப்பதென்கிற விவஸ்தயே இல்லாமல்தானே இருக்கிறார்கள், நம் அடியார்கள்! அமண குண்டர்களை அழித்தொழிக்கவே, பக்தியின் போர்வையில் ஒரு காலத்தில் சைவத்துவமாய் - வைணவத்துவமாய் வைதீகம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அமணர்களுக்குக் கழுமரத்தைப் பரிசளித்துக் கொண்டிருந்த வரலாறு- ‘சமண ரத்தம்’, ‘சாமநத்த’மாய் மொழிதிரிந்து இன்றும் மதுரைக்கருகில் ஊராய் வாழ்ந்து நிற்பதை - அத்தனை எளிதில் எவருமே மறந்துபோய் விட முடியாது. ‘எவருடைய கருத்தையும் மறுப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அதை வெளிப்படுத்தவே கூடாது என்று சொல்வதற்கு எவருக்குமே உரிமை இல்லை’ என்பதுதான் பெரியாரின் நிலைப்பாடு!
பொதுவாழ்க்கையில் ஈடுபடுகிறவன் மானம், அவமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல்...
இப்படியாக, இலக்கியங்கள் மனிதர்களைப் பேதப்படுத்தி, கீழ்மைப்படுத்தி, மதங்களுக்குள் தங்கள் முகாம்களை வடிவமைத்துக் கொண்டிருந்தன. மொழிக் குறியீடுகள் அவைகளுக்குச் சாத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் பேதமற்ற மனிதச் சமநீதியைப் பேண நினைக்கிறவன் - ஒடுக்கப்பட்டிருக்கிற மக்களின் சமவுரிமைக்கான போர்க் குரலாய் ஒலிப்பவன் என்னதான் செய்வான் - என்னதான் செய்ய முடியும்? அவை, மனிதத்தன்மை இழந்த காட்டுமிராண்டித்தனமாகப் பார்க்கப்பட்டன கலகக்காரர் தோழர் பெரியாரால்! இன்று இந்துத்துவமாக, அதே அதிகார வெறியில், மக்களைப் பேதப்படுத்த, இந்து-இசுலாம் என்று புதுப்புது வன்பிரதிகளை நோக்கி மக்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்-படுகொலைகள் காட்டுமிராண்டித்தனமாக நமக்கு உறுத்தவில்லையா? ‘மக்கள், தேவர், நரகர் உயர்திணை’ என்கிற தொல்காப்பிய நூற்பாகூட பெரியாருக்குப் பகுத்தறிவிற்கு ஒவ்வாத, மதச் சிந்தனையைத் தூண்டுகிற விநோதமாகவே தோன்றியிருக்கிறது. மனிதனைப் பிளவுபடுத்திக் காலந்தோறும் அரியணையேறும் அரசியல் பிரதியான ஆத்திகத்திற்கு, எதிர்நிலை அரசியல் பிரதியாக, ஒடுக்கப்பட்ட மனிதனின் உரிமையை மதிக்கும் நாத்திகன் என்பதாய்ப் பெரியார் புரிந்து கொள்ளப்பட்டார்; பூச்சாண்டி என்பதாய் வாசிக்கப்பட்டுப் பழிக்கப்பட்டார். வறட்டு வாதியான அவருக்கென்ன கலையைப் பற்றித் தெரியும் என்று அவர்களால் ஏகடியம் பேசப்பட்டார்! பொதுவாழ்க்கையில் ஈடுபடுகிறவன் மானம், அவமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தன் நோக்கத்தில் பழுதுபடாமல் செயல்படவேண்டும் என்பதால், தன் பணியில் உறுதியுடன், எந்தப் பூச்சுமில்லாமல் பேசினார்; எழுதினார்; செயல்பட்டார் - அவர்தான் பெரியார்!
(தொடரும்)

No comments:
Post a Comment