சென்னை புத்தகக் காட்சியில் சாதனை படைக்கும் ”பெரியார்!” இந்த மாபெரும் வாசிப்புப் பழக்கத்திற்குப் பின்னணியில் திராவிடர் இயக்கம் பொதுமக்கள் கருத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

சென்னை புத்தகக் காட்சியில் சாதனை படைக்கும் ”பெரியார்!” இந்த மாபெரும் வாசிப்புப் பழக்கத்திற்குப் பின்னணியில் திராவிடர் இயக்கம் பொதுமக்கள் கருத்து!

சென்னை.மார்ச்,5. சென்னை புத்தகக் காட்சியில் இந்த ஆண்டும் பெரியாரியம் தொடர்பான புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.

45 ஆவது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரையிலுமாக பப்பாசி அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் அறிவு திருவிழாவில் இதில் 8 வரிசைகளில் 800 கடைகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தக வெளியீட்டுக்கு என்று தனியாக பெரிய, சிறிய அரங்குகள் தனியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல் அந்தந்த அரங்குகளிலேயே புத்தக வெளியீடுகளூம் நடைபெற்றன. கூடுதலாக பொருநை கண்காட்சிக்கூடம், உணவுக்கூடங்கள், தேநீர் கடைகள், சிற்றுண்டிக் கடைகள் என்று அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்துவிரோத புத்தகக் காட்சியாம்!புலம்புகிறார்கள் பிற்போக்குவாதிகள்!

இந்த அரங்குகளில் வரலாறு, ஜாதி, மதம், புதினம், சமையல், கணினி தொடர்பானவை, போட்டித் தேர்வுகளுக்கானவை, குழந்தைகளுக்கான புத்தகங்கள், அறிவியல் என எல்லா தலைப்புகளிலும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலும் பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் சார்ந்த முற்போக்குக் கருத்து சார்ந்த புத்தகங்களையே மக்கள் வாங்கிச்சென்றனர். குறிப்பாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அரங்கம், கருஞ்சட்டைப் பதிப்பகம், கருப்புப்பிரதிகள், சிந்தன், பேசாமொழி உள்ளிட்ட ஏராளமான அரங்குகளில் இளைய தலைமுறையினர் படையெடுப்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. அதற்கு நேர் மாறாக மதரீதியாக விற்பனை செய்யும் புத்தக அரங்கங்களை மக்கள் புறக்கணிப்பதையும் காண முடிந்தது. இதையொட்டி ”ஸ்ரீ” ஒரு வாட்ஸ் ஆப் பதிவு, இந்த புத்தகக் காட்சியையே, இந்துவிரோத புத்தகக் காட்சி என்று புலம்பியிருந்ததை குறிப்பிடலாம். அதிலும் குறிப்பாக பெரியாரின் புத்தகங்களைக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.

விற்பனையில் சாதனை படைக்கும் பெரியார் புத்தகங்கள்!

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் புத்தகக் காட்சியில் பேசு பொருளாக மாறினார். விடியல் பதிப்பகம் சார்பில் வெளியிட்டிருக்கக்கூடிய “நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்?”. நற்றிணைப் பதிப்பகத்தில் வெயிட்டிருக்கக்கூடிய, திராவிட கலைக்களஞ்சியம் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் நூல் வெளியீட்டு விழாவில் புகழப்பட்ட ஊடகவியலாளர் திருமா வேலன் எழுதிய, “இவர் தமிழர் இல்லையென்றல் எவர் தமிழர்?” புத்தகம்தான் இந்த புத்தகக் காட்சியின் கதாநாயகன்! நான்கு நாள்களுக்கு முன்பே, முதல் பதிப்பு முடிந்துவிட்டது. வருகிறவர்கள் ஏமாற்றத்தோடு, அங்கேயே முன்பதிவு செய்துவிட்டுத் திரும்புகின்றனர். இதுகுறித்து நற்றிணைப் பதிப்பகத்தின் பொறுப்பாளர் யுகனிடம் தொலை பேசியில் பேசியபோது, “நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. பெரிய புத்தகம், விலையும் அதிகம் ஆகவே பெரிதாக விற்பனை ஆகாது என்றிருந்தோம். இப்போது அவசரமாக அடுத்த பதிப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது என்று உற்சாகத்துடன் பதில் சொகிறார். எப்படியும் கடைசி இரண்டு நாட்களில் கொண்டு வந்துவிடுவோம் என்று உறுதியளித்தார். இது போக எப்போதும் போல, “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகமும் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. எந்தப் புத்தகங்களை வாங்கினாலும் அதில் ”பெண் ஏன் அடிமையானாள்?” ஒன்றிருக்கும். ஒரு புதிய அனுபவமாக, அடையாற்றில் உள்ள மைண்ட் ஜோன் அமைப்பின் மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் சுனில் குமார், உளவியல் பிரச்சினை காரணமாக தங்களிடம் வரும் பெண்களூக்கு இந்தப் புத்தகத்தை படிப்பதற்காகக் கொடுக்கிறோம் என்று குறிப்பிட்டுவிட்டு 50 புத்தகங்களை வாங்கிச் சென்றார். பெரியார் வலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் பெரும்பாலான மக்கள், இந்த மாபெரும் வாசிப்புப் பழக்கத்திற்கு பின்னணியில் திராவிடர் இயக்கம் இருப்பதை மறக்கக்கூடாது என்று நன்றியுணர்ச்சியோடு குறிப்பிடுகின்றனர்.

குடும்பத்தினருடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ள மூன்று அரங்குகளில் பெரியார் சிலை!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், கருஞ்சட்டைப் பதிப்பகம், சிலை.காம் ஆகிய மூன்று அரங்குகளில் ஆளுயர பெரியார் சிலை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் குடும்பம், குடும்பமாக ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்வதில் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், சிலை.காம் இரண்டிலும் பெரியார் சிலையும் விற்பனைக்குக் கிடைக்கிறது. சிலை.காமில் கூடுதலாக 1,000 ரூபாயிலிருந்து 3,00,000 ரூபாய் வரையிலும் பெரியார் சிலை விறபனைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் 6 ஆம் தேதியுடன் இந்த அறிவுத் திருவிழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment