இசைக்கு மொழி தடையில்லை என்போர் - கலைக்கு மட்டும் மதத் தடை ஏன்? கேரள கோவிலில் இந்து அல்லாத பரத நாட்டியக் கலைஞர் நிகழ்ச்சிக்குத் தடை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

இசைக்கு மொழி தடையில்லை என்போர் - கலைக்கு மட்டும் மதத் தடை ஏன்? கேரள கோவிலில் இந்து அல்லாத பரத நாட்டியக் கலைஞர் நிகழ்ச்சிக்குத் தடை!

 திருச்சூர், மார்ச் 29  கேரளாவின் திருச்சூர் மாவட் டத்தில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல் மாணிக்யம் கோயிலில், இந்து அல்லாதவர் என்பதால் கோவில் வளாகத்தில் நடத்திட திட்ட மிடப்பட்ட பரதநாட்டிய  நிகழ்ச்சி தடை செய்யப் பட்டுள்ளது என்று பரத நாட்டியக் கலைஞர் மான்சியா வி.பி குற்றம் சாட்டியுள்ளார்.

பரத நாட்டியத்தில் பி.எச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள மான்சியா, முஸ்லி மாகப்  பிறந்து வளர்ந்த போதிலும், பாரம்பரிய நடனக் கலைஞராக இருந்ததற்காக இஸ்லாமிய மதகுருக்களின் கோபத்தையும், புறக்கணிப்பையும் எதிர்கொண்டார்.

மான்சியா தனது முகநூல் பதிவில், ''எனது நடன நிகழ்ச்சி ஏப்ரல் 21 ஆம் தேதி கோவில் வளாகத்தில் நடைபெற இருந்தது. நான் இந்து அல்லாதவர் என்பதால் கோவிலில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று கோவில் அலுவலக அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார். ஒரு நல்ல நடனக் கலைஞரா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், மதத்தின் அடிப்படையில்தான் அனைத்து நிலைகளும் ஆய்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, திருமணத்திற்குப் பிறகு நான் இந்துவாக மாறினேனா என்ற கேள்வியையும் எதிர்கொண்டேன். (அவர் இசையமைப்பாளர் ஷியாம் கல்யாணை மணந்தார்). எனக்கு மதம் இல்லை, நான் எங்கு செல்ல வேண்டும்என்று மான்சியா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் உள்ள குருவாயூர் சிறீ கிருஷ்ணா கோவிலில் இந்து  அல்லாதவர் என்ற காரணத்திற்காக தடை செய்யப் பட்டதாகக் கூறப்பட்டதால், மத அடிப்படையிலான நிகழ்ச்சியிலிருந்து இத்தகைய விலக்கு தனக்கு முதல் அனுபவம் அல்ல என்றும் மான்சியா கூறினார். “கலை மற்றும் கலைஞர்கள் மதம், ஜாதியால் பின்னிப் பிணைந்துள்ளனர். ஒரு மதத்திற்குத் தடை விதிக்கப் பட்டால், அது மற்றொரு மதத்தின் ஏகபோகமாக மாறுகிறது. இந்த அனுபவம் எனக்குப் புதிதல்ல. நமது மதச்சார்பற்ற கேரளாவிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை நினைவூட்டவே அதை இங்கே பதிவு செய்கிறேன்என்று மான்சியா குறிப் பிட்டுள்ளார்.

இது குறித்து கூடல்மாணிக்யம் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரதீப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​''கோவிலின் தற்போதைய பாரம்பரியத்தின்படி, இந்துக்கள் மட்டுமே கோவிலின் வளாகத்திற்குள் நிகழ்ச்சிகளை நடத்த முடியும்'' என்றார். ''இந்தக் கோவில் வளாகம் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந் துள்ளது. கோவில் வளாகத்தில் 10 நாள்கள் திருவிழா நடக்கும். விழாவின்போது சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். நமது நெறிமுறைகளின்படி, கலைஞர்களை அவர்கள் இந்துக்களா அல்லது இந்து அல்லாதவர்களா என்று கேட்க வேண்டும். மான்சியா தனக்கு மதம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்திருந்தார். அத னால்,  அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. கோவிலில் தற்போதுள்ள வழக்கப்படிதான் செய்துள்ளோம்என்று கூறினார்.

No comments:

Post a Comment